நான்காம்-திருமுறை

013 விடகிலேன் அடிநாயேன்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

விடகிலேன் அடிநாயேன்

  வேண்டியக்கால் யாதொன்றும்

இடகிலேன் அமணர்கள்தம்

  அறவுறைகேட் டலமலந்தேன்

தொடர்கின்றேன் உன்னுடைய

  தூமலர்ச்சே வடிகாண்பான்

அடைகின்றேன் ஐயாறர்க்

  காளாய்நான் உய்ந்தேனே.  1 

 

 

செம்பவளத் திருவுருவர்

  திகழ்சோதி குழைக்காதர்

கொம்பமருங் கொடிமருங்குற்

  கோல்வளையா ளொருபாகர்

வம்பவிழும் மலர்க்கொன்றை

  வளர்சடைமேல் வைத்துகந்த

அம்பவள ஐயாறர்க்

  காளாய்நான் உய்ந்தேனே.  2 

 

 

நணியானே சேயானே

  நம்பானே செம்பொன்னின்

துணியானே தோலானே

  சுண்ணவெண் ணீற்றானே

மணியானே வானவர்க்கு

  மருந்தாகிப் பிணிதீர்க்கும்

அணியானே ஐயாறர்க்

  காளாய்நான் உய்ந்தேனே.  3 

 

 

ஊழித்தீ யாய்நின்றாய்

  உள்குவார் உள்ளத்தாய்

வாழித்தீ யாய்நின்றாய்

  வாழ்த்துவார் வாயானே

பாழித்தீ யாய்நின்றாய்

  படர்சடைமேற் பனிமதியம்

ஆழித்தீ ஐயாறார்க்

  காளாய்நான் உய்ந்தேனே.  4 

 

 

சடையானே சடையிடையே

  தவழுந்தண் மதியானே

விடையானே விடையேறிப்

  புரமெரித்த வித்தகனே

உடையானே உடைதலைகொண்

  டூரூருண் பலிக்குழலும்

அடையானே ஐயாறர்க்

  காளாய்நான் உய்ந்தேனே.  5 

 

 

நீரானே தீயானே

  நெதியானே கதியானே

ஊரானே உலகானே

  உடலானே உயிரானே

பேரானே பிறைசூடீ

  பிணிதீர்க்கும் பெருமானென்

றாராத ஐயாறர்க்

  காளாய்நான் உய்ந்தேனே.  6 

 

 

கண்ணானாய் மணியானாய்

  கருத்தானாய் *அருத்தானாய்

எண்ணானாய் எழுத்தானாய்

  எழுத்தினுக்கோர் இயல்பானாய்

விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே

அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. 

 

* அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின

எனப் பொருள்படுகின்றது.  7 

 

 

மின்னானாய் உருமானாய்

  வேதத்தின் பொருளானாய்

பொன்னானாய் மணியானாய்

  பொருகடல்வாய் முத்தானாய்

நின்னானார் இருவர்க்குங்

  காண்பரிய நிமிர்சோதி

அன்னானே ஐயாறர்க்

  காளாய்நான் உய்ந்தேனே.  8 

 

 

முத்திசையும் புனற்பொன்னி

  மொய்பவளங் கொழித்துந்தப்

பத்தர்பலர் நீர்மூழ்கிப்

  பலகாலும் பணிந்தேத்த

எத்திசையும் வானவர்கள்

  எம்பெருமா னெனஇறைஞ்சும்

அத்திசையாம் ஐயாறர்க்

  காளாய்நான் உய்ந்தேனே.  9 

 

 

கருவரைசூழ் கடலிலங்கைக்

  கோமானைக் கருத்தழியத்

திருவிரலால் உதகரணஞ்

  செய்துகந்த சிவமூர்த்தி

பெருவரைசூழ் வையகத்தார்

  பேர்நந்தி என்றேத்தும்

அருவரைசூழ் ஐயாறர்க்

  காளாய்நான் உய்ந்தேனே. 10

 

திருச்சிற்றம்பலம்