முதல்-திருமுறை

135 நீறுசேர்வதொர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  பராய்த்துறை

திருச்சிற்றம்பலம்

 

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை

கூறுசேர்வதொர் கோலமாய்ப்

பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை

ஆறுசேர்சடை அண்ணலே.  1 

 

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை

வந்தபூம்புனல் வைத்தவர்

பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை

அந்தமில்ல அடிகளே.  2 

 

வேதர்வேதமெல் லாமுறையால்விரித்

தோதநின்ற ஒருவனார்

பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை

ஆதியாய அடிகளே.  3 

 

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு

நூலுந்தாமணி மார்பினர்

பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை

ஆலநீழல் அடிகளே.  4 

 

விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்

இரவில்நின்றெரி யாடுவர்

பரவினாரவர் வேதம்பராய்த்துறை

அரவமார்த்த அடிகளே.  5 

 

மறையுமோதுவர் மான்மறிக்கையினர்

கறைகொள்கண்ட முடையவர்

பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை

அறையநின்ற அடிகளே.  6 

 

விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்

சடையிற்கங்கை தரித்தவர்

படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை

அடையநின்ற அடிகளே.  7 

 

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை

நெருக்கினார்விர லொன்றினால்

பருக்கினாரவர் போலும்பராய்த்துறை

அருக்கன்றன்னை அடிகளே.  8 

 

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்

தோற்றமும் மறியாதவர்

பாற்றினார்வினை யானபராய்த்துறை

ஆற்றல்மிக்க அடிகளே.  9 

 

திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்

உருவிலாவுரை கொள்ளேலும்

பருவிலாலெயில் எய்துபராய்த்துறை

மருவினான்றனை வாழ்த்துமே.  10 

 

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்

செல்வர்மேற் சிதையாதன

செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்

செல்வமாமிவை செப்பவே. 11

திருச்சிற்றம்பலம்