இரண்டாம்-திருமுறை

081 பூதத்தின் படையினீர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : இரண்டாம் திருமுறை

  தலம் : சீர்காழி - 02-வேணுபுரம்

திருச்சிற்றம்பலம்

 

பூதத்தின் படையினீர்

  பூங்கொன்றைத் தாரினீர்

ஓதத்தின் ஒலியோடும்

  உம்பர்வா னவர்புகுந்து

வேதத்தின் இசைபாடி

  விரைமலர்கள் சொரிந்தேத்தும்

பாதத்தீர் வேணுபுரம்

  பதியாகக் கொண்டீரே.  1 

 

சுடுகாடு மேவினீர்

  துன்னம்பெய் கோவணந்தோல்

உடையாடை யதுகொண்டீர்

  உமையாளை யொருபாகம்

அடையாளம் அதுகொண்டீர்

  அங்கையினிற் பரசுவெனும்

படையாள்வீர் வேணுபுரம்

  பதியாகக் கொண்டீரே.  2 

 

கங்கைசேர் சடைமுடியீர்

  காலனைமுன் செற்றுகந்தீர்

திங்களோ டிளஅரவந்

  திகழ்சென்னி வைத்துகந்தீர்

மங்கையோர் கூறுடையீர்

  மறையோர்கள் நிறைந்தேத்தப்

பங்கயஞ்சேர் வேணுபுரம்

  பதியாகக் கொண்டீரே.  3 

 

நீர்கொண்ட சடைமுடிமேல்

  நீள்மதியம் பாம்பினொடும்

ஏர்கொண்ட கொன்றையினோ

  டெழில்மத்தம் இலங்கவே

சீர்கொண்ட மாளிகைமேற்

  சேயிழையார் வாழ்த்துரைப்பக்

கார்கொண்ட வேணுபுரம்

  பதியாகக் கலந்தீரே.  4 

 

ஆலைசேர் தண்கழனி

  அழகாக நறவுண்டு

சோலைசேர் வண்டினங்கள்

  இசைபாடத் தூமொழியார்

காலையே புகுந்திறைஞ்சிக்

  கைதொழமெய் மாதினொடும்

பாலையாழ் வேணுபுரம்

  பதியாகக் கொண்டீரே.  5 

 

மணிமல்கு மால்வரைமேல்

  மாதினொடு மகிழ்ந்திருந்தீர்

துணிமல்கு கோவணத்தீர்

  சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்

பணிமல்கு மறையோர்கள்

  பரிந்திறைஞ்ச வேணுபுரத்

தணிமல்கு கோயிலே

  கோயிலாக அமர்ந்தீரே.  6 

 

நீலஞ்சேர் மிடற்றினீர்

  நீண்டசெஞ் சடையினீர்

கோலஞ்சேர் விடையினீர்

  கொடுங்காலன் தனைச்செற்றீர்

ஆலஞ்சேர் கழனியழ

  கார்வேணு புரம்அமருங்

கோலஞ்சேர் கோயிலே

  கோயிலாகக் கொண்டீரே.  7 

 

இரைமண்டிச் சங்கேறுங்

  கடல்சூழ்தென் இலங்கையர்கோன்

விரைமண்டு முடிநெரிய

  விரல்வைத்தீர் வரைதன்னிற்

கரைகண்டிப் பேரோதங்

  கலந்தெற்றுங் கடற்கவினார்

விரைமண்டு வேணுபுர

  மேயமர்ந்து மிக்கீரே.  8 

 

தீயோம்பு மறைவாணர்க்

  காதியாந் திசைமுகன்மால்

போயோங்கி யிழிந்தாரும்

  போற்றரிய திருவடியீர்

பாயோங்கு மரக்கலங்கள்

  படுதிரையால் மொத்துண்டு

சேயோங்கு வேணுபுரஞ்

  செழும்பதியாத் திகழ்ந்தீரே.  9 

 

நிலையார்ந்த வுண்டியினர்

  நெடுங்குண்டர் சாக்கியர்கள்

புலையானார் அறவுரையைப்

  போற்றாதுன் பொன்னடியே

நிலையாகப் பேணிநீ

  சரணென்றார் தமையென்றும்

விலையாக ஆட்கொண்டு

  வேணுபுரம் விரும்பினையே.  10 

 

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

திருச்சிற்றம்பலம்