முதல்-திருமுறை

037 அரவச் சடைமேல்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : பனையூர்

திருச்சிற்றம்பலம்

 

அரவச் சடைமேல் மதிமத்தம்

விரவிப் பொலிகின் றவனூராம்

நிரவிப் பலதொண் டர்கள்நாளும்

பரவிப் பொலியும் பனையூரே.  1 

 

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்

உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்

கண்ணின் றெழுசோ லையில்வண்டு

பண்ணின் றொலிசெய் பனையூரே.  2 

 

அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்

மலரும் பிறையொன் றுடையானூர்

சிலரென் றுமிருந் தடிபேணப்

பலரும் பரவும் பனையூரே.  3 

 

இடியார் கடல்நஞ் சமுதுண்டு

பொடியா டியமே னியினானூர்

அடியார் தொழமன் னவரேத்தப்

படியார் பணியும் பனையூரே.  4 

 

அறையார் கழல்மேல் அரவாட

இறையார் பலிதேர்ந் தவனூராம்

பொறையார் மிகுசீர் விழமல்கப்

பறையா ரொலிசெய் பனையூரே.  5 

 

அணியார் தொழவல் லவரேத்த

மணியார் மிடறொன் றுடையானூர்

தணியார் மலர்கொண் டிருபோதும்

பணிவார் பயிலும் பனையூரே.  6 

 

அடையா தவர்மூ எயில்சீறும்

விடையான் விறலார் கரியின்தோல்

உடையான் அவனெண்1 பலபூதப்

படையா னவனூர் பனையூரே. 7

 

இலகும் முடிபத் துடையானை

அலல்கண் டருள்செய் தஎம்மண்ணல்

உலகில் லுயிர்நீர் நிலமற்றும்

பலகண் டவனூர் பனையூரே.  8 

 

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்

சிரமுன் னடிதா ழவணங்கும்

பிரமன் னொடுமா லறியாத

பரமன் னுறையும் பனையூரே.  9 

 

அழிவல் அமண ரொடுதேரர்

மொழிவல் லனசொல் லியபோதும்

இழிவில் லதொர்செம் மையினானூர்

பழியில் லவர்சேர் பனையூரே.  10 

 

பாரார் விடையான் பனையூர்மேல்

சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்

ஆரா தசொன்மா லைகள்பத்தும்

ஊரூர் நினைவா ருயர்வாரே. 11

 

திருச்சிற்றம்பலம்