பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

027 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

 

திருநாவுக்கு அரசர்வளர்

  திருத்தொண்டின் நெறிவாழ 

வருஞானத் தவமுனிவர்

  வாகீசர் வாய்மைதிகழ் 

பெருநாமச் சீர்பரவல்

  உறுகின்றேன் பேருலகில் 

ஒருநாவுக்கு உரைசெய்ய

  ஒண்ணாமை உணராதேன்.  1 

 

 

தொன்மை முறை வரு மண்ணின் 

  துகள் அன்றித் துகள் இல்லா 

நன்மை நிலை ஒழுக்கத்து நலம் 

  சிறந்த குடி மல்கிச் 

சென்னி மதி புனையவளர் மணி 

  மாடச் செழும் பதிகள் 

மன்னி நிறைந்து உளது 

  திரு முனைப்பாடி வளநாடு.  2 

 

 

புனப் பண்ணை மணியினோடும் 

  புறவின் நறும் புதுமலரின் 

கனப்பெண்ணில் திரை சுமந்து கரை 

  மருங்கு பெரும் பகட்டேர் 

இனப் பண்ணை உழும் பண்ணை 

  எறிந்து உலவி எவ்வுலகும் 

வனப்பெண்ண வரும் பெண்ணை மா 

  நதி பாய் வளம் பெருகும்.  3 

 

 

காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு 

  எல்லாம் கண் பொழி தேன் 

பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு 

  எல்லாம் குலைக் கமுகு 

சாலெல்லாம் தரள நிரை 

  தடம் எல்லாம் செங்கழுநீர் 

மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து 

  எல்லாம் திருந்து மனை.  4 

 

 

கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு 

  குறை பொழி கொழும் சாறு 

இடை தொடுத்த தேன் கிழிய 

  இழிந்து ஒழுகு நீத்தம் உடன் 

புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் 

  புனல் போல் மடை உடைப்ப 

உடை மடையக் கரும்படு கட்டியின் 

  அடைப்ப ஊர்கள் தொறும்.  5 

 

 

கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் 

  கைம் முகம் காட்ட 

மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் 

  வயப் புரவி முகம் காட்டப் 

பெருஞ்சகடு தேர் காட்ட 

  வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க 

நெருங்கிய சாதுரங்க பல 

  நிகர்பனவாம் நிறை மருதம்.  6 

 

 

நறையாற்றுங் கமுகு நவ மணிக் 

  கழுத்தின் உடன் கூந்தல் 

பொறை ஆற்றா மகளிர் எனப் 

  புறம்பு அலை தண்டலை வேலித் 

துறை ஆற்ற மணி வண்ணச் 

  சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை 

நிறை ஆற்று நீர்க் 

  கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால்.  7 

 

 

மரு மேவு மலர் மேய 

  மா கடலினுட் படியும் 

உரு மேகம் என மண்டி 

  உகைத்த கரும் கன்று போல் 

வரு மேனிச் செங்கண் வரால் 

  மடி முட்டப் பால் சொரியும் 

கரு மேதி தனைக் கொண்டு 

  கரை புரள்வ திரை வாவி.  8 

 

 

மொய்யளி சூழ் நிரைநீல 

  முழு வலயங்களின் அலையச் 

செய்ய தளிர் நறு விரலில் 

  செழு முகையின் நகம் சிறப்ப 

மெய்யொளியின் நிழல் காணும் ஆடி 

  என வெண் மதியை 

வைய மகள் கை அணைத்தால் 

  போல் உயர்வ மலர்ச் சோலை.  9 

 

 

எயில் குலவும் வளம் பதிகள் 

  எங்கும் மணம் தங்கும் வயல் 

பயிர்க் கண்வியல் இடங்கள் பல 

  பரந்து உயர் நெற் கூடுகளும் 

வெயில் கதிர்மென் குழை மகளிர் 

  விரவிய மாடமும் மேவி 

மயில் குலமும் முகல் குலமும் 

  மாறாட மருங்கு ஆடும்.  10 

 

 

மறம் தரு தீ நெறி மாற 

  மணிகண்டர் வாய்மை நெறி 

அறம் தரு நாவுக்கரசும் 

  ஆலால சுந்தரரும் 

பிறந்து அருள உளதானால் நம் 

  அளவோ பேர் உலகில் 

சிறந்த திருமுனைப் பாடித் திறம் 

  பாடும் சீர்ப் பாடு.  11 

 

 

இவ் வகைய திரு நாட்டில் 

  எனைப் பல ஊர்களும்   என்றும் 

மெய் வளங்கள் ஓங்க வரும் 

  மேன்மையன ஆங்கு அவற்றுள் 

சைவ நெறி ஏழ் 

  உலகும் பாலிக்கும் தன்மையினால் 

தெய்வ நெறிச் சிவம் 

  பெருக்கும் திருவாமூர் திருவாமூர்.  12 

 

 

ஆங்கு வன முலைகள் சுமந்து 

  அணங்குவன மகளிர் இடை 

ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன 

  மணிக் காஞ்சி 

ஓங்குவன மாட நிரை 

  ஒழுகுவன வழுவில் அறம் 

நீங்குவன தீங்கு நெறி 

  நெருங்குவன பெரும் குடிகள்.  13 

 

 

மலர் நீலம் வயல் காட்டும் 

  மைஞ் ஞீலம் மதி காட்டும் 

அலர் நீடு மறு காட்டும் 

  அணி ஊசல் பல காட்டும் 

புலர் நீலம் இருள் காட்டும் 

  பொழுது உழவர் ஒலி காட்டும் 

கல நீடு மனை காட்டும் 

  கரை காட்டாப் பெருவளங்கள்.  14 

 

 

தலத்தின் கண் விளங்கிய அத் 

  தனிப் பதியில் அனைத்து வித 

நலத்தின் கண் வழுவாத நடை 

  மரபில் குடி நாப்பண் 

விலங்கின் மனை ஒழுக்கத்தின் 

  மேதக்க நிலைவேளாண் 

குலத்தின் கண் வரும் பெருமைக் 

  குறுக்கையர் தம் குடி விளங்கும்.  15 

 

 

அக் குடியின் மேல் 

  தோன்றலாய பெரும் தன்மையினார் 

மிக்க மனை அறம் புரிந்து 

  விருந்து அளிக்கும் மேன்மையினார் 

ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் 

  உளர் ஆனார் உளர் ஆனார் 

திக்கு நிலவும் பெருமை 

  திகழ வரும் புகழனார்.  16 

 

 

புகழனார் தமக்கு உரிமைப் 

  பொருவில் குலக்குடியின் கண் 

மகிழவரு மணம் புணர்ந்த 

  மாதினியார் மணி வயிற்றில் 

நிகழும் மலர்ச் செங்கமல 

  நிரை இதழின் அகவயினில் 

திகழ வருந் திரு 

  அனைய திலகவதியார் பிறந்தார்.  17 

 

 

திலகவதியார் பிறந்து சில முறை 

  ஆண்டு அகன்றதன் பின் 

அலகில் கலைத் துறை தழைப்ப 

  அரும் தவத்தோர் நெறிவாழ 

உலகில் வரும் இருள் நீக்கி ஒளி 

  விளங்கு கதிர் போல் பின் 

மலரும் மருள் நீக்கியார் 

  வந்து அவதாரம் செய்தார்.  18 

 

 

மாதினியார் திரு வயிற்றின் 

  மன்னிய சீர்ப் புகழனார் 

காதலனார் உதித்த தற்பின் 

  கடன் முறைமை மங்கலங்கள் 

மேதகு நல் வினை 

  சிறப்ப விரும்பிய பாராட்டினுடன் 

ஏதமில் பல் கிளை போற்ற 

  இளங் குழவிப் பதம் கடந்தார்.  19 

 

 

மருள் நீக்கியார் சென்னி 

  மயிர் நீக்கும் மணவினையும் 

தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் 

  மகிழ் சிறப்பச் செய்து அதற்பின் 

பொருள் நீத்தம் கொள வீசிப் 

  புலன் கொளுவ மன முகிழ்த்த 

சுருள் நீக்கி மலர் விக்கும் 

  கலை பயிலத் தொடங்கு வித்தார்.  20 

 

 

தந்தையார் களி மகிழ்ச்சி 

  தலை சிறக்க முறைமையினால் 

சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் 

  செழும் கலையின் திறங்கள் எல்லாம்

முந்தை முறைமையில் பயின்று முதிர 

  அறிவு எதிரும் வகை 

மைந்தனார் மறு ஒழித்த இளம் 

  பிறை போல் வளர் கின்றார்.  21 

 

 

அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு 

  ஆறு இரண்டின் 

முன்னாக ஒத்த குல முதல் 

  வேளாண் குடித் தலைவர் 

மின்னார் செஞ்சடை அண்ணல் 

  மெய் அடிமை விருப்புடையார் 

பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் 

  பால் அருள் உடையார்.  22 

 

 

ஆண் தகைமைத் தொழிலின் கண் 

  அடல் அரியேறு என உள்ளார்

காண் தகைய பெருவனப்பில் 

  கலிப்பகையார் எனும் பெயரார் 

பூண்ட கொடைப் புகழனார் பால் 

  பொருவின் மகள் கொள்ள 

வேண்டி எழுங் காதலினால் 

  மேலோரைச் செலவிட்டார்.  23 

 

 

அணங்கு அனைய திலகவதியார் 

  தம்மை ஆங்கு அவர்க்கு 

மணம் பேசி வந்தவரும் 

  வந்தபடி அறிவிப்பக் 

குணம் பேசிக் குலம் பேசிக் 

  கோதில் சீர்ப் புகழனார் 

பணம் கொள் அரவு அகல் அல்குல் 

  பைந் தொடியை மணம் நேர்ந்தார்.  24 

 

 

கன்னித் திருத் தாதையார் 

  மணம் இசைவு கலிப்பகையார் 

முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை 

  வினை முடிப்பதன் முன் 

மன்னவற்கு வடபுலத்து ஓர் 

  மாறு ஏற்க மற்றவர்மேல் 

அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை 

  மேல் அவர் அகன்றார்.  25 

 

 

வேந்தற்கு உற்று உழி வினை 

  மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு

போந்த வரும் பொரு படையும் 

  உடன் கொண்டு சில நாளில் 

காய்ந்த சினப் பகைப் புலத்தைக் 

  கலந்து கடும் சமர்க் கடலை 

நீந்துவார் நெடு நாள்கள் நிறை 

  வெம் போர்த் துறை விளைத்தார்.  26 

 

