நான்காம்-திருமுறை

004 பாடிளம் பூதத்தி

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

பாடிளம் பூதத்தி னானும் 

  பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்

கூடிள மென்முலை யாளைக் 

  கூடிய கோலத்தி னானும்

ஓடிள வெண்பிறை யானும் 

  ஒளிதிகழ் சூலத்தி னானும்

ஆடிளம் பாம்பசைத் தானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  1 

 

 

நரியைக் குதிரைசெய் வானும் 

  நரகரைத் தேவுசெய் வானும்

விரதங்கொண் டாடவல் லானும் 

  விச்சின்றி நாறுசெய் வானும்

முரசதிர்ந் தானை முன்னோட 

  முன்பணிந் தன்பர்கள் ஏத்த

அரவரைச் சாத்திநின் றானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  2 

 

 

நீறுமெய் பூசவல் லானும் 

  நினைப்பவர் நெஞ்சத்து ளானும்

ஏறுகந் தேறவல் லானும் 

  எரிபுரை மேனியி னானும்

நாறு கரந்தையி னானும் 

  நான்மறைக் கண்டத்தி னானும்

ஆறு சடைக்கரந் தானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  3 

 

 

கொம்புநல் வேனி லவனைக் 

  குழைய முறுவல்செய் தானுஞ்

செம்புனல் கொண்டெயில் மூன்றுந் 

  தீயெழக் கண்சிவந் தானும்

வம்புநற் கொன்றையி னானும் 

  வாட்கண்ணி வாட்டம தெய்த

அம்பர ஈருரி யானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  4 

 

 

ஊழி யளக்கவல் லானும் 

  உகப்பவர் உச்சியுள் ளானுந்

தாழிளஞ் செஞ்சடை யானுந் 

  தண்ணமர் திண்கொடி யானுந்

தோழியர் தூதிடை யாடத் 

  தொழுதடி யார்கள் வணங்க

ஆழி வளைக்கையி னானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  5 

 

 

ஊர்திரை வேலையுள் ளானும் 

  உலகிறந் தொண்பொரு ளானுஞ்

சீர்தரு பாடலுள் ளானுஞ் 

  செங்கண் விடைக்கொடி யானும்

வார்தரு பூங்குழ லாளை 

  மருவி யுடன்வைத் தவனும்

ஆர்திரை நாளுகந் தானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  6 

 

 

தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத் 

  தோன்றி யருளவல் லானுங்

கழற்கங்கை பன்மலர் கொண்டு 

  காதல் கனற்றநின் றானுங்

குழற்கங்கை யாளையுள் வைத்துக் 

  கோலச் சடைக்கரந் தானும்

அழற்கங்கை ஏந்தவல் லானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  7 

 

 

ஆயிரந் தாமரை போலும் 

  ஆயிரஞ் சேவடி யானும்

ஆயிரம் பொன்வரை போலும் 

  ஆயிரந் தோளுடை யானும்

ஆயிர ஞாயிறு போலும் 

  ஆயிர நீண்முடி யானும்

ஆயிரம் பேருகந் தானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  8 

 

 

வீடரங் காநிறுப் பானும் 

  விசும்பினை வேதி தொடர

ஓடரங் காகவைத் தானும் 

  ஓங்கியொ ரூழியுள் ளானுங்

காடரங் காமகிழ்ந் தானுங் 

  காரிகை யார்கள் மனத்துள்

ஆடரங் கத்திடை யானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே.  9 

 

 

பையஞ் சுடர்விடு நாகப் 

  பள்ளிகொள் வானுள்ளத் தானுங்

கையஞ்சு நான்குடை யானைக் 

  கால்விர லாலடர்த் தானும்

பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் 

  புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்

ஐயஞ்சின் அப்புறத் தானும் 

  ஆரூ ரமர்ந்தஅம் மானே. 10

 

திருச்சிற்றம்பலம்