நான்காம்-திருமுறை

015 பற்றற் றார்சேற்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

பற்றற் றார்சேர் பழம்பதியைப் 

  பாசூர் நிலாய பவளத்தைச்

சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் 

  தீண்டற் கரிய திருவுருவை

*வெற்றி யூரில் விரிசுடரை 

  விமலர் கோனைத் திரைசூழ்ந்த

ஒற்றி யூரெம் உத்தமனை 

  உள்ளத் துள்ளே வைத்தேனே. 1 

 

 

ஆனைக் காவில் அணங்கினை 

  ஆரூர் நிலாய அம்மானைக்

கானப் பேரூர்க் கட்டியைக் 

  கானூர் முளைத்த கரும்பினை

வானப் பேரார் வந்தேத்தும் 

  வாய்மூர் வாழும் வலம்புரியை

மானக் கயிலை மழகளிற்றை 

  மதியைச் சுடரை மறவேனே.  2 

 

 

மதியங் கண்ணி ஞாயிற்றை 

  மயக்கந் தீர்க்கும் மருந்தினை

அதிகை மூதூர் அரசினை 

  ஐயா றமர்ந்த ஐயனை

விதியைப் புகழை வானோர்கள் 

  வேண்டித் தேடும் விளக்கினை

நெதியை ஞானக் கொழுந்தினை 

  நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.  3 

 

 

புறம்ப யத்தெம் முத்தினைப் 

  புகலூர் இலங்கு பொன்னினை

*உறந்தை யோங்கு சிராப்பள்ளி 

  உலகம் விளக்கு ஞாயிற்றைக்

கறங்கு மருவிக் கழுக்குன்றிற் 

  காண்பார் காணுங் கண்ணானை

அறஞ்சூழ் அதிகை வீரட்டத் 

  தரிமான் ஏற்றை அடைந்தேனே. 4 

 

 

கோலக் காவிற் குருமணியைக் 

  *குடமூக் குறையும் விடமுணியை

ஆலங் காட்டி லந்தேனை 

  அமரர் சென்னி யாய்மலரைப்

பாலிற் றிகழும் பைங்கனியைப் 

  பராய்த் துறையெம் பசும்பொன்னைச்

சூலத் தானைத் துணையிலியைத் 

  தோளைக் குளிரத் தொழுதேனே.  5 

 

 

மருக லுறையுமா ணிக்கத்தை 

  வலஞ் சுழியின் மாலையை

கருகா வூரிற் கற்பகத்தைக் 

  காண்டற் கரிய கதிரொளியைப்

பெருவே ளூரெம் பிறப்பிலியைப் 

  பேணு வார்கள் பிரிவரிய

திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் 

  சிந்தை யுள்ளே வைத்தேனே.  6 

 

 

எழிலார் இராச சிங்கத்தை 

  இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்

குழலார் கோதை வரைமார்பிற் 

  குற்றா லத்தெங் கூத்தனை

நிழலார் சோலை நெடுங்களத்து 

  நிலாய நித்த மணாளனை

அழலார் வண்ணத் தம்மானை 

  அன்பி லணைத்து வைத்தேனே.  7 

 

 

மாலைத் தோன்றும் வளர்மதியை 

  மறைக்காட் டுறையும் மணாளனை

ஆலைக் கரும்பி னின்சாற்றை 

  அண்ணா மலையெம் அண்ணலைச்

சோலைத் துருத்தி நகர்மேய 

  சுடரிற் றிகழுந் துளக்கிலியை

மேலை வானோர் பெருமானை 

  விருப்பால் விழுங்கி யிட்டேனே.  8 

 

 

சோற்றுத் துறையெஞ் சோதியைத் 

  துருத்தி மேய தூமணியை

ஆற்றிற் பழனத் தம்மானை 

  ஆல வாயெம் மருமணியை

நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் 

  நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்

தோற்றக் கடலை அடலேற்றைத் 

  தோளைக் குளிரத் தொழுதேனே.  9 

 

 

புத்தூ ருறையும் புனிதனைப் 

  பூவ ணத்தெம் போரேற்றை

வித்தாய் மிழலை முளைத்தானை 

  வேள்விக் குடியெம் வேதியனைப்

பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் 

  பொதியில் மேய புராணனை

வைத்தேன் என்றன் மனத்துள்ளே 

  *மாத்தூர் மேய மருந்தையே. 10 

 

 

முந்தித் தானே முளைத்தானை 

  மூரி வெள்ளே றூர்ந்தானை

அந்திச் செவ்வான் படியானை 

  அரக்க னாற்றல் அழித்தானைச்

சிந்தை வெள்ளப் புனலாட்டிச் 

  செஞ்சொன் மாலை யடிச்சேர்த்தி

எந்தை பெம்மான் என்னெம்மான் 

  என்பார் பாவ நாசமே.  11 

 

திருச்சிற்றம்பலம்