மூன்றாம்-திருமுறை

112 பரசுபாணியர் பாடல்வீணையர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : பல்லவனீச்சுரம்

திருச்சிற்றம்பலம்

 

பரசுபாணியர் பாடல்வீணையர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார்  1 

 

 

பட்டநெற்றியர் நட்டமாடுவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

திட்ட மாயிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  2 

 

 

பவளமேனியர் திகழும் நீற்றினர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தழகரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  3 

 

 

பண்ணில்யாழினர் பயிலும்மொந்தையர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தண்ணலா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  4 

 

 

பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தெல்லி யாட்டுகந்தார் இவர்தன்மை யறிவாரார்.  5 

 

 

பச்சைமேனியர் பிச்சை கொள்பவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

திச்சையா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  6 

 

 

பைங்கண் ஏற்றினர் திங்கள்சூடுவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தெங்குமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  7 

 

 

பாதங் கைதொழ வேதமோதுவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தாதியா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  8 

 

 

படிகொள்மேனியர் கடிகொள் கொன்றையர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தடிகளா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  9 

 

 

பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

திறைவரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  10 

 

 

வானமாள்வதற் கூனமொன்றிலை மாதர்

  பல்லவனீச் சரத்தானை

ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்லவல்லவர் நல்லரே. 11

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

பத்திரைக்கு வாதில் வெற்றி அளித்தல்
View Details
பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details
குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details