அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : மூன்றாம் திருமுறை
தலம் : பொது
திருச்சிற்றம்பலம்
கல்லால் நீழல், அல்லாத் தேவை
நல்லார் பேணார், அல்லோம் நாமே. 1
கொன்றை சூடி, நின்ற தேவை
அன்றி யொன்று, நன்றி லோமே. 2
கல்லா நெஞ்சின், நில்லான் ஈசன்
சொல்லா தாரோ, டல்லோம் நாமே. 3
கூற்று தைத்த, நீற்றி னானைப்
போற்று வார்கள், தோற்றி னாரே. 4
காட்டு ளாடும், பாட்டு ளானை
நாட்டு ளாருந், தேட்டு ளாரே. 5
தக்கன் வேள்விப், பொக்கந் தீர்த்த
மிக்க தேவர், பக்கத் தோமே. 6
பெண்ணா ணாய, விண்ணோர் கோவை
நண்ணா தாரை, எண்ணோம் நாமே. 7
தூர்த்தன் வீரம், தீர்த்த கோவை
ஆத்த மாக, ஏத்தி னோமே. 8
பூவி னானுந், தாவி னானும்
நாவி னாலும், ஓவி னாரே. 9
மொட்ட மணர், கட்ட தேரர்
பிட்டர் சொல்லை, விட்டு ளோமே. 10
அந்தண் காழிப், பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர், உய்ந்து ளோரே. 11
திருச்சிற்றம்பலம்