முதல்-திருமுறை

033 கணைநீடெரி மாலர

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : அன்பிலாலந்துறை

திருச்சிற்றம்பலம்

 

கணைநீடெரி மாலர வம்வரை வில்லா

இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணைமாமயி1 லுங்குயில் சேர்மட அன்னம்

அணையும்பொழில் அன்பிலா லந்துறை யாரே. 1

 

சடையார்சது ரன்முதி ராமதி சூடி

விடையார் கொடியொன்றுடை யெந்தை விமலன்

கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை

அடையார்பொழில் அன்பிலா லந்துறை யாரே.  2 

 

ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்

பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்

நீருண்கய லும்வயல் வாளை வராலோ

டாரும்புனல் அன்பிலா லந்துறை யாரே.  3 

 

பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்

நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்

மறையும்பல வேதிய ரோத ஒலிசென்

றறையும்புனல் அன்பிலா லந்துறை யாரே.  4 

 

நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்

கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்

மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்

ஆடும்பதி அன்பிலா லந்துறை யாரே.  5 

 

நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்

ஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்

வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி

ஆறார்வயல் அன்பிலா லந்துறை யாரே.  6 

 

செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட

படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்

கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்

அடியார்தொழும் அன்பிலா லந்துறை யாரே.  7 

 

விடத்தார் திகழும்மிட றன்நட மாடி

படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி

கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார

அடர்த்தாரருள் அன்பிலா லந்துறை யாரே.  8 

 

வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்

பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை

சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்

அணங்குந்திக ழன்பிலா லந்துறை யாரே.  9 

 

தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்

நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்

வெறியார்மலர் கொண்டடி வீழும் அவரை

அறிவாரவர் அன்பிலா லந்துறை யாரே.  10 

 

அரவார்புனல் அன்பிலா லந்துறை தன்மேல்

கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்

பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்

விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. 11

 

திருச்சிற்றம்பலம்