நான்காம்-திருமுறை

007 கரவாடும் வன்னெஞ்சர்க்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

 

கரவாடும் வன்னெஞ்சர்க்

  கரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை

  விடையேறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ

  அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை

  என்மனத்தே வைத்தேனே.  1 

 

 

தேனோக்குங் கிளிமழலை

  உமைகேள்வன் செழும்பவளந்

தானோக்குந் திருமேனி

  தழலுருவாஞ் சங்கரனை

வானோக்கும் வளர்மதிசேர்

  சடையானை வானோர்க்கும்

ஏனோர்க்கும் பெருமானை

  என்மனத்தே வைத்தேனே.  2 

 

 

கைப்போது மலர்தூவிக்

  காதலித்து வானோர்கள்

முப்போதும் முடிசாய்த்துத்

  தொழநின்ற முதல்வனை

அப்போது மலர்தூவி

  ஐம்புலனும் அகத்தடக்கி

எப்போதும் இனியானை

  என்மனத்தே வைத்தேனே.  3 

 

 

அண்டமாய் ஆதியாய்

  அருமறையோ டைம்பூதப்

பிண்டமாய் உலகுக்கோர்

  பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்

தொண்டர்தாம் மலர்தூவிச்

  சொன்மாலை புனைகின்ற

இண்டைசேர் சடையானை

  என்மனத்தே வைத்தேனே.  4 

 

 

ஆறேறு சடையானை

  ஆயிரம்பே ரம்மானைப்

பாறேறு படுதலையிற்

  பலிகொள்ளும் பரம்பரனை

நீறேறு திருமேனி

  நின்மலனை நெடுந்தூவி

ஏறேறும் பெருமானை

  என்மனத்தே வைத்தேனே.  5 

 

 

தேசனைத் தேசங்கள்

  தொழநின்ற திருமாலாற்

பூசனைப் பூசனைகள்

  உகப்பானைப் பூவின்கண்

வாசனை மலைநிலநீர்

  தீவளிஆ காசமாம்

ஈசனை எம்மானை

  என்மனத்தே வைத்தேனே.  6 

 

 

நல்லானை நல்லான

  நான்மறையோ டாறங்கம்

வல்லானை வல்லார்கள்

  மனத்துறையும் மைந்தனைச்

சொல்லானைச் சொல்லார்ந்த

  பொருளானைத் துகளேதும்

இல்லானை எம்மானை

  என்மனத்தே வைத்தேனே.  7 

 

 

விரித்தானை நால்வர்க்கு

  வெவ்வேறு வேதங்கள்

புரித்தானைப் பதஞ்சந்திப்

  பொருளுருவாம் புண்ணியனைத்

தரித்தானைக் கங்கைநீர்

  தாழ்சடைமேல் மதில்மூன்றும்

எரித்தானை எம்மானை

  என்மனத்தே வைத்தேனே.  8 

 

 

ஆகம்பத் தரவணையான்

  அயன்அறிதற் கரியானைப்

பாகம்பெண் ணாண்பாக

  மாய்நின்ற பசுபதியை

மாகம்ப மறையோதும்

  இறையானை மதிற்கச்சி

ஏகம்ப மேயானை

  என்மனத்தே வைத்தேனே.  9 

 

 

அடுத்தானை உரித்தானை

  அருச்சுனற்குப் பாசுபதங்

கொடுத்தானைக் குலவரையே

  சிலையாகக் கூரம்பு

தொடுத்தானைப் புரமெரியச்

  சுனைமல்கு கயிலாயம்

எடுத்தானைத் தடுத்தானை

  என்மனத்தே வைத்தேனே. 10

 

திருச்சிற்றம்பலம்