மூன்றாம்-திருமுறை

037 கரமுனம்மல ராற்புனல்மலர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : சீர்காழி - 01-பிரமபுரம்

திருச்சிற்றம்பலம்

 

 

கரமுனம்மல ராற்புனல்மலர் 

  தூவியேகலந் தேத்துமின்

பரமனூர்பல பேரினாற்பொலி 

  பத்தர்சித்தர்கள் தாம்பயில்

வரமுன்னவ்வருள் செய்யவல்லஎம் 

  ஐயன்நாடொறும் மேயசீர்ப்

பிரமனூர்பிர மாபுரத்துறை 

  பிஞ்ஞகனருள் பேணியே.  1 

 

 

விண்ணிலார்மதி சூடினான்விரும் 

  பும்மறையவன் தன்றலை

உண்ணநன்பலி பேணினான்உல 

  கத்துளூனுயி ரான்மலைப்

பெண்ணினார்திரு மேனியான்பிர 

  மாபுரத்துறை கோயிலுள்

அண்ணலாரரு ளாளனாயமர் 

  கின்றஎம்முடை யாதியே.  2 

 

 

எல்லையில்புக ழாளனும்இமை 

  யோர்கணத்துடன் கூடியும்

பல்லையார்தலை யிற்பலியது 

  கொண்டுகந்த படிறனுந்

தொல்லைவையகத் தேறுதொண்டர்கள் 

  தூமலர்சொரிந் தேத்தவே

மல்லையம்பொழில் தேன்பில்கும்பிர 

  மாபுரத்துறை மைந்தனே.  3 

 

 

அடையலார்புரஞ் சீறியந்தணர் 

ஏத்தமாமட மாதொடும்

பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர 

மாபுரத்துறை கோயிலான்

தொடையலார்நறுங் கொன்றையான்தொழி 

லேபரவிநின் றேத்தினால்

இடையிலார்சிவ லோகமெய்துதற் 

கீதுகாரணங் காண்மினே.  4 

 

 

வாயிடைம்மறை யோதிமங்கையர் 

  வந்திடப்பலி கொண்டுபோய்ப்

போயிடம்எரி கானிடைப்புரி 

  நாடகம்இனி தாடினான்

பேயொடுங்குடி வாழ்வினான்பிர 

  மாபுரத்துறை பிஞ்ஞகன்

தாயிடைப்பொருள் தந்தையாகுமென் 

  றோதுவார்க்கருள் தன்மையே.  5 

 

 

ஊடினாலினி யாவதென்னுயர் 

  நெஞ்சமேயுறு வல்வினைக்

கோடிநீயுழல் கின்றதென்னழ 

  லன்றுதன்கையி லேந்தினான்

பீடுநேர்ந்தது கொள்கையான்பிர 

  மாபுரத்துறை வேதியன்

ஏடுநேர்மதி யோடராவணி 

  எந்தையென்றுநின் றேத்திடே.  6 

 

 

செய்யன்வெள்ளியன் ஒள்ளியார்சில 

  ரென்றும்ஏத்தி நினைந்திட

ஐயன்ஆண்டகை அந்தணன்அரு 

  மாமறைப்பொரு ளாயினான்

பெய்யும்மாமழை யானவன்பிர 

  மாபுரம்இடம் பேணிய

வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந் 

  தேத்துமின்வினை வீடவே.  7 

 

 

கன்றொருக்கையில் ஏந்திநல்விள 

  வின்கனிபட நூறியுஞ்

சென்றொருக்கிய மாமறைப்பொருள் 

  தேர்ந்தசெம்மல ரோனுமாய்

அன்றரக்கனைச் செற்றவன்அடி 

  யும்முடியவை காண்கிலார்

பின்றருக்கிய தண்பொழிற்பிர 

  மாபுரத்தரன் பெற்றியே.  8 

 

 

உண்டுடுக்கைவிட் டார்களும்உயர் 

  கஞ்சிமண்டைகொள் தேரரும்

பண்டடக்குசொற் பேசுமப்பரி 

  வொன்றிலார்கள்சொல் கொள்ளன்மின்

தண்டொடக்குவன் சூலமுந்தழல் 

  மாமழுப்படை தன்கையிற்

கொண்டொடுக்கிய மைந்தன்எம்பிர 

  மாபுரத்துறை கூத்தனே.  9 

 

 

பித்தனைப்பிர மாபுரத்துறை 

  பிஞ்ஞகன்கழல் பேணியே

மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை 

  செய்துநன்பொருள் மேவிட

வைத்தசிந்தையுள் ஞானசம்பந்தன் 

  வாய்நவின்றெழு மாலைகள்

பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை 

  போற்றிசெய்யும்மெய்ம் மாந்தரே. 10

 

 

திருச்சிற்றம்பலம்