நான்காம்-திருமுறை

030 நங்கையைப் பாகம்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் :  கழிப்பாலை

திருச்சிற்றம்பலம்

 

நங்கையைப் பாகம் வைத்தார் 

  ஞானத்தை நவில வைத்தார்

அங்கையில் அனலும் வைத்தார் 

  ஆனையின் உரிவை வைத்தார்

தங்கையின் யாழும் வைத்தார் 

  தாமரை மலரும் வைத்தார்

கங்கையைச் சடையுள் வைத்தார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  1 

 

 

விண்ணினை விரும்ப வைத்தார் 

  வேள்வியை வேட்க வைத்தார்

பண்ணினைப் பாட வைத்தார் 

  பத்தர்கள் பயில வைத்தார்

மண்ணினைத் தாவ நீண்ட 

  மாலினுக் கருளும் வைத்தார்

கண்ணினை நெற்றி வைத்தார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  2 

 

 

வாமனை வணங்க வைத்தார் 

  வாயினை வாழ்த்த வைத்தார்

சோமனைச் சடைமேல் வைத்தார் 

  சோதியுட் சோதி வைத்தார்

ஆமனை யாட வைத்தார் 

  அன்பெனும் பாசம் வைத்தார்

காமனைக் காய்ந்த கண்ணார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  3 

 

 

அரியன அங்கம் வேதம் 

  அந்தணர்க் கருளும் வைத்தார்

பெரியன புரங்கள் மூன்றும் 

  பேரழ லுண்ண வைத்தார்

பரியதீ வண்ண ராகிப் 

  பவளம்போல் நிறத்தை வைத்தார்

கரியதோர் கண்டம் வைத்தார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  4 

 

 

கூரிருள் கிழிய நின்ற 

  கொடுமழுக் கையில் வைத்தார்

பேரிருள் கழிய மல்கு 

  பிறைபுனற் சடையுள் வைத்தார்

ஆரிருள் அண்டம் வைத்தார் 

  அறுவகைச் சமயம் வைத்தார்

காரிருள் கண்டம் வைத்தார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  5 

 

 

உட்டங்கு சிந்தை வைத்தார் 

  உள்குவார்க் குள்ளம் வைத்தார்

விட்டங்கு வேள்வி வைத்தார் 

  வெந்துயர் தீர வைத்தார்

நட்டங்கு நடமும் வைத்தார் 

  ஞானமு நவில வைத்தார்

கட்டங்கந் தோண்மேல் வைத்தார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  6 

 

 

ஊனப்பே ரொழிய வைத்தார் 

  ஓதியே உணர வைத்தார்

ஞானப்பேர் நவில வைத்தார் 

  ஞானமு நடுவும் வைத்தார்

வானப்பே ராறும் வைத்தார்

  வைகுந்தற் காழி வைத்தார்

கானப்பேர் காதல் வைத்தார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே  7 

 

 

கொங்கினும் அரும்பு வைத்தார் 

  கூற்றங்கள் கெடுக்க வைத்தார்

சங்கினுள் முத்தம் வைத்தார் 

  சாம்பலும் பூச வைத்தார்

அங்கமும் வேதம் வைத்தார் 

  ஆலமும் உண்டு வைத்தார்

கங்குலும் பகலும் வைத்தார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  8 

 

 

சதுர்முகன் தானும் மாலுந் 

  தம்மிலே இகலக் கண்டு

எதிர்முக மின்றி நின்ற 

  எரியுரு வதனை வைத்தார்

பிதிர்முகன் காலன் றன்னைக் 

  கால்தனிற் பிதிர வைத்தார்

கதிர்முகஞ் சடையில் வைத்தார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.  9 

 

 

மாலினாள் நங்கை அஞ்ச 

  மதிலிலங் கைக்கு மன்னன்

வேலினான் வெகுண் டெடுக்கக் 

  காண்டலும் வேத நாவன்

நூலினான் நோக்கி நக்கு

  நொடிப்பதோ ரளவில் வீழக்

காலினால் ஊன்றி யிட்டார் 

  கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்