பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

064 பத்தராய்ப் பணிவார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஈசருக்கே அன்பு ஆனார் 

  யாவரையும் தாம் கண்டால்

கூசி மிகக் குது குதுத்துக் 

  கொண்டாடி மனம் மகிழ்வுற்று

ஆசையினால் ஆவின்பின் கன்று 

  அணைந்தால் போல் அணைந்து

பேசுவன பணிந்த மொழி 

  இனியனவே பேசுவார்.  1 

 

 

தாவரிய அன்பினால் 

  சம்புவினை எவ்விடத்தும்

யாவர்களும் அர்ச்சிக்கும் படி 

  கண்டால் இனிது உவந்து

பாவனையால் நோக்கினால் பலர் 

  காணப் பயன் பெறுவார்

மேவரிய அன்பினால் மேலவர்க்கும் 

  மேல் ஆனார்.  2 

 

 

அங்கணனை அடியாரை 

  ஆராத காதலினால்

பொங்கிவரும் உவகையுடன் தாம் 

  விரும்பிப் பூசிப்பார்

பங்கய மா மலர் மேலான் 

  பாம்பணையான் என்று இவர்கள்

தங்களுக்கும் சார்வரிய சரண் 

  சாரும் தவம் உடையார்.  3 

 

 

யாதானும் இவ்வுடம்பால் 

  செய்வினைகள் ஏறுயர்த்தார்

பாதார விந்தத்தின் பால் 

  ஆக எனும் பரிவால்

காதார் வெண் குழையவர்க்காம் 

  பணி செய்வார் கருக்குழியில்

போதார்கள் அவர் புகழ்க்குப் 

  புவனம் எல்லாம் போதாவால்.  4 

 

 

சங்கரனைச் சார்ந்த கதை 

  தான் கேட்கும் தன்மையராய்

அங்கணனை மிக விரும்பி 

  அயல் அறியா அன்பினால்

கங்கை நதி மதி 

  இதழி காதலிக்கும் திருமுடியார்

செங்கமல மலர்ப் பாதம் 

  சேர்வதனுக்கு உரியார்கள்.  5 

 

 

ஈசனையே பணிந்து உருகி இன்பம் 

  மிகக் களிப்பு எய்திப் 

பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் 

  பெருந் தாரை

மாசிலா நீறழித்து அங்கு அருவி 

  தர மயிர் சிலிப்பக்

கூசியே உடல் கம்பித்திடுவார் 

  மெய்க் குணம் மிக்கார்.  6 

 

 

நின்றாலும் இருந்தாலும் 

  கிடந்தாலும் நடந்தாலும்

மென்றாலும் துயின்றாலும் 

  விழித்தாலும் இமைத்தாலும்

மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு 

  காலும் மறவாமை

குன்றாத உணர்வு உடையார் 

  தொண்டராம் குணம் மிக்கார்.  7 

 

 

சங்கரனுக்காளான தவம் காட்டித் 

  தாம் அதனால்

பங்கமறப் பயன் துய்யார் 

  படி விளக்கும் பெருமையினார்

அங்கணனைத் திருவாரூர் 

  ஆள்வானை அடிவணங்கிப்

பொங்கி எழும் சித்தம் உடன் 

  பத்தராய்ப் போற்றுவார்.  8 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஆலவாயில் எல்லை வகுத்தல்
View Details
இசை ஞானியார்
View Details
ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள்
View Details