நான்காம்-திருமுறை

010 முளைக்கதிர் இளம்பிறை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : அதிகை வீரட்டானம்

திருச்சிற்றம்பலம்

 

முளைக்கதிர் இளம்பிறை

  மூழ்க வெள்ளநீர்

வளைத்தெழு சடையினர்

  மழலை வீணையர்

திளைத்ததோர் மான்மறிக்

  கையர் செய்யபொன்

கிளைத்துழித் தோன்றிடுங்

  கெடில வாணரே.  1 

 

 

ஏறினர் ஏறினை

  ஏழை தன்னொரு

கூறினர் கூறினர்

  வேதம் அங்கமும்

ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்

கீறின வுடையினர் கெடில வாணரே.  2 

 

 

விடந்திகழ் கெழுதரு

  மிடற்றர் வெள்ளைநீ

றுடம்பழ கெழுதுவர்

  முழுதும் வெண்ணிலாப்

படர்ந்தழ கெழுதரு

  சடையிற் பாய்புனல்

கிடந்தழ கெழுதிய

  கெடில வாணரே.  3 

 

 

விழுமணி அயிலெயிற்

  றம்பு வெய்யதோர்

கொழுமணி நெடுவரை

  கொளுவிக் கோட்டினார்

செழுமணி மிடற்றினர்

  செய்யர் வெய்யதோர்

கெழுமணி அரவினர்

  கெடில வாணரே.  4 

 

 

குழுவினர் தொழுதெழும்

  அடியர் மேல்வினை

தழுவின கழுவுவர்

  பவள மேனியர்

மழுவினர் மான்மறிக்

  கையர் மங்கையைக்

கெழுவின யோகினர்

  கெடில வாணரே.  5 

 

 

அங்கையில் அனலெரி

  யேந்தி யாறெனும்

மங்கையைச் சடையிடை

  மணப்பர் மால்வரை

நங்கையைப் பாகமு

  நயப்பர் தென்றிசைக்

கெங்கைய தெனப்படுங்

  கெடில வாணரே.  6 

 

 

கழிந்தவர் தலைகல

  னேந்திக் காடுறைந்

திழிந்தவ ரொருவரென்

  றெள்க வாழ்பவர்

வழிந்திழி மதுகர

  மிழற்ற மந்திகள்

கிழிந்ததேன் நுகர்தருங்

  கெடில வாணரே.  7 

 

 

கிடந்தபாம் பருகுகண்

  டரிவை பேதுறக்

கிடந்தபாம் பவளையோர்

  மயிலென் றையுறக்

கிடந்தநீர்ச் சடைமிசைப்

  பிறையும் ஏங்கவே

கிடந்துதான் நகுதலைக்

  கெடில வாணரே.  8 

 

 

வெறியுறு விரிசடை

  புரள வீசியோர்

பொறியுறு புலியுரி

  யரைய தாகவும்

நெறியுறு குழலுமை

  பாக மாகவுங்

கிறிபட உழிதர்வர்

  கெடில வாணரே.  9 

 

 

பூண்டதேர் அரக்கனைப்

  பொருவில் மால்வரைத்

தூண்டுதோ ளவைபட

  அடர்த்த தாளினார்

ஈண்டுநீர்க் கமலவாய்

  மேதி பாய்தரக்

கீண்டுதேன் சொரிதருங்

  கெடில வாணரே. 10

 

திருச்சிற்றம்பலம்