அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
எப்போதும் இனிய பிரான்
இன்னருளால் அதிகரித்து
மெய்ப் போத நெறி வந்த
விதி முறைமை வழுவாமே
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம்
மிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதல்
சைவராம் முனிவர். 1
தெரிந்து உணரின் முப்போதும் செல்
காலம் நிகழ் காலம்
வருங்காலம் ஆனவற்றின்
வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ
வேதியர்க்கே உரியன அப்
பெருந்தகையார் குலப் பெருமை
யாம் புகழும் பெற்றியதோ. 2
நாரணர்க்கும் நான்முகர்க்கும் அறிய
ஒண்ணாநாதனை எம்பெருமானை ஞானமான
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும்
அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள் கமல
மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர்
செயல் அறிந்தவாறு புகலல் உற்றேன். 3
திருச்சிற்றம்பலம்