நான்காம்-திருமுறை

027 மடக்கினார் புலியின்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் :  அதிகை வீரட்டானம்

திருச்சிற்றம்பலம்

 

மடக்கினார் புலியின் தோலை 

  மாமணி நாகங் கச்சா

முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்

  மொய்சடைக் கற்றை தன்மேல்

தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் 

  துடியிடைப் பரவை யல்குல்

அடக்கினார் கெடில வேலி 

  அதிகைவீ ரட்ட னாரே.  1 

 

 

சூடினார் கங்கை யாளைச் 

  சூடிய துழனி கேட்டங்

கூடினாள் நங்கை யாளும் 

  ஊடலை ஒழிக்க வேண்டிப்

பாடினார் சாம வேதம் 

  பாடிய பாணி யாலே

ஆடினார் கெடில வேலி 

  அதிகைவீ ரட்ட னாரே.  2 

 

 

கொம்பினார் குழைத்த வேனற் 

  கோமகன் கோல நீர்மை

நம்பினார் காண லாகா 

  வகையதோர் நடலை செய்தார்

வெம்பினார் மதில்கள் மூன்றும் 

  வில்லிடை எரித்து வீழ்த்த

அம்பினார் கெடில வேலி 

  அதிகைவீ ரட்ட னாரே.  3 

 

 

மறிபடக் கிடந்த கையர் 

  வளரிள மங்கை பாகஞ்

செறிபடக் கிடந்த செக்கர்ச் 

  செழுமதிக் கொழுந்து சூடிப்

பொறிபடக் கிடந்த நாகம் 

  புகையுமிழ்ந் தழல வீக்கிக்

கிறிபட நடப்பர் போலுங் 

  கெடிலவீ ரட்ட னாரே.  4 

 

 

நரிவரால் கவ்வச் சென்று 

  நற்றசை இழந்த தொத்த

தெரிவரால் மால்கொள் சிந்தை 

  தீர்ப்பதோர் சிந்தை செய்வார்

வரிவரால் உகளுந் தெண்ணீர்க் 

  கழனிசூழ் பழன வேலி

அரிவரால் வயல்கள் சூழ்ந்த 

  அதிகைவீ ரட்ட னாரே.  5 

 

 

புள்ளலைத் துண்ட ஓட்டில் 

  உண்டுபோய் பலாசங் கொம்பின்

சுள்ளலைச் சுடலை வெண்ணீ 

  றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்

துள்ளலைப் பாகன் றன்னைத் 

  தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை

அள்ளலைக் கடப்பித் தாளும் 

  அதிகைவீ ரட்ட னாரே.  6 

 

 

நீறிட்ட நுதலர் வேலை 

  நீலஞ்சேர் கண்டர் மாதர்

கூறிட்ட மெய்ய ராகிக் 

  கூறினார் ஆறும் நான்குங்

கீறிட்ட திங்கள் சூடிக் 

  கிளர்தரு சடையி னுள்ளால்

ஆறிட்டு முடிப்பர் போலும் 

  அதிகைவீ ரட்ட னாரே.  7 

 

 

காணிலார் கருத்தில் வாரார் 

  திருத்தலார் பொருத்த லாகார்

ஏணிலார் இறப்பும் இல்லார் 

  பிறப்பிலார் துறக்க லாகார்

நாணிலார் ஐவ ரோடும் 

  இட்டெனை விரவி வைத்தார்

ஆணலார் பெண்ணும் அல்லார் 

  அதிகைவீ ரட்ட னாரே.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

தீர்த்தமா மலையை நோக்கிச் 

  செருவலி அரக்கன் சென்று

பேர்த்தலும் பேதை அஞ்சப் 

  பெருவிர லதனை யூன்றிச்

சீர்த்தமா முடிகள் பத்துஞ் 

  சிதறுவித் தவனை யன்று

ஆர்த்தவாய் அலற வைத்தார் 

  அதிகைவீ ரட்ட னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்