நான்காம்-திருமுறை

012 சொன்மாலை பயில்கின்ற

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : பழனம்

திருச்சிற்றம்பலம்

 

சொன்மாலை பயில்கின்ற

  குயிலினங்காள் சொல்லீரே

பன்மாலை வரிவண்டு

  பண்மிழற்றும் பழனத்தான்

முன்மாலை நகுதிங்கள்

  முகிழ்விளங்கு முடிச்சென்னிப்

பொன்மாலை மார்பன்என்

  புதுநலமுண் டிகழ்வானோ.  1 

 

 

கண்டகங்காள் முண்டகங்காள்

  கைதைகாள் நெய்தல்காள்

பண்டரங்க வேடத்தான்

  பாட்டோ வாப் பழனத்தான்

வண்டுலாந் தடமூழ்கி

  மற்றவனென் தளிர்வண்ணங்

கொண்டநாள் தானறிவான்

  குறிக்கொள்ளா தொழிவானோ.  2 

 

 

மனைக்காஞ்சி* இளங்குருகே

  மறந்தாயோ மதமுகத்த

பனைக்கைமா வுரிபோர்த்தான்

  பலர்பாடும் பழனத்தான்

நினைக்கின்ற நினைப்பெல்லாம்

  உரையாயோ நிகழ்வண்டே

சுனைக்குவளை மலர்க்கண்ணாள்

  சொற்றூதாய்ச் சோர்வாளோ.   3 

 

 

புதியையாய் இனியையாம்

  பூந்தென்றால் புறங்காடு

பதியாவ திதுவென்று

  பலர்பாடும் பழனத்தான்

மதியாதார் வேள்விதனை

  மதித்திட்ட மதிகங்கை

விதியாளன் என்னுயிர்மேல்

  விளையாடல் விடுத்தானோ.  4 

 

 

மண்பொருந்தி வாழ்பவர்க்கும்

  மாதீர்த்த வேதியர்க்கும்

விண்பொருந்து தேவர்க்கும்

  வீடுபேறாய் நின்றானைப்

பண்பொருந்த இசைபாடும்

  பழனஞ்சேர் அப்பனையென்

கண்பொருந்தும் போழ்தத்துங்

  கைவிடநான் கடவேனோ.  5 

 

 

பொங்கோத மால்கடலிற்

  புறம்புறம்போய் இரைதேருஞ்

செங்கால்வெண் மடநாராய்

  செயற்படுவ தறியேன்நான்

அங்கோல வளைகவர்ந்தான்

  அணிபொழில்சூழ் பழனத்தான்

தங்கோல நறுங்கொன்றைத்

  தாரருளா தொழிவானோ.  6 

 

 

துணையார முயங்கிப்போய்த்

  துறைசேரும் மடநாராய்

பணையார வாரத்தான்

  பாட்டோ வாப் பழனத்தான்

கணையார இருவிசும்பிற்

  கடியரணம் பொடிசெய்த

இணையார மார்பன்என்

  எழில்நலமுண் டிகழ்வானோ.  7 

 

 

கூவைவாய்* மணிவரன்றிக்

  கொழித்தோடுங் **காவிரிப்பூம்

பாவைவாய் முத்திலங்கப்

  பாய்ந்தாடும் பழனத்தான்

கோவைவாய் மலைமகள்கோன்

  கொல்லேற்றின் கொடியாடைப்

பூவைகாள் மழலைகாள்

  போகாத பொழுதுளதே. 8 

 

 

புள்ளிமான் பொறியரவம்

  புள்ளுயர்த்தான் மணிநாகப்

பள்ளியான் தொழுதேத்த

  இருக்கின்ற பழனத்தான்

உள்ளுவார் வினைதீர்க்கும்

  என்றுரைப்பர் உலகெல்லாங்

கள்ளியேன் நான்இவற்கென்

  கனவளையுங் கடவேனோ.  9 

 

 

வஞ்சித்தென் வளைகவர்ந்தான்

  வாரானே யாயிடினும்

பஞ்சிக்காற் சிறகன்னம்

  பரந்தார்க்கும் பழனத்தான்

அஞ்சிப்போய்க் கலிமெலிய

  அழலோம்பும் அப்பூதி

குஞ்சிப்பூ வாய்நின்ற

  சேவடியாய் கோடியையே. 10

 

திருச்சிற்றம்பலம்