 

ஆய நாள் இடை இப்பால் 

  அணங்கு அனையாள் தனைப் பயந்த

தூயகுலப் புகழனார் தொன்று 

  தொடு நிலையாமை 

மேய வினைப் பயத்தாலே இவ் 

  உலகை விட்டு அகலத் 

தீய அரும் பிணி உழந்து விண் 

  உலகில் சென்று அடைந்தார்.  27 

 

 

மற்றவர் தாம் உயிர் 

  நீப்ப மனைவியார் மாதினியார் 

சுற்றம் உடன் மக்களையும் 

  துகளாகவே நீத்துப் 

பெற்றிமையால் உடன் என்றும் 

  பிரியாத உலகு எய்தும் 

கற்பு நெறி வழுவாமல் கணவனார் 

  உடன் சென்றார்.  28 

 

 

தாதையாரும் பயந்த தாயாரும் 

  இறந்த அதன் பின்

மாதரார் திலகவதியாரும் அவர் 

  பின் வந்த 

காதலனார் மருண் நீக்கியாரும் 

  மனக் கவலையினால் 

பேது உறு நல் சுற்றமொடும் 

  பெரும் துயரில் அழுந்தினார்.  29 

 

 

ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் 

  தேற்றத் துயர் ஒழிந்து 

பெரு வானம் அடைந்தவர்க்குச் 

  செய் கடன்கள் பெருக்கினார் 

மருவார்மேல் மன்னவற்காய் 

  மலையப் போம் கலிப்பகையார் 

பொருவாரும் போர்க் களத்தில் உயிர் 

  கொடுத்துப் புகழ் கொண்டார்.  30 

 

 

வெம் முனை மேல் கலிப்பகையார் 

  வேல் வேந்தன் ஏவப் போய் 

அம் முனையில் பகை முருக்கி 

  அமர் உலகம் ஆள்வதற்குத் 

தம் உடைய கடன் கழித்த 

  பெரு வார்த்தை தலம் சாற்றச் 

செம்மலர் மேல் திரு 

  அனைய திலகவதியார் கேட்டார்.  31 

 

 

எந்தையும் எம் அனையும் அவர்க்கு 

  எனக் கொடுக்க இசைந்தார்கள் 

அந்த முறையால் அவர்க்கே 

  உரியது நான் ஆதலினால் 

இந்த உயிர் அவர் உயிரோடு 

  இசைவிப்பன் எனத் துணிய 

வந்தவர் தம் அடி இணை மேல் 

  மருண் நீக்கியார் விழுந்தார்.  32 

 

 

அந் நிலையில் மிகப் புலம்பி 

  அன்னையும் அத்தனும் அகன்ற 

பின்னையும் நான் உமை வணங்கப் 

  பெறுதலின் உயிர் தரித்தேன் 

என்னை இனித் தனிக் கைவிட்டு 

  ஏகுவீர் எனில் யானும் 

முன்னம் உயிர் நீப்பன் என 

  மொழிந்து இடரின் அழுந்தினார்.  33 

 

 

தம்பியார் உளர் ஆக வேண்டும் 

  என வைத்த தயா 

உம்பர் உலகு அணைய உறு 

  நிலை விலக்க உயிர் தாங்கி 

அம் பொன் மணி நூல் தாங்காது 

  அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி

இம்பர் மனைத் தவம் 

  புரிந்து திலகவதியார் இருந்தார்.  34 

 

 

மாசின் மனத் துயர் ஒழிய 

  மருண் நீக்கியார் நிரம்பித் 

தேச நெறி நிலையாமை கண்டு 

  அறங்கள் செய்வார் ஆய்க் 

காசினி மேல் புகழ் விளங்க 

  நிதி அளித்துக் கருணையினால் 

ஆசில் அறச் சாலைகளும் 

  தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார்.  35 

 

 

கா வளர்த்தும் குளம் 

  தொட்டும் கடப்பாடு வழுவாமல் 

மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து 

  அளித்தும் விருந்து அளித்தும் 

நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் 

  நால் நிலத்து உள்ளோர் 

யாவர்க்கும் தவிராத ஈகை 

  வினைத் துறை நின்றார்.  36 

 

 

நில்லாத உலகு இயல்பு 

  கண்டு நிலையா வாழ்க்கை 

அல்லேன் என்று அறத் 

  துறந்து சமயங்களான வற்றின் 

நல்லாறு தெரிந்துணர நம்பர் 

  அருளாமை யினால் 

கொல்லாமை மறைந்து உறையும் 

  அமண் சமயம் குறுகுவார்.  37 

 

 

பாடலி புத்திரம் என்னும் பதி 

  அணைந்து சமண் பள்ளி 

மாடணைந்தார் வல்லமணர் மருங்கு 

  அணைந்து மற்றவர்க்கு 

வீடு அறியும் நெறி இதுவே 

  என மெய் போல் தங்களுடன் 

கூடவரும் உணர்வு கொளக் 

  குறி பலவும் கொளுவினார்.  38 

 

 

அங்கு அவரும் அமண் சமயத்து அரும் 

  கலை நூல் ஆன எலாம்

பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் 

  நெறியில் புலன் சிறப்பத் 

துங்க முழு உடல் சமணர் 

  சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத் 

தங்களின் மேலாம் தரும சேனர் 

  எனும் பெயர் கொடுத்தார்.  39 

 

 

அத்துறையின் மீக் கூரும் 

  அமைதியினால் அகல் இடத்தில் 

சித்த நிலை அறியாத தேரரையும் 

  வாதின் கண் 

உய்த்த உணர்வினில் வென்றே உலகின் 

  கண் ஒளி உடைய 

வித்தகராய் அமண் சமயத் 

  தலைமையினில் மேம் பட்டார்.  40 

 

 

அந் நெறியின் மிக்கார் அவர் 

  ஒழுக ஆன்ற தவச் 

செந்நெறியின் வைகும் 

  திலகவதியார் தாமும் 

தொன்னெறியின் சுற்றத் தொடர்பு 

  ஒழியத் தூய சிவ 

நன்னெறியே சேர்வதற்கு நாதன் 

  தாள் நண்ணுவார்.  41 

 

 

பேராத பாசப் பிணிப்பு 

  ஒழியப் பிஞ்ஞகன் பால் 

ஆராத அன்பு பெற 

  ஆதரித்த அம் மடவார் 

நீரார் கெடில வட நீள் 

  கரையில் நீடு பெரும் 

சீரார் திருவதிகை 

  வீரட்டானம் சேர்ந்தார்.  42 

 

 

சென்று திரு வீரட்டானத்து 

  இருந்த செம் பவளக் 

குன்றை அடி பணிந்து 

  கோதில் சிவ சின்னம் 

அன்று முதல் தாங்கி ஆர்வம் 

  உறத் தம் கையால் 

துன்று திருப் பணிகள் 

  செய்யத் தொடங்கினார்.  43 

 

 

புலர்வதன் முன் திருவலகு பணி 

  மாறிப் புனி அகன்ற 

நலம் மலி ஆன் சாணத்தால் 

  நன்கு திரு மெழுக்கிட்டு 

மலர் கொய்து கொடு வந்து 

  மாலைகளும் தொடுத்து அமைத்துப் 

பலர் புகழும் பண்பினால் 

  திருப்பணிகள் பல செய்தார்.  44 

 

 

நாளும் மிகும் பணி செய்து 

  குறைந்து அடையும் நன்னாளில் 

கேளுறும் அன்புற ஒழுகும் 

  கேண்மையினார் பின் பிறந்தார் 

கோளுறு தீவினை முந்தப் பர 

  சமயம் குறித்து அதற்கு 

மூளும் மனக் கவலையினால் முற்ற 

  வரும் துயர் உழந்து.  45 

 

 

தூண்டு தவ விளக்கு அனையார் 

  சுடர் ஒளியைத் தொழுது என்னை

ஆண்டு அருளும் நீராகில் 

  அடியேன் பின் வந்தவனை 

ஈண்டு வினைப் பர சமயக் 

  குழி நின்றும் எடுத்து ஆள 

வேண்டும் எனப் பல 

  முறையும் விண்ணப்பம் செய்தனரால்.  46 

 

 

தவம் என்று பாய் இடுக்கி 

  தலை பறித்து நின்று உண்ணும் 

அவம் ஒன்று நெறி வீழ்வான் 

  வீழாமே அருளும் எனச் 

சிவம் ஒன்று நெறி 

  நின்ற திலகவதியார் பரவப் 

பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் 

  திரு உள்ளம் பற்றுவார்.  47 

 

 

மன்னு தபோ தனியார்க்குக் கனவின் 

  கண் மழ விடையார் 

உன்னுடைய மனக் கவலை ஒழி 

  நீ உன் உடன் பிறந்தான் 

முன்னமே முனியாகி எனை 

  அடையத் தவம் முயன்றான் 

அன்னவனை இனிச் சூலை மடுத்து 

  ஆள்வம் என அருளி.  48 

 

 

பண்டு புரி நல் தவத்துப் 

  பழுதின் அளவில் இறை வழுவும் 

தொண்டரை ஆளத் தொடங்கும் 

  சூலை வேதனை தன்னைக் 

கண் தரு நெற்றியர் அருளக் கடும் 

  கனல் போல் அடும் கொடிய 

மண்டு பெரும் சூலை அவர் 

  வயிற்றின் இடைப் புக்கதால்.  49 

 

 

அடைவில் அமண் புரி தரும 

  சேனர் வயிற்று அடையும் அது 

வட அனலும் கொடு 

  விடமும் வச்சிரவும் பிறவுமாம் 

கொடிய எலாம் ஒன்றாகும் எனக் 

  குடரின் அகம் குடையப் 

படர் உழந்து நடுங்கி அமண் 

  பாழியறை இடை விழுந்தார்.  50 

 

 

அச் சமயத்து இடைத் தாம் 

  முன் அதிகரித்து வாய்த்து வரும் 

விச்சைகளால் தடுத்திடவும் மேல் 

  மேலும் மிக முடுகி 

உச்சம் உற வேதனை நோய் ஓங்கி 

  எழ ஆங்கு அவர் தாம் 

நச்சரவின் விடம் தலைக் கொண்டு 

  என மயங்கி நவையுற்றார்.  51 

 

