இரண்டாம்-திருமுறை

012 மறையானை மாசிலாப்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : இரண்டாம் திருமுறை

  தலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)

திருச்சிற்றம்பலம்

 

மறையானை மாசிலாப்

  புன்சடை மல்குவெண்

பிறையானைப் பெண்ணொடா

  ணாகிய பெம்மானை

இறையானை யேர்கொள்கச்

  சித்திரு வேகம்பத்

துறைவானை யல்லதுள்

  காதென துள்ளமே.  1 

 

நொச்சியே வன்னிகொன்

  றைமதி கூவிளம்

உச்சியே புனைதல்வே

  டம்விடை யூர்தியான்

கச்சியே கம்பம்மே

  யகறைக் கண்டனை

நச்சியே தொழுமின்நும்

  மேல்வினை நையுமே.  2 

 

பாராரு முழவமொந்

  தைகுழல் யாழொலி

சீராலே பாடலா

  டல்சிதை வில்லதோர்

ஏரார்பூங் கச்சியே

  கம்பனை யெம்மானைச்

சேராதார் இன்பமா

  யந்நெறி சேராரே.  3 

 

குன்றேய்க்கு நெடுவெண்மா

  டக்கொடி கூடிப்போய்

மின்றேய்க்கு முகில்கள்

  தோயும் வியன் கச்சியுள்

மன்றேய்க்கு மல்குசீ

  ரான்மலி யேகம்பம்

சென் றேய்க்குஞ்

  சிந்தையார் மேல்வினை சேராவே.  4 

 

சடையானைத் தலைகையேந்

  திப்பலி தருவார்தம்

கடையேபோய் மூன்றுங்கொண்

  டான்கலிக் கச்சியுள்

புடையேபொன் மலருங்கம்

  பைக்கரை யேகம்பம்

உடையானை யல்லதுள்

  காதென துள்ளமே.  5 

 

மழுவாளோ டெழில்கொள்சூ

  லப்படை வல்லார்தம்

கெழுவாளோ ரிமையாருச்

  சியுமை யாள்கங்கை

வழுவாமே மல்குசீ

  ரால்வள ரேகம்பம்

தொழுவாரே விழுமியார்

  மேல்வினை துன்னாவே.  6 

 

விண்ணுளார் மறைகள்வே

  தம்விரித் தோதுவார்

கண்ணுளார் கழலின்வெல்

  வார்கரி காலனை

நண்ணுவா ரெழில்கொள்கச்

  சிநக ரேகம்பத்

தண்ணலா ராடுகின்

  றவலங் காரம்மே.  7 

 

தூயானைத் தூயவா

  யம்மறை யோதிய

வாயானை வாளரக்

  கன்வலி வாட்டிய

தீயானைத் தீதில்கச்

  சித்திரு வேகம்பம்

மேயானை மேவுவா

  ரென்றலை மேலாரே.  8 

 

நாகம்பூண் ஏறதே

  றல்நறுங் கொன்றைதார்

பாகம்பெண் பலியுமேற்

  பர்மறை பாடுவர்

ஏகம்பம் மேவியா

  டுமிறை யிருவர்க்கும்

மாகம்பம் அறியும்வண்

  ணத்தவ னல்லனே.  9 

 

போதியார் பிண்டியா

  ரென்றிவர் பொய்ந்நூலை

வாதியா வம்மினம்

  மாவெனுங் கச்சியுள்

ஆதியார் மேவியா

  டுந்திரு வேகம்பம்

நீதியால் தொழுமின்நும்

  மேல்வினை நில்லாவே.  10 

 

அந்தண்பூங் கச்சியே

  கம்பனை யம்மானைக்

கந்தண்பூங் காழியூ

  ரன்கலிக் கோவையால்

சந்தமே பாடவல்

  லதமிழ் ஞானசம்

பந்தன்சொற் பாடியா

  டக்கெடும் பாவமே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சட்டை முனி
View Details
குறையாத அரிசி மூட்டை அளித்தல்
View Details
கலிக்கம்ப நாயனார்
View Details