முதல்-திருமுறை

034 அடலே றமருங் கொடியண்ணல்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : சீர்காழி - 10-காழி

திருச்சிற்றம்பலம்

 

அடலே றமருங் கொடியண்ணல்

மடலார் குழலா ளொடுமன்னுங்

கடலார் புடைசூழ் தருகாழி

தொடர்வா ரவர்தூ நெறியாரே.  1 

 

திரையார் புனல்சூ டியசெல்வன்

வரையார் மகளோ டுமகிழ்ந்தான்

கரையார் புனல்சூழ் தருகாழி

நிரையார் மலர்தூ வுமினின்றே.  2 

 

இடியார் குரல்ஏ றுடையெந்தை

துடியா ரிடையா ளொடுதுன்னுங்

கடியார் பொழில்சூழ் தருகாழி

அடியார் அறியார் அவலம்மே.  3 

 

ஒளியார் விடமுண் டவொருவன்

அளியார் குழல்மங் கையொடன்பாய்க்

களியார் பொழில்சூழ்1 தருகாழி

எளிதாம் அதுகண் டவரின்பே. 4

 

பனியார் மலரார் தருபாதன்

முனிதா னுமையோ டுமுயங்கிக்

கனியார் பொழில்சூழ் தருகாழி

இனிதாம் அதுகண் டவரீடே.  5 

 

கொலையார் தருகூற் றமுதைத்து

மலையான் மகளோ டுமகிழ்ந்தான்

கலையார் தொழுதேத் தியகாழி

தலையால் தொழுவார் தலையாரே.  6 

 

திருவார் சிலையால் எயிலெய்து

உருவார் உமையோ டுடனானான்

கருவார் பொழில்சூழ் தருகாழி

மருவா தவர்வான் மருவாரே.  7 

 

அரக்கன் வலியொல் கஅடர்த்து

வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான்

சுரக்கும் புனல்சூழ் தருகாழி

நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.  8 

 

இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்

உருவிற் பெரியா ளொடுசேருங்

கருநற் பரவை கமழ்காழி

மருவப் பிரியும் வினைமாய்ந்தே.  9 

 

சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற

அமைந்தான் உமையோ டுடன்அன்பாய்க்

கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி

சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.  10 

 

நலமா கியஞான சம்பந்தன்

கலமார் கடல்சூழ் தருகாழி

நிலையா கநினைந் தவர்பாடல்

வலரா னவர்வான் அடைவாரே. 11

திருச்சிற்றம்பலம்