 

அவர் நிலைமை கண்ட அதற்பின் 

  அமண் கையர் பலர் ஈண்டிக் 

கவர் கின்ற விடம் போல் முன் 

  கண்டு அறியாக் கொடும் சூலை 

இவர் தமக்கு வந்தது இனி 

  யாது செயல் என்று அழிந்தார் 

தவம் என்று வினைப் பெருக்கிச் 

  சார்பு அல்லா நெறிசார்வார்.  52 

 

 

புண் தலைவன் முருட்டு அமணர் 

  புலர்ந்து செயல் அறியாது 

குண்டிகை நீர் மந்திரித்துக் 

  குடிப்பித்தும் தணியாமை 

கண்டு மிகப் பீலி கொடு 

  கால் அளவும் தடவி இடவும் 

பண்டையினும் நோவு மிகப் 

  பரிபவத்தால் இடர் உழந்தார்.  53 

 

 

தாவாத புகழ்த் தரும 

  சேனருக்கு வந்த பிணி 

ஓவாது நின்று இடலும் 

  ஒழியாமை உணர்ந்தாராய் 

ஆ!  ஆ! நாம் என் செய்கோம் 

  என்று அழிந்த மனத்தினராய்ப் 

போவார்கள் இது நம்மால் போக்க 

  அரிதாம் எனப் புகன்று.  54 

 

 

குண்டர்களும் கை விட்டார் கொடும் 

  சூலை மிசைக் கொண்டு 

மண்டி மிக மேல் மேலும் 

  பெருகுதலால் மதி மயங்கிப் 

பண்டை உறவு உணர்ந்தார்க்குத் 

  திலகவதியார் உளராகக் 

கொண்டு அவர்பால் ஊட்டுவான் 

  தனைவிட்டார் குறிப்பு உணர்த்த.  55 

 

 

ஆங்கு அவன் போய்த் திருவதிகை 

  தணை அடைய அரும் தவத்தார்

பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு 

  அணையக் கண்டு இறைஞ்சி 

ஈங்கு யான் உமக்கு இளையார் 

  ஏவலினால் வந்தது எனத் 

தீங்கு உளவோ என 

  வினவ மற்றவனும் செப்புவான்.  56 

 

 

கொல்லாது சூலை நோய் 

  குடர் முடக்கித் தீராமை 

எல்லாரும் கை விட்டார் இது 

  செயல் என் முன் பிறந்த 

நல்லாள் பால் சென்று இயம்பி 

  நான் உய்யும்படி கேட்டு இங்கு 

அல்லாகும் பொழுது அணைவாய் 

  என்றார் என்று அறிவித்தான்.  57 

 

 

என்று அவன் முன் கூறுதலும் யான் 

  அங்கு உன் உடன் போந்து 

நன்று அறியா அமண் பாழி 

  நண்ணுகிலேன் எனும் மாற்றம் 

சென்று அவனுக்கு உரை 

  என்று திலகவதியார் மொழிய 

அன்று அவனும் மீண்டு போய்ப் 

  புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்.  58 

 

 

அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு 

  எய்தி இதற்கு இனி யான் 

எவ்வாறு செய்வன் என 

  ஈசர் அருள் கூடுதலால் 

ஒவ்வா இப் புன் சமயத்து 

  ஒழியா இத்துயர் ஒழியச் 

செவ்வாறு சேர் திலக வதியார் 

  தாள் சேர்வன் என.  59 

 

 

எடுத்த மனக் கருத்து உய்ய 

  எழுதலால் எழு முயற்சி 

அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் 

  திருவதிகை அணைவதனுக்கு 

உடுத்து உழலும் பாய் ஒழிய 

  உறி உறு குண்டிகை ஒழியத் 

தொடுத்த பீலியும் ஒழியப் 

  போவதற்குத் துணிந்து எழுந்தார்.  60 

 

 

பொய் தரும் மால் உள்ளத்துப் 

  புன் சமணர் இடம் கழிந்து 

மெய் தருவான் நெறி அடைவார் 

  வெண் புடைவை மெய் சூழ்ந்து 

கை தருவார் தமை ஊன்றிக் 

  காணாமே இரவின் கண் 

செய் தவ மாதவர் வாழும் 

  திருவதிகை சென்று அடைவார்.  61 

 

 

சுலவி வயிற்று அகம் கனலும் 

  சூலை நோயுடன் தொடரக் 

குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு 

  அணையக் குலவரை போன்று 

இலகு மணி மதில் சோதி 

  எதிர் கொள் திருவதிகையினில் 

திலக வதியார் இருந்த திரு 

  மடத்தைச் சென்று அணைந்தார்.  62 

 

 

வந்து அணைந்து திலகவதியார் 

  அடிமேல் உற வணங்கி 

நம் தமது குலம் செய்த 

  நல் தவத்தின் பயன் அனையீர் 

இந்த உடல் கொடும் சூலைக் 

  கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது 

உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து 

  அருளும் என உரைத்து.  63 

 

 

தாள் இணை மேல் விழுந்து 

  அயரும் தம்பியார் தமை நோக்கி 

ஆள் உடைய தம் பெருமான் 

  அருள் நினைந்து கை தொழுது 

கோளில் பரசமய நெறிக் 

  குழியில் விழுந்து அறியாது 

மூளும் அரும் துயர் உழந்தீர்! 

  எழுந்தீர்! என மொழிந்தார்.  64 

 

 

மற்ற வுரை கேட்டலுமே 

  மருண் நீக்கியார் தாமும் 

உற்ற பிணி உடல் நடுங்கி 

  எழுந்து தொழ உயர் தவத்தோர் 

கற்றை வேணியர் அருளே காணும் 

  இது கழல் அடைந்தோர் 

பற்று அறுப்பார் தமைப் பணிந்து 

  பணி செய்வீர் எனப் பணித்தார்.  65 

 

 

என்ற பொழுது அவர் அருளை 

  எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச 

நின்ற தபோதனியாரும் நின்மலன் 

  பேர் அருள் நினைந்து 

சென்று திரு வீரட்டம் 

  புகுவதற்குத் திருக் கயிலைக் 

குன்று உடையார் திரு நீற்றை 

  அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார்.  66 

 

 

திரு வாளன் திரு 

  நீறு திலகவதியார் அளிப்ப 

பெரு வாழ்வு வந்தது எனப் 

  பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு 

உருவார அணிந்து தமக்குற்ற 

  இடத்து உய்யும் நெறி 

தருவாராய்த் தம் முன்பு வந்தார் 

  பின் தாம் வந்தார்.  67 

 

 

நீறு அணிந்தார் அகத்து இருளும் 

  நிறை கங்குல் புறத்து இருளும்

மாற வரும் திருப் பள்ளி 

  எழுச்சியினில் மாதவம் செய் 

சீர் அடியார் திரு அலகும் 

  திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு 

ஆறு அணிந்தார் கோயிலின் உள் 

  அடைந்தவரைக் கொடு புக்கார்.  68 

 

 

திரைக் கெடில வீரட்டானத்து 

  இருந்த செங்கனக 

வரைச் சிலையார் பெரும் கோயில் 

  தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்

தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து 

  தம்பிரான் திரு அருளால் 

உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் 

  உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்.  69 

 

 

நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை 

  அன்பு உறுசிந்தையில் நேசம் மிக

மாற்றார் புரம் மாற்றிய வேதியரை 

  மருளும் பிணி மாயை அறுத்திடுவான்

கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் 

  எனநீடிய கோதில் திருப்பதிகம்

போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் 

  போமாறு எதிர் நின்று புகன்றனரால்.  70 

 

 

மன்னும் பதிகம் அது பாடியபின் வயிறு 

  உற்று அடு சூலை மறப்பிணிதான்

அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும் 

  அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்

செந் நின்ற பரம் பொருள் ஆனவர் 

  தம் திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்

முன் நின்ற தெருட்சி மருட்சியினால் 

  முதல்வன் கருணைக் கடல் மூழ்கினரே.  71 

 

 

அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடையப் 

  புளகம் கண் முகிழ்த்து அலரப்

பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழியப் 

  புவிமீது விழுந்து புரண்டு அயர்வார்

இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் 

  ஏறாத பெருந்திடர் ஏறிட நின்

தங்கும் கருணைப் பெரு வெள்ளம் இடத் 

  தகுமோ என இன்னன தாம் மொழிவார்.  72 

 

 

பொய் வாய்மை பெருக்கிய புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்

அவ்வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்

மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்

இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்கொல் எனத் தொழுவார்.  73 

 

 

மேவுற்ற இவ் வேலையில் நீடிய சீர் 

  வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்

பாவுற்று அலர் செந்தமிழின் சொல் 

  வளப் பதிகத் தொடைபாடிய பான்மையினால்

நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் 

  நின்நன்நாமம் நயப்புற மன்னுக என்று

யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் 

  இடையே ஒருவாய்மை எழுந்ததுவே.  74 

 

 

இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு 

  இறைஆகிய அன்பரும் இந்நெடுநாள்

சித்தம் திகழ் தீவினையேன் அடையும் 

  திருவோ இதுஎன்று தெருண்டு அறியா

அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் 

  கருணைத் திறமான அதன்

மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே 

  மேல்கொண்டு வணங்கினர் மெய்யுறவே.  75 

 

 

பரசும் கருணைப் பெரியோன் அருளப்பறி 

  புன்தலையோர் நெறி பாழ்பட வந்து

அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது 

  எனாஅடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்

முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் 

  முழவம் கிளை துந்துபி கண்டை உடன்

நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் 

  நெடுமா கடல் என்ன நிறைந்துளதே.  76 

 

 

மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் 

  சீர்வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்

மெய் உற்ற திருப்பணி செய்பவராய் 

  விரவும் சிவ சின்னம் விளங்கிடவே

எய்துற்ற தியானம் அறா உணர்வும் 

  ஈறு இன்றி எழும் திருவாசகமும்

கையில் திகழும் உழவாரமுடன் 

  கைக்கொண்டு கலந்து கசிந்தனரே.  77 

 

 

