முதல்-திருமுறை

036 கலையார் மதியோ

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

கலையார் மதியோ டுரநீரும்

நிலையார் சடையா ரிடமாகும்

மலையா ரமுமா மணிசந்தோ

டலையார் புனல்சே ருமையாறே.  1 

 

மதியொன் றியகொன் றைவடத்தான்

மதியொன் றவுதைத் தவர்வாழ்வு

மதியின் னொடுசேர் கொடிமாடம்

மதியம் பயில்கின் றவையாறே.  2 

 

கொக்கின் னிறகின் னொடுவன்னி

புக்க சடையார்க் கிடமாகும்

திக்கின் னிசைதே வர்வணங்கும்

அக்கின் னரையா ரதையாறே. 3

 

சிறைகொண் டபுரம் மவைசிந்தக்

கறைகொண் டவர்கா தல்செய்கோயில்

மறைகொண் டநல்வா னவர்தம்மில்

அறையும் மொலிசே ருமையாறே.  4 

 

உமையா ளொருபா கமதாகச்

சமைவா ரவர்சார் விடமாகும்

அமையா ருடல்சோர் தரமுத்தம்2

அமையா வருமந் தணையாறே. 5

 

தலையின் தொடைமா லையணிந்து

கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்

நிலைகொண் டமனத் தவர்நித்தம்

மலர்கொண் டுவணங் குமையாறே.  6 

 

வரமொன் றியமா மலரோன்றன்

சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்

வரைநின் றிழிவார் தருபொன்னி

அரவங் கொடுசே ருமையாறே.  7 

 

வரையொன் றதெடுத் தஅரக்கன்

சிரமங் கநெரித் தவர்சேர்வாம்

விரையின் மலர்மே தகுபொன்னித்

திரைதன் னொடுசே ருமையாறே.  8 

 

சங்கக் கயனும்3 மறியாமைப்

பொங்குஞ் சுடரா னவர்கோயில்

கொங்கிற் பொலியும் புனல்கொண்டு4

அங்கிக் கெதிர்காட் டுமையாறே. 9

 

துவரா டையர்தோ லுடையார்கள்

கவர்வாய் மொழிகா தல்செய்யாதே

தவரா சர்கள்தா மரையானோ

டவர்தா மணைஅந் தணையாறே.  10 

 

கலையார் கலிக்கா ழியர்மன்னன்

நலமார் தருஞா னசம்பந்தன்

அலையார் புனல்சூ ழுமையாற்றைச்

சொலுமா லைவல்லார் துயர்வீடே. 11

திருச்சிற்றம்பலம்