பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

062 புகழ்த்துணை நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

செருவிலிபுத்தூர் மன்னும் சிவ 

  மறையோர் திருக்குலத்தார்

அருவரை வில்லாளி தனக்கு 

  அகத்து அடிமையாம் அதனுக்கு

ஒருவர் தமை நிகர் இல்லார் 

  உலகத்துப் பரந்து ஓங்கிப்

பொருவரிய புகழ் நீடு 

  புகழ்த்துணையார் எனும் பெயரார்.  1 

 

 

தம் கோனைத் தவத்தாலே 

  தத்துவத்தின் வழிபடு நாள்

பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் 

  பசி புரிந்தும்

எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் 

  என்று இராப் பகலும்

கொங்கார் பன் மலர் கொண்டு 

  குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார்.  2 

 

 

மால் அயனுக்கு அரியானை 

  மஞ்சனம் ஆட்டும் பொழுது

சாலவுறு பசிப்பிணியால் வருந்தி 

  நிலை தளர்வு எய்திக்

கோல நிறை புனல் தாங்கு 

  குடம் தாங்க மாட்டாமை

ஆலமணி கண்டத்தார் முடி 

  மீது வீழ்த்து அயர்வார்.  3 

 

 

சங்கரன் தன் அருளால் ஓர் 

  துயில் வந்து தமை அடைய

அங்கணனும் களவின்கண் அருள் 

  புரிவான் அருந்தும் உணவு

மங்கிய நாள் கழிவளவும் வைப்பது 

  நித்தமும் ஒரு காசு

இங்கு உனக்கு நாம் என்ன 

  இடர் நீங்கி எழுந்திருந்தார்.  4 

 

 

பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் 

  கீழ் ஒரு காசு

அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் 

  மற்று அது கைக்கொண்டு

உற்ற பெரும் பசி அதனால் 

  உணங்கும் உடம்புடன் உவந்து

முற்றுணர்வு தலை நிரம்ப முகம் 

  மலர்ந்து களி கூர்ந்தார்.  5 

 

 

அந்நாள் போல் எந்நாளும் அளித்த 

  காசு அது கொண்டே

இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த 

  நாள் நீங்கிய பின்

மின்னார் செஞ்சடையார்க்கு 

  மெய்யடிமைத்தொழில் செய்து

பொன்னாட்டின் அமரர் தொழப் 

  புனிதர் அடிநிழல் சேர்ந்தார்.  6 

 

 

பந்தணையும் மெல் விரலாள் 

  பாகத்தார் திருப் பாதம்

வந்தணையும் மனத் துணையார் 

  புகழ்த்துணையார் கழல் வாழ்த்திச் 

சந்தணியும் மணிப் புயத்துத் 

  தனிவீரராம் தலைவர்

கொந்தணையும் மலர் அலங்கல் 

  கோட்புலியார் செயல் உரைப்பாம்.  7 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பூசலார் நாயனார்
View Details
திருமூல நாயனார்
View Details
பத்திரைக்கு வாதில் வெற்றி அளித்தல்
View Details