மெய்ம்மைப் பணி செய்த விருப்பு அதனால் 

  விண்ணோர் தனி நாயகனார் கழலில்

தம் இச்சை நிரம்ப வரம் பெறும் 

  அத்தன்மைப் பதி மேவியதா பதியார்

பொய்மைச் சமயப் பிணி விட்டவர் 

  முன்போதும் பிணி விட்டருளிப் பொருளா

எம்மைப் பணிகொள் கருணைத் திறம் 

  இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே.  78 

 

 

இன்ன தன்மையில் இவர் 

  சிவ நெறியினை எய்தி 

மன்னு பேர் அருள் பெற்று 

  இடர் நீங்கிய வண்ணம் 

பன்னு தொன்மையில் பாடலி 

  புத்திர நகரில் 

புன்மை யே புரி அமணர் 

  தாம் கேட்டு அது பொறாராய்.  79 

 

 

தரும சேனர்க்கு வந்த அத் 

  தடுப்ப அரும் சூலை 

ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் 

  அவர் உய்யப் போய்ப் 

பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் 

  பிணி ஒழித்து உய்ந்தார் 

மருவு நம் பெரும் சமயம் 

  வீழ்ந்தது என மருள்வார்.  80 

 

 

மலையும் பல் சமயங்களும் 

  வென்று மற்றவரால் 

நிலையும் பெற்ற இந்நெறி இனி 

  அழிந்தது என்று அழுங்கிக் 

கொலையும் பொய்மையும் இலம் 

  என்று கொடுமையே புரிவோர் 

தலையும் பீலியும் தாழ வந்து 

  ஒரு சிறை சார்ந்தார்.  81 

 

 

இவ்வகைப் பல அமணர்கள் 

  துயருன் ஈண்டி 

மெய் வகைத் திறம் 

  அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு 

சைவனாகி நம் விருத்தியும் 

  தவிர்க்கும் மற்று இனி நாம் 

செய்வது என் என 

  வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்.  82 

 

 

தவ்வை சைவத்து நிற்றலின் 

  தரும சேனரும் தாம் 

பொய் வகுத்தது ஓர் சூலை 

  தீர்ந்திலது எனப் போய் இங்கு 

எவ்வ மாக அங்கு எய்தி 

  நம் சமய அங்கனமும் 

தெய்வ நிந்தையும் செய்தனர் 

  எனச் சொலத் தெளிந்தார்.  83 

 

 

சொன்ன வண்ணமே செய்வது 

  துணிந்த துன் மதியோர் 

முன்னம் நாம் சென்று 

  முறைப்படுவோம் என முயன்றே 

இன்ன தன்மையில் இருள் 

  குழாம் செல்வது போல 

மன்னன் ஆகிய பல்லவன் 

  நகரில் வந்து அணைந்தார்.  84 

 

 

உடை ஒழிந்து ஒரு பேச்சு 

  இடை இன்றி நின்று உண்போர் 

கடை அணைந்தவன் வாயில் 

  காவலருக்கு நாங்கள் 

அடைய வந்தமை அரசனுக்கு 

  அறிவியும் என்ன 

இடை அறிந்து புக்க வரும் 

  தம் இறைவனுக்கு இசைப்பார்.  85 

 

 

அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் 

  மிக அழிந்து 

கொடி நுடங்கு திருவாயில் புறத்து 

  அணைந்தார் எனக் கூற 

வடி நெடுவேல் மன்னவனும் 

  மற்றவர் சார்பு ஆதலினால் 

கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் 

  கொல் எனக் கவன்று உரைத்தான்.  86 

 

 

கடை காவல் உடையார்கள் புகுத 

  விடக் காவலன் பால் 

நடை ஆடும் தொழில் உடையார் 

  நண்ணித் தாம் எண்ணியவாறு 

உடையார் ஆகிய தரும 

  சேனர் பிணி உற்றாராய்ச் 

சடையானுக்கு ஆளாய் நின் 

  சமயம் ஒழித்தார் என்றார்.  87 

 

 

விரை அலங்கல் பல்லவனும் அது 

  கேட்டு வெகுண்டு எழுந்து 

புரை உடைய மனத்தினராய் போவதற்குப் 

  பொய்ப் பிணி கொண்டு 

உரை சிறந்த சமயத்தை 

  அழித்து ஒழியப் பெறுவதே 

கரையில் தவத்தீர் இதனுக்கு என் 

  செய்வது எனக் கனன்றான்.  88 

 

 

தலை நெறி ஆகிய சமயம் 

  தன்னை அழித்து உன்னுடைய 

நிலை நின்ற தொல் வரம்பின் 

  நெறி அழித்த பொறி இலியை 

அலை புரிவாய் எனப் பரவி 

  வாயால் அஞ்சாது உரைத்தார் 

கொலை புரியா நிலை கொண்டு 

  பொய் ஒழுகும் அமண் குண்டர்.  89 

 

 

அருள் கொண்ட உணர்வு 

  இன்றி நெறிகோடி அறிவென்று 

மருள் கொண்ட மன்னவனும் 

  மந்திரிகள் தமை நோக்கித் 

தெருள் கொண்டோர் இவர் 

  சொன்ன தீயோனைச் செறுவதற்குப் 

பொருள் கொண்டு விடாது என் 

  பால் கொடுவாரும் எனப் புகன்றான்.  90 

 

 

அரசனது பணிதலை நின்ற 

  அமைச்சர்களும் அந்நிலையே 

முரசு அதிரும் தானையொடு முன் 

  சென்று முகில் சூழ்ந்து 

விரை செறியும் சோலை சூழ் 

  திருவதிகை தனை மேவி 

பரசமயப் பற்று அறுத்த 

  பான்மையினார் பால் சென்றார்.  91 

 

 

சென்று அணைந்த அமைச்சர் உடன் 

  சேனை வீரரும் சூழ்ந்து 

மின் தயங்கு புரிவேணி 

  வேதியனார் அடியவரை 

இன்று நுமை அரசன் அழைக்க 

  எமை விடுத்தான் போதும் என 

நின்றவரை நேர் நோக்கி நிறை 

  தவத்தோர் உரை செய்வார்.  92 

 

 

நாம் ஆர்க்கும் குடி அல்லோம் 

  என்று எடுத்து நான்மறையின் 

கோமானை நதியின் உடன் குளிர் 

  மதி வாழ் சடை யானைத் 

தேமாலைச் செந்தமிழின் செழும் 

  திருத் தாண்டகம் பாடி

ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் 

  என்று அருள் செய்தார்.  93 

 

 

ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட 

  வரும் அடி வணங்கி

வேண்டியவர்க் கொண்டு ஏக 

  விடை உகைத்தார் திருத்தொண்டர் 

ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் 

  உளன் என்று இசைந்து இருந்தார்

மூண்ட சினப் போர் மன்னன் 

  முன் அணைந்து அங்கு அறிவித்தார்.  94 

 

 

பல்லவனும் அது கேட்டுப் பாங்கு 

  இருந்த பாய் உடுக்கை 

வல் அமணர் தமை நோக்கி 

  மற்று அவனைச் செய்வது இனிச் 

சொல்லும் என அறம் துறந்து 

  தமக்கு உறுதி அறியாத

புல் அறிவோர் அஞ்சாது நீற்று 

  அறையில் இடப் புகன்றார்.  95 

 

 

அருகு அணைந்தார் தமை நோக்கி 

  அவ் வண்ணம் செய்க எனப் 

பெருகு சினக் கொடுங் கோலான் 

  மொழிந்திடலும் பெருந் தகையை 

உருகு பெரும் தழல் வெம்மை 

  நீற்று அறையின் உள் இருத்தித் 

திருகு கரும் தாள் கொளுவிச் 

  சேமங்கள் செய்து அமைத்தார்.  96 

 

 

ஆண்ட அரசு அதன் அகத்துள் 

  அணைந்த பொழுது அம்பலத்துத் 

தாண்டவம் முன் புரிந்து அருளும் 

  தாள் நிழலைத் தலைக் கொண்டே 

ஈண்டு வரும் துயர் உளவோ 

  ஈசன் அடியார்க்கு என்று 

மூண்டமனம் நேர் நோக்கி 

  முதல்வனையே தொழுது இருந்தார்.  97 

 

 

வெய்ய நீற்று அறையது தான் 

  வீங்கு இளவேனில் பருவம் 

தை வரும் தண் தென்றல் அணை 

  தண் கழுநீர்த் தடம் போன்று 

மொய் ஒளி வெண் நிலவு 

  அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய் 

ஐயர் திருவடி நீழல் 

  அருள் ஆகி குளிர்ந்ததே.  98 

 

 

மாசு இல் மதி நீடுபுனல் 

  மன்னி வளர் சென்னியனைப் 

பேச இனியானை உலக 

  ஆளுடைய பிஞ்ஞகனை 

ஈசனை எம்பெருமானை எவ் 

  உயிரும் தருவானை

ஆசை இல் ஆரா அமுதை 

  அடி வணங்கி இனிது இருந்தார்.  99 

 

 

ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் 

  உணர்வில் அமணரை அழைத்துப்

பாரும் இனி நீற்று அறையை 

  என உரைத்தான் பல்லவனும் 

கார் இருண்ட குழாம் போலும் 

  உரு உடைய கார் அமணர் 

தேரும் நிலை இல்லாதார் 

  நீற்று அறையைத் திறந்தார்கள்.  100 

 

 

ஆனந்த வெள்ளத்தின் இடை 

  மூழ்கி அம்பலவர் 

தேன் உந்து மலர் பாதத்து 

  அமுது உண்டு தெளிவு எய்தி 

ஊனம் தான் இலர் ஆகி 

  உவந்து இருந்தார் தமைக் கண்டே 

ஈனம் தங்கியது இலதாம் 

  என்ன அதிசயம் என்றார்.  101 

 

 

அதிசயம் அன்றிது முன்னை 

  அமண் சமயச் சாதகத்தால் 

இது செய்து பிழைத்து இருந்தான் 

  என வேந்தற்கு உரை செய்து 

மதி செய்வது இனிக் கொடிய 

  வல் விடம் ஊட்டுவது என்று 

முதிர வரும் பாதகத்தோர் 

  முடை வாயால் மொழிந்தார்கள்.  102 

 

 

ஆங்கு அது கேட்டலும் கொடிய 

  அமண் சார்பால்கெடு மன்னன்

ஓங்கு பெருமையினால் நஞ்சு 

  ஊட்டும் என உரைப்பத் 

தேங்காதார் திருநாவுக்கரையரை அத் 

  தீய விடப் 

பாங்கு உடைய பால் அடிசில் 

  அமுது செயப் பண்ணினார்.  103 

 

 

நஞ்சும் அமுது ஆம் எங்கள் 

  நாதன் அடியார்க்கு என்று 

வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் 

  வஞ்சனையாம் படி அறிந்தே 

செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் 

  உடையார் தீ விடத்தால் 

வெஞ்சமணர் இடுவித்த பால் 

  அடிசில் மிசைந்து இருந்தார்.  104 

 

 

பொடி ஆர்க்கும் திருமேனிப் 

  புனிதர்க்குப் புவனம்கள் 

முடிவாக்கும் துயர் நீங்க 

  முன்னை விடம் அமுதானால் 

படியார்க்கும் அறி அரிய 

  பசுபதியார் தம் உடைய 

அடியார்க்கு நஞ்சு அமுதம் 

  ஆவது தான் அற்புதமோ.  105 

 

 

அவ் விடத்தை ஆண்ட அரசு 

  அமுது செய்து முன் இருப்ப 

வெவ் விடமும் அமுது ஆயிற்று 

  என அமணர் வெருக் கொண்டே 

இவ் விடத்தில் இவன் பிழைக்கில் 

  எமக்கு எல்லாம் இறுதி எனத் 

தெவ் விடத்துச் செயல் 

  புரியும் காவலற்குச் செப்புவார்.  106 

 

 

நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் 

  சமயத்தினில் விடம் தீர் 

தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா 

  வகை தடுத்தான் 

எஞ்சும் வகை அவற்கு இலதேல் 

  எம் உயிரும் நின் முறையும் 

துஞ்சுவது திடம் என்றார் சூழ் 

  வினையின் துறை நின்றார்.  107 

 

 

மற்றவர் தம் மொழி கேட்டு 

  மதி கெட்ட மன்னவனும் 

செற்ற அவனை இனிக் கடியும் 

  திறம் எவ்வாறு எனச் செப்ப 

உற்றவரும் மந்திர சாதகம் 

  நாங்கள் ஒழித்திட நின் 

கொற்ற வயக் களிற்று எதிரே 

  விடுவது எனக் கூறினார்.  108 

 

 

மா பாவிக் கடை 

  அமணர் வாகீசத் திருவடியாம் 

கா பாலி அடியவர் பால் 

  கடக் களிற்றை விடுக என்னப் 

பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் 

  தொழிலோன் அவர் தம் மேல் 

கோ பாதி சயமான கொலைக் 

  களிற்றை விடச் சொன்னான்.  109 

 

 

கூடத்தைக் குத்தி ஒரு 

  குன்றம் எனப் புறப்பட்டு 

மாடத்தை மறித்திட்டு மண்டபங்கள் 

  எடுத்து எற்றித் 

தாடத்தில் பரிக்காரர் தலை 

  இடறிக் கடக் களிற்றின் 

வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது 

  ஒரு விறல் வேழம்.  110 

 

 

பாசத் தொடை நிகளத் 

  தொடர்பறியத் தறி முறியா 

மீ சுற்றிய பறவைக் 

  குலம் வெருவத் துணிவிலகா 

ஊசல் கரம் எதிர் சுற்றிட 

  உரறிப் பரி உழறா 

வாசக் கட மழை முற்பட 

  மதவெற்பு எதிர் வருமால்.  111 

 

 

இடி உற்று எழும் ஒலியில் 

  திசை இப உட்கிட அடியில் 

படி புக்கு உற நெளியப் 

  படர் பவனக் கதி விசையில் 

கடிது உற்று அடு செயலில் 

  கிளர் கடலில் படு கடையின் 

முடிவில் கனல் என முன் 

  சினம் முடுகிக் கடுகியதே.  112 

 

 

மாடு உற்று அணை இவுளிக் 

  குலம் மறியச் செறி வயிரக் 

கோடுற்று இரு பிளவிட்டு அறு 

  குறை கைக்கொடு முறியச் 

சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் 

  புடை அணி செற்று 

ஆடுற்று அகல் வெளியுற்று அது 

  அவ்வடர் கைக்குல வரையே.  113 

 

 

பாவக் கொடு வினை முற்றிய 

  படிறுற்று அடு கொடியோர் 

நாவுக்கரசர் எதிர் முற்கொடு 

  நணுகிக் கருவரை போல் 

ஏவிச் செறு பொருகைக் 

  கரியினை உய்த்திட வெருளார் 

சேவிற்று திகழ்பவர் பொன் கழல் 

  தெளிவு உற்றனர் பெரியோர்.  114 

 

 

அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை 

  தம் மேல் வரக் கண்டு 

விண்ணவர் தம் பெருமானை விடை 

  உகந்து ஏறும் பிரானைச் 

சுண்ண வெண் சந்தனச் சாந்து 

  தொடுத்த திருப் பதிகத்தை 

மண் உலகு உய்ய எடுத்து 

  மகிழ் உடனே பாடுகின்றார்.  115 

 

 

வஞ்சகர் விட்ட சினப் போர் 

  மதவெங் களிற்றினை நோக்கிச் 

செஞ்சடை நீள் முடிக் கூத்தர் 

  தேவர்க்கும் தேவர் பிரானார் 

வெம்ஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் 

  தம் அடியோம் நாம் 

அஞ்சுவது இல்லை என்று என்றே 

  அருந்தமிழ் பாடி உறைந்தார்.  116 

 

 

தண் தமிழ் மாலைகள் பாடித் 

  தம் பெருமான் சரணாகக் 

கொண்ட கருத்தில் இருந்து 

  குலாவிய அன்புறு கொள்கைத் 

தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து 

  எதிர் தாழ்ந்து நிலத்தில் 

எண் திசையோர்களும் காண 

  இறைஞ்சி எழுந்தது வேழம்.  117 

 

 

ஆண்ட அரசை வணங்கி அஞ்சி 

  அவ் வேழம் பெயரத் 

தூண்டிய மேல் மறப் பாகர் 

  தொடக்கி அடத்துத் திரித்து 

மீண்டும் அதனை அவர் மேல் 

  மிறை செய்து காட்டிட வீசி 

ஈண்டு அவர் தங்களையே கொன்று 

  அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே.  118 

 

 

ஓடி அருகர்கள் தம்மை 

  உழறி மிதித்துப் பிளந்து 

நாடிப் பலரையும் கொன்று 

  நகரம் கலங்கி மறுக 

நீடிய வேலை கலக்கும் 

  நெடும் மந்தரகிரி போல 

ஆடி அவ் யானையும் மன்னற்கு 

  ஆகுலம் ஆக்கியது அன்றே.  119 

 

 

யானையின் கையில் பிழைத்த வினை 

  அமண் கையர்கள் எல்லாம்

மானம் அழிந்து மயங்கி 

  வருந்திய சிந்தையர் ஆகித் 

தானை நில மன்னன் தாளில் 

  தனித் தனி வீழ்ந்து புலம்ப 

மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு 

  இனிச் செய்வது என் என்றான்.  120 

 

 

நங்கள் சமயத்தின் நின்றே 

  நாடிய முட்டி நிலையால் 

எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் 

  இவ் வண்ணம் நின் சீர் 

பங்கப் படுத்தவன் போகப் 

  பரிபவம் தீரும் உனக்குப் 

பொங்கழல் போக அதன் பின் 

  புகை அகன்றால் என என்றார்.  121 

 

 

அல்லிருள் அன்னவர் கூற அரும் 

  பெரும் பாவத்தவன் தான் 

தொல்லைச் சமயம் அழித்துத் 

  துயரம் விளைத்தவன் தன்னைச் 

சொல்லும் இனிச் செய்வது என்னச் 

  சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் 

கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் 

  இடைப் பாய்ச்சுவது என்றார்.  122 

 

 

ஆங்கு அது கேட்ட அரசன் 

  அவ்வினை மாக்களை நோக்கித் 

தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் 

  உறக் கொடு போகிப் 

பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் 

  பாசம் பிணித்து ஓர் படகில் 

வீங்கு ஒலி வேலையில் எற்றி 

  வீழ்த்துமின் என்று விடுத்தான்.  123 

 

 

அவ் வினை செய்திடப் போகும் 

  அவருடன் போயர் உகந்த 

வெவ்வினை யாளரும் சென்று 

  மேவிட நாவுக்கரசர் 

செவ்விய தம் திரு உள்ளம் 

  சிறப்ப அவருடன் சென்றார் 

பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி 

  முடித்தார் அப்பாதகர்.  124 

 

 

அப்பரிசு அவ்வினை முற்றி அவர் 

  அகன்று ஏகிய பின்னர் 

ஒப்பரும் ஆழ் கடல் புக்க 

  உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும் 

எப்பரிசு ஆயினும் ஆக 

  ஏத்துவன் எந்தையை என்று 

செப்பிய வண் தமிழ் தன்னால் 

  சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார்.  125 

 

 

சொல் துணை வேதியன் 

  என்னும் தூய் மொழி 

நல் தமிழ் மாலை 

  ஆம் நமச்சிவாய என்று 

அற்ற முன் காக்கும் 

  அஞ்சு எழுத்தை அன்பொடு 

பற்றி உணர்வினால் 

  பதிகம் பாடினார்.  126 

 

 

பெருகிய அன்பினர் 

  பிடித்த பெற்றியால் 

அருமலரோன் முதல் 

  அமரர் வாழ்த்துதற்கு 

அரிய அஞ்சு எழுத்தையும் 

  அரசு போற்றிடக் 

கரு நெடுங்கடலின் 

  உட் கல் மிதந்ததே.  127 

 

 

அப் பெருங்கல்லும் அங்கு 

  அரசு மேல் கொளத் 

தெப்ப மாய் மிதத்தலில் 

  செறிந்த பாசமும் 

தப்பியது அதன் மிசை 

  இருந்த தாவில் சீர் 

மெய்ப் பெரும் தொண்டனார் 

  விளங்கித் தோன்றினார்.  128 

 

 

இருவினைப் பாசமும் 

  மலக்கல் ஆர்த்தலின் 

வருபவக் கடலில் வீழ் 

  மாக்கள் ஏறிட 

அருளும் மெய் அஞ்செழுத்து 

  அரசை இக்கடல் 

ஒரு கல் மேல் ஏற்று 

  இடல் உரைக்க வேண்டுமோ.  129 

 

 

அருள் நயந்து அஞ்செழுத்து 

  ஏத்தப் பெற்ற அக் 

கருணை நாவரசினைத் 

  திரைக் கரங்களால் 

தெருள் நெறி நீர்மையின் 

  சிரத்தில் தாங்கிட 

வருணனும் செய்தனன் முன்பு 

  மா தவம்.  130 

 

 

வாய்ந்த சீர் வருணனே 

  வாக்கின் மன்னரைச் 

சேர்ந்தடை கருங்கலே 

  சிவிகை ஆயிட 

ஏந்தியே கொண்டு எழுந்து 

  அருள் வித்தனன் 

பூந்திருப் பாதிரிப் 

  புலியூர்ப் பாங்கரில்.  131 

 

 

அத் திருப் பதியினில் 

  அணைந்த அன்பரை 

மெய்த் தவக் குழாம் 

  எலாம் மேவி ஆர்த்தெழ 

எத் திசையைனும் அர 

  என்னும் ஓசைபோல் 

தத்து நீர்ப் பெருங்கடல் 

  தானும் ஆர்த்ததே.  132 

 

 

தொழும் தகை நாவினுக்கு 

  அரசும் தொண்டர் முன் 

செழும் திருப் பாதிரிப் 

  புலியூர்த் திங்கள் வெண் 

கொழுந்து அணி சடையாரைக் 

  கும்பிட்டு அன்புற 

விழுந்து எழுந்து அருள் 

  நெறி விளங்கப் பாடுவார்.  133 

 

 

ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் 

  ஆகி என எடுத்துத் 

தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் 

  அடியோங் கட்கு என்று 

வான் தாழ் புனல் கங்கை வாழ் 

  சடையானை மற்று எவ் உயிர்க்கும் 

சான்றாம் ஒருவனைத் தண் 

  தமிழ் மாலைகள் சாத்தினரே.  134 

 

 

மற்றும் இணையன வண் தமிழ் 

  மாலைகள் பாடி வைகி 

வெற்றி மழவிடை வீரட்டர் 

  பாதம் மிக நினைவால் 

உற்றதொர் காதலின் அங்கு நின்று 

  ஏகி ஒன்னார் புரங்கள் 

செற்றவர் வாழும் திருவதிகைப் 

  பதி சென்று அடைவார்.  135 

 

 

தேவர் பிரான் திரு மாணிக் 

  குழியும் தினை நகரும் 

மேவினர் சென்று விரும்பிய சொல் 

  மலர் கொண்டு இறைஞ்சிப் 

பூவலர் சோலை மணமடி 

  புல்லப் பொருள் மொழியின் 

காவலர் செல்வத் திருக் 

  கெடிலத்தைக் கடந்து அணைந்தார்.  136 

 

 

வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த 

  தீயம் இறைகள் எல்லாம் 

எஞ்ச வென்று ஏறிய இன் 

  தமிழ் ஈசர் எழுந்து அருள 

மஞ்சிவர் மாடத் திருவதிகைப் 

  பதி வாணர் எல்லாம் 

தம் செயல் பொங்கத் தழங்கு 

  ஒலி மங்கலம் சாற்றல் உற்றார்.  137 

 

 

மணி நெடுந் தோரணம் வண் 

  குலைப் பூகம் மடற் கதலி 

இணையுற நாட்டி எழு நிலைக் 

  கோபுரம் தெற்றி எங்கும் 

தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் 

  செஞ் சாந்து நீவி 

அணி நகர் முன்னை அணி 

  மேல் அணி செய்து அலங்கரித்தார்.  138 

 

 

மன்னிய அன்பின் வள நகர் 

  மாந்தர் வயங்கு இழையார் 

இன்னிய நாதமும் ஏழ் இசை 

  ஓசையும் எங்கும் விம்மப் 

பொன் இயல் சுண்ணமும் பூவும் 

  பொரிகளும் தூவி எங்கும் 

தொல் நகரின் புறம் சூழ்ந்து 

  எதிர் கொண்டனர் தொண்டரையே.  139 

 

 

தூய வெண் நீறு துதைந்த 

  பொன் மேனியும் தாழ் வடமும் 

நாயகன் சேவடி தைவரும் 

  சிந்தையும் நைந்து உருகிப் 

பாய்வது போல் அன்பு நீர் பொழி 

  கண்ணும் பதிகச் செஞ் சொல் 

மேய செவ்வாயும் உடையார் 

  புகுந்தனர் வீதி உள்ளே.  140 

 

 

கண்டார்கள் கை தலைமேல் குவித்து 

  இந்தக் கருணை கண்டால்

மிண்டாய செங்கை அமண்கையர் 

  தீங்கு விளைக்கச் செற்றம் 

உண்டா யினவண்ணம் எவ் வண்ணம் 

  என்று உரைப்பார்கள் பின்னும்

தொண்டு ஆண்டு கொண்ட 

  பிரானைத் தொழுது துதித்தனரே.  141 

 

 

இவ் வண்ணம் போல எனைப் 

  பல மாக்கள் இயம்பி ஏத்த 

மெய் வண்ண நீற்று ஒளி 

  மேவும் குழாங்கள் விரவிச் செல்ல 

அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் 

  வந்து எய்தி அம்பவளச் 

செவ் வண்ணர் கோயில் 

  திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே.  142 

 

 

உம்பர் தம் கோனை உடைய 

  பிரானை உள் புக்கு இறைஞ்சி 

நம்புறும் அன்பின் நயப்புறு 

  காதலினால் திளைத்தே 

எம் பெருமான் தனை ஏழையேன் 

  நான் பண்டு இகழ்ந்தது என்று 

தம் பரிவால் திருத் தாண்டகச் 

  செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்.  143 

 

 

அரி அயனுக்கு அரியானை 

  அடியவருக்கு எளியானை 

விரி புனல் சூழ் திருவதிகை 

  வீரட்டானத்து அமுதைத் 

தெரிவரிய பெரும் தன்மைத் 

  திருநாவுக் கரசு மனம் 

பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் 

  பணி செயும் நாள்.  144 

 

 

புல் அறிவில் சமணர்க்காப் 

  பொல்லாங்கு புரிந்து ஒழுகும் 

பல்லவனும் தன்னுடைய பழவினைப் 

  பாசம் பறிய 

அல்லல் ஒழிந்து அங்கு எய்தி 

  ஆண்ட அரசினைப் பணிந்து 

வல்லமணர் தமை நீத்து 

  மழவிடையோன் தாள் அடைந்தான்.  145 

 

 

வீடு அறியாச் சமணர் மொழி 

  பொய் என்று மெய் உணர்ந்த 

காடவனும் திருவதிகை நகரின் 

  கண் கண் நுதற்குப் 

பாடலி புத்திரத்தில் அமண் 

  பள்ளியொடு பாழிகளும் 

கூட இடித்துக் கொணர்ந்து 

  குண பரவீச்சரம் எடுத்தான்.  146 

 

 

இந் நாளில் திருப்பணிகள் 

  செய்கின்ற இன் தமிழுக்கு 

மன்னான வாகீசத் திருமுனியும் 

  மதிச் சடைமேல் 

பன்னாகம் அணிந்தவர் தம் பதி 

  பலவும் சென்று இறைஞ்சிச் 

சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு 

  செய்வான் தொடர்ந்து எழுவார்.  147 

 

 

திருவதிகைப் பதி மருங்கு 

  திரு வெண்ணெய் நல்லூரும் 

அருளும் திரு ஆமாத்தூர் 

  திருக்கோவலூர் முதலா 

மருவு திருப்பதி பிறவும் வணங்கி 

  வளத் தமிழ் பாடிப் 

பெருகு விருப்புடன் விடையார் 

  மகிழ் பெண்ணாகடம் அணைந்தார்.  148 

 

 

கார் வளரும் மாடங்கள் கலந்த 

  மறை ஒலி வளர்க்கும் 

சீர் உடை அந்தணர் வாழும் 

  செழும் பதியின் அகத்து எய்தி 

வார் சடையார் மன்னு 

  திருத் தூங்கானை மாடத்தைப் 

பார் பரவும் திருமுனிவர் 

  பணிந்து ஏத்திப் பரவினார்.  149 

 

 

புன் நெறியாம் அமண் சமயத் 

  தொடக்குண்டு போந்தவுடன் 

தன்னுடனே உயிர்வாழத் தரியேன் 

  நான் தரிப்பதனுக்கு 

என்னுடைய நாயக நின் இலச்சினை 

  இட்டு அருள் என்று 

பன்னு செழுந்தமிழ் மாலை 

  முன் நின்று பாடுவார்.  150 

 

 

பொன் ஆர்ந்த திருவடிக்கு என் 

  விண்ணப்பம் என்று எடுத்து 

முன் ஆகி எப் 

  பொருட்கும் முடிவாகி நின்றானைத் 

தன் ஆகத்து உமை 

  பாகம் கொண்டானைச் சங்கரனை 

நல் நாமத் திருவிருத்தம் 

  நலம் சிறக்கப் பாடுதலும்.  151 

 

 

நீடு திருத் தூங்கானை 

  மாடத்து நிலவு கின்ற 

ஆடக மேருச் சிலையான் 

  அருளால் ஓர் சிவபூதம் 

மாடொருவர் அறியாமே வாகீசர் 

  திருத் தோலில் 

சேடுயர் மூவிலைச் சூலம் சின 

  விடையின் உடன் சாத்த.  152 

 

 

ஆங்கவர் தம் திருத் தோளில் 

  ஆர்ந்த திரு இலச்சினையைத் 

தாம் கண்டு மனம் களித்துத் தம் 

  பெருமான் அருள் நினைந்து 

தூங்கருவி கண் பொழியத் 

  தொழுது விழுந்து ஆர்வத்தால் 

ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து 

  ஒழிந்தேன் என எழுந்தார்.  153 

 

 

தூங்கானை மாடத்துச் சுடர்க் 

  கொழுந்தின் அடிபரவிப் 

பாங்காகத் திருத் தொண்டு செய்து 

  பயின்று அமரும் நாள் 

பூங்கானம் மணம் கமழும் பொருவில் 

  திரு அரத் துறையும் 

தேங்காவின் முகில் உறங்கும் 

  திருமுது குன்றமும் பணிந்து.  154 

 

 

வண்தமிழ் மென் மலர் 

  மாலை புனைந்தருளி மருங்குள்ள 

தண் துறை நீர்ப் பதிகளிலும் 

  தனி விடையார் மேவி இடம் 

கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் 

  குண திசை மேல் 

புண்டரிகத் தடம் சூழ்ந்த 

  நிவாக் கரையே போதுவார்.  155 

 

 

ஆனாத சீர்த் தில்லை 

  அம்பலத்தே ஆடுகின்ற 

வானாறு புடை பரக்கும் மலர்ச் 

  சடையார் அடி வணங்கி 

ஊனாலும் உயிராலும் உள்ள 

  பயன் கொள நினைந்து 

தேனாரும் மலர்ச் சோலைத் 

  திருப்புலியூர் மருங்கு அணைந்தார்.  156 

 

 

நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் 

  ஆடிய திரு எல்லை பால் 

மேவித் தலம் உற மெய்யில் தொழுத 

  பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும் 

காவில் களி மயில் மகிழ் உற்று எதிர் 

  எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ் 

வாவித் தடமலர் வதனம் பொலிவுறு 

  மருதத் தண்பணை வழி வந்தார்.  157 

 

 

முருகில் செறி இதழ் முளரிப் படுகரில் 

  முது மேதிகள் புதுமலர் மேயும் 

அருகில் செறிவனம் என மிக்குயர் கழை 

  அளவில் பெருகிட வளர் இக்குப் 

பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன 

  பெரியோர் அவர் திருவடிவைக் கண்டு 

உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன 

  என முன்புள வள வயல் எங்கும்.  158 

 

 

அறிவில் பெரியவர் அயல் நெல் பணை 

  வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்

பிறவிப் பகை நெறி விடுவீர் 

  இருவினை பெருகித் தொடர்பிணி உறுபாசம் 

பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை பயில் 

  சூழ் சினை மிசை குயில் கூவும் 

செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு 

  திரு நந்தன வனம் எதிர் கண்டார்.  159 

 

 

அவர் முன் பணிவொடு தொழுது அங்கு 

  அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்

தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் 

  நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்

இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம் 

  என வந்து எதிர் அரகர என்றே 

சிவ முன் பயில் மொழி பகர் கின்றன 

  வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை.  160 

 

 

அஞ்சொல் திருமறை அவர் முன் பகர்தலும் 

  அவரும் தொழுது முன் அளிகூரும்

நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் 

  நிறை அன்பொடும் உரை தடுமாறச் 

செஞ்சொல் திருமறை மொழி அந்தணர் பயில் 

  தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில்

பொலி நெடு மதில் சூழ் குடதிசை 

  மணி வாயில் புறம் வந்துற்றார்.  161 

 

 

அல்லல் பவம் அற அருளும் தவ 

  முதல் அடியார் எதிர் கொள அவரோடும் 

மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் 

  வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார் 

கல்வித் துறை பல வரு மா மறை முதல் 

  கரை கண்டு உடையவர் கழல் பேணும் 

செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை 

  வளர் சிவமே நிலவிய திருவீதி.  162 

 

 

நவ மின் சுடர் மணி நெடு மாலையும் 

  நறு மலர் மாலையும் நிறை திருவீதிப் 

புவனங்களின் முதல் இமையோர் தடமுடி 

  பொருந்திய மணி போகட்டிப் 

பவனன் பணி செய வருணன் புனல் கொடு 

  பணி மாறவும் அவை பழுதாம் என்று 

எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு 

  இடுவார் குளிர்புனல் விடுவார்கள்.  163 

 

 

மேலம் பரதலம் நிறையும் கொடிகளில் 

  விரிவெங்கதிர் நுழைவது அரிதாகும்

கோலம் பெருகிய திருவீதியை முறை 

  குலவும் பெருமையர் பணிவுற்றே 

ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு 

  ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் 

ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் 

  உறமெய் கொடு தொழுதுள்புக்கார்.  164 

 

 

வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை 

  வலம் வந்து அலமரு வரை நில்லா

அளவில் பெருகிய ஆர்வத்து இடை எழும் 

  அன்பின் கடல் நிறை உடல் எங்கும் 

புளகச் செறி நிரை விரவத் திருமலி 

  பொன்கோபுரம் அது புகுவார் முன் 

களனில் பொலிவிடம் உடையார் நடநவில் 

  கனகப் பொது எதிர் கண்ணுற்றார்.  165 

 

 

நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி 

  நிறை அம்பலம் நினைவுற நேரே 

கூடும் படி வரும் அன்பால் இன்புறு 

  குணம் முன் பெறவரு நிலை கூடத் 

தேடும் பிரமனும் மாலும் தேவரும் 

  முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா 

ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம் 

  ஆரா வகை தொழுது ஆர்கின்றார்.  166 

 

 

கையும் தலை மிசை புனை அஞ்சலியன 

  கண்ணும் பொழி மழை ஒழியாதே 

பெய்யும் தகையன கரணங்களும் 

  உடன் உருகும் பரிவின 

பேறுஎய்தும் மெய்யும் தரைமிசை விழுமுன் 

  பெழுதரும் மின்தாழ் சடையொடு நின்றாடும்

ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர் 

  ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்.  167 

 

 

இத் தன்மையர் பல முறையும் தொழுது 

  எழஎன்று எய்தினை என மன்றாடும் 

அத்தன் திரு அருள் பொழியும் கருணையின் 

  அருள் பெற்றிட வரும் ஆனந்தம் 

மெய்த் தன்மை யினில் விருத்தத் திருமொழி 

  பாடிப் பின்னையும் மேல் மேலும் 

சித்தம் பெருகிய பரிவால் இன்புறு 

  திருநேரிசை மொழி பகர்கின்றார்.  168 

 

 

பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று 

  முன் எடுத்துப் பண்ணால் 

அத்தா உன் ஆடல் காண்பான் 

  அடியனேன் வந்தவாறு என்று 

இத்திறம் போற்றி நின்றே இன் 

  தமிழ் மாலைப் பாடி 

கைத் திருத் தொண்டு செய்யும் 

  காதலில் பணிந்து போந்தார்.  169 

 

 

நீடிய மணியின் சோதி நிறை 

  திரு முன்றின் மாடும் 

ஆடு உயர் கொடி சூழ் பொன் 

  தேர் அணி திரு வீதி உள்ளும் 

கூடிய பணிகள் செய்து 

  கும்பிடும் தொழிலர் ஆகிப் 

பாடிய புனித வாக்கின் 

  பணிகளும் பயிலச் செய்வார்.  170 

 

 

அருள் பெரு மகிழ்ச்சி பொங்க 

  அன்னம் பாலிக்கும் என்னும் 

திருக் குறுந் தொகைகள் பாடித் 

  திரு உழவாரங் கொண்டு 

பெருத்து எழு காதலோடும் பெரும் 

  திருத் தொண்டு செய்து 

விருப்புறு மேனி கண்ணீர் 

  வெண்ணீற்று வண்டலாட.  171 

 

 

மேவிய பணிகள் செய்து 

  விளங்குநாள் வேட்களத்துச் 

சேவுயர் கொடியார் தம்மைச் சென்று 

  முன் வணங்கிப் பாடிக் 

காவியம் கண்டார் மன்னும் 

  திருக்கழிப் பாலை தன்னில் 

நாவினுக்கு அரசர் சென்று 

  நண்ணினார் மண்ணோர் வாழ.  172 

 

 

சின விடை யேறுகைத் தோறும் 

  மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து 

வன பவள வாய்திறந்து வானவர்க்கும் 

  தான் அவனே என்கின்றாள் என்று 

அனைய திருப்பதிகம் உடன் அன்புறு 

  வண்தமிழ் பாடி அங்கு வைகி 

நினைவரியார் தமைப் போற்றி 

  நீடுதிருப்புலியூரை நினைந்து மீள்வார்.  173 

 

 

மனைப் படப்பில் கடல் கொழுந்து வளைசொரியும் 

  கழிப் பாலை மருங்கு நீங்கி

நனைச்சினை மென் குளிஞாழல் பொழில் 

  ஊடுவழி கொண்டு நண்ணும் போதில் 

நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு 

  அருளும் அம்பலத்து நிருத்தனாரைத் 

தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ 

  எனப்பாடி தில்லை சார்ந்தார்.  174 

 

 

அரியானை என்று எடுத்தே அடியவருக்கு 

  எளியானை அவர்தம் சிந்தை 

பிரியாத பெரிய திருத் தாண்டகச் 

  செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி 

விரியா நின்று எவ் உலகும் விளங்கிய 

  பொன் அம்பலத்து மேலி ஆடல் 

புரியா நின்றவர் தம்மைப் பணிந்து 

  தமிழால் பின்னும் போற்றல் செய்வார்.  175 

 

 

செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா 

  எறிக்கும் எனும் சிறந்த வாய்மை 

அருஞ்சொல் வளத் தமிழ் மாலை அதிசயமாம் 

  படி பாடி அன்பு சூழ்ந்த 

நெஞ்சு உருகப் பொழி புனல்வார் கண் 

  இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் 

தம் செயலின் ஒழியாத திருப்பணியும் 

  மாறாது சாரும் நாளில்.  176 

 

 

கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த 

  திருக்கழுமலத்தின் இருந்த செம்கண் 

விடை உகைத்தார் திரு அருளால் 

  வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும் 

அடைய நிறை சிவம் பெருக வளர் 

  ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த 

உடைய மறைப் பிள்ளையார் திருவார்த்தை 

  அடியார்கள் உரைப்பக் கேட்டார்.  177 

 

 

ஆழிவிடம் உண்ட வரை அம்மை 

  திருப்பால் அமுதம் உண்ட போதே 

ஏழ் இசை வண் தமிழ் மாலை 

  இவன் எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல 

காழி வரும் பெரும் தகை 

  சீர் கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர 

வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு 

  மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த.  178 

 

 

அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் 

  வணங்கி அருள் முன் பெற்றுப் 

பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி 

  புரண்டு வலம் கொண்டு போந்தே 

எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின் 

  எல்லையினை இறைஞ்சி ஏத்திச் 

செப்பரிய பெருமையினார் திரு நாரையூர் 

  பணிந்து பாடிச் செல்வார்.  179 

 

 

தொண்டர் குழாம் புடை சூழத் தொழுத 

  கரத்தொடு நீறு துதைந்த கோலம் 

கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து 

  உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத் 

தெண் திரைவாய்க் கல் மிதப்பில் 

  உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் 

வண் தமிழால் எழுது மறை மொழிந்த 

  பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்.  180 

 

 

நீண்ட வரை வில்லியார் வெஞ்சூலை 

  மடுத்து அருளி நேரே முன்னாள் 

ஆண்ட அரசு எழுந்து அருளக் 

  கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும் 

காண்டகைய பெரு விருப்புக் கைம் 

  மிக்க திருஉள்ளக் கருத்தினோடு 

மூண்ட அருள் மனத்து அன்பர் புடை 

  சூழ எழுந்து அருளி முன்னே வந்தார்.  181 

 

 

தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு 

  உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று

பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப் 

  பணிந்தவர்தம் கரங்கள் பற்றி 

எழுதரிய மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி 

  விடையின் மேல் வருவார்தம்மை 

அழுது அழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே 

  என அவரும் அடியேன் என்றார்.  182 

 

 

அம்பிகை செம் பொன் கிண்ணத்து அமுத 

  ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த 

செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு அரசர் 

  எனச் சிறந்த சீர்த்தி 

எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் 

  அரன் அடியார் இன்பம் எய்தி 

உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் 

  பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம்.  183 

 

 

பிள்ளையார் கழல் வணங்கப் பெற்றேன் என்று 

  அரசு உவப்பப் பெருகு ஞான 

வள்ளலார் வாகீசர் தமை வணங்கப் 

  பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க 

உள்ளம் நிறை காதலினால் ஒருவர் 

  ஒருவரில் கலந்த உண்மை யோடும் 

வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார் 

  கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் .  184 

 

 

அருள் பெருகு தனிக் கடலும் உலகுக்கு எல்லாம் 

  அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்

பொருள் சமய முதல் சைவ நெறி தான் 

  பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய

இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் 

  ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்

தெருள் கலை ஞானக் கன்றும் அரசும் சென்று 

  செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே.  185 

 

 

பண் பயில் வண்டு அறை சோலை சூழும் 

  காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு 

விண் பணிய ஓங்கு பெரு விமானம் தன்னை 

  வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்

சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் 

  தம்பிரானாரை நீர் பாடீர் என்னக் 

கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை 

  கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி.  186 

 

 

பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்று

  இருந்து அருளும் பிரான் முன் நின்று

பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும் 

  பார்கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி 

அரிய வகை புறம் போந்து பிள்ளையார் தம்

  திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து

மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் 

  வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்.  187 

 

 

அத்தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய 

  மகிழ்ச்சி அளவு இலாத

சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் 

  திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில் 

மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி நாட்டு

  மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற

மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு 

  விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்.  188 

 

 

ஆண்ட அரசு எழுந்து அருளக் கோலக் 

  காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு 

மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு 

  இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான

நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடூர் நீடு 

  திருக்குறுக்கை திரு நின்றி யூரும் 

காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் 

  கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்.  189 

 

 

மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து 

  விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக் 

காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்கரைத் 

  துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி

பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப் 

  பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே

ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து 

  பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார்.  190 

 

 

ஆவடு தண் துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற

  அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து 

மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும் 

  சந்தவிருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு

பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித் 

  தாமம்பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்

பூ வலயத்தவர் பரவப் பல நாள் தங்கிப் 

  புரிஉறு கைத்தொண்டு போற்றிச் செய்வார்.  191 

 

 

எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப் 

  பொன்னி இடைமருதைச் சென்று எய்திஅன்பினோடு 

மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி 

  வண்தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப் 

பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப் 

  போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து 

செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு 

  எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார்.  192 

 

 

சென்று சேர்ந்து திருச் சத்தி 

  முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை 

குன்ற மகள் தன் மனக் காதல் 

  குலவும் பூசை கொண்டு அருளும் 

என்றும் இனிய பெருமானை 

  இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள் 

முன்றில் அணைந்து செய்து தமிழ் 

  மொழி மாலைகளும் சாத்துவார்.  193 

 

 

கோவாய் முடுகி என்று எடுத்துக் 

  கூற்றம் வந்து குமைப்பதன் முன் 

பூவார் அடிகள் என்று அலைமேல் 

  பொறித்து வைப்பாய் எனப் புகன்று 

நாவார் பதிகம் பாடுதலும் 

  நாதன் தானும் நல்லூரில் 

வா வா என்றே அருள் 

  செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.  194 

 

 

நன்மை பெருகஅருள் நெறியே 

  வந்து அணைந்து நல்லூரின் 

மன்னு திருத் தொண்டனார் வணங்கி 

  மகிழ்ந்து எழும் பொழுதில் 

உன்னுடைய நினைப்பதனை முடிகின்றோம் 

  என்று அவர்தம் 

சென்னி மிசைப் பாத 

  மலர் சூட்டினான் சிவபெருமான்.  195 

 

 

நனைந்தனைய திருவடி என்தலைமேல் 

  வைத்தார் என்று 

புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி 

  இசைத்துப் புனிதர் அருள் 

நினைந்து உருகி விழுந்து எழுந்து 

  நிறைந்து மலர்ந்து ஒழியாத 

தனம் பெரிதும் பெற்று வந்த 

  வறியோன் போல் மனம் தழைத்தார் .  196 

 

 

நாவுக்கு மன்னர் திரு 

  நல்லூரில் நம்பர் பால் 

மேவுற்ற திருப் பணிகள் 

  மேவுற நாளும் செய்து 

பாவுற்ற தமிழ் மாலை பல

  பாடிப் பணிந்து ஏத்தித் 

தேவுற்ற திருத்தொண்டு செய்து 

  ஒழுகி செல்லு நாள் .  197 

 

 

கருகாவூர் முதலாகக் கண்ணுதலோன் 

  அமர்ந்து அருளும் 

திருவாவூர் திருப் பாலைத்துறை 

  பிறவும் சென்று இறைஞ்சிப் 

பெருகு ஆர்வத் திருத் தொண்டு 

  செய்து பெருந்திரு நல்லூர் 

ஒரு காலும் பிரியாதே 

  உள் உருகிப் பணிகின்றார்.  198 

 

 

ஆளுடைய நாயகன் தன் அருள் 

  பெற்று அங்கு அகன்று போய் 

வாளை பாய் புனல் பழனத் 

  திருப் பழனம் மருங்கு அணைந்து 

காளவிடம் உண்டு இருண்ட கண்டர் 

  பணிக் கலன் பூண்டு 

நீள் இரவில் ஆடுவார் கழல் 

  வணங்க நேர் பெற்றார்.  199 

 

 

அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் 

  அரனார் மகிழும் 

ஒப்பரிய தானங்கள் உள் 

  உருகிப் பணிந்தணைவார் 

மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் 

  தாம் மேவினார் 

செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் 

  ஊர் திங்களூர்.  200 

 

 

அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார் 

தம் தனயருடன் சாலை கூவல் 

  குளம் தரு தண்ணீர்ப் 

பந்தர் பல ஆண்ட அரசு 

  எனும் பெயரால் பண்ணினமை 

வந்து அணைந்த வாகீசர் கேட்டு 

  அவர் தம் மனை நண்ண.  201 

 

 

மற்றவரும் மனம் மகிழ்ந்து 

  மனைவியார் மைந்தர் பெரும் 

சுற்றமுடன் களி கூரத் தொழுது 

  எழுந்து சூழ்ந்து மொழிக் 

கொற்றவரை அமுது செயக் 

  குறை கொள்வார் இறைகொள்ளப் 

பெற்ற பெரும் தவத் தொண்டர் 

  திரு உள்ளம் பெறப் பெற்றார்.  202 

 

 

காண்டகைமை இன்றியுமுன் கலந்த 

  பெருங் கேண்மையினார் 

பூண்ட பெரும் காதலுடன் 

  போனகமும் கறி அமுதும் 

வேண்டுவன வெவ்வேறு விதங்கள் 

  பெற விருப்பினால் 

ஆண்ட அரசு அமுது செயத் 

  திரு அமுதாம் படி அமைத்து.  203 

 

 

திருநாவுக்கரசு அமுது செய்து 

  அருள மற்றவர் தம் 

பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை 

  அழைத்து அன்பு 

தருஞானத் திருமறையோர் 

  தண்டலையின் வண்கதலிக் 

குரு நாளக் குருத்து அரிந்து 

  கொண்டு வர தனிவிட்டார்.  204 

 

 

ஆங்கு அவனும் விரைந்து 

  எய்தி அம்மருங்கு தாழாதே 

பூங் கதலிக் குருத்து அரியப் 

  புகும் அளவில் ஒரு நாகம் 

தீங்கு இழைக்க அது பேணான் 

  திரு அமுது செய்து அருள 

ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு 

  ஒல்லை வந்து அணைந்தான்.  205 

 

 

தீய விடம் தலைக் கொள்ளத் 

  தெருமந்து செழும் குருத்தைத் 

தாய கரத்தினில் நீட்டித் தளர்ந்து 

  தனைத் தழல் நாகம் 

மேயபடி உரை செய்யான் விழக் 

  கண்டு கெட்டு ஒழிந்தோம் 

தூயவர் இங்கு அமுது செயத் 

  தொடங்கார் என்று அது ஒளித்தார்.  206 

 

 

தம் புதல்வன் சவம் 

  மறைத்துத் தடுமாற்றம் இலராகி 

எம் பெருமான் அமுது செய 

  வேண்டும் என வந்து இறைஞ்ச 

உம்பர் பிரான் திருத்தொண்டர் 

  உள்ளத்தில் தடுமாற்றம் 

நம்பர் திருவருளாலே அறிந்து 

  அருளி நவை தீர்ப்பார்.  207 

 

 

அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு 

  அளவு இறந்த கருணையராய்க்

கொன்றை நறும் சடையார் தம் 

  கோயிலின் முன் கொணர்வித்தே

ஒன்று கொலாம் எனப் பதிகம் 

  எடுத்து உடையான் சீர் பாடப் 

பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை 

  உணர்ந்து எழுந்து இருந்தான்.  208 

 

 

அரும் தனயன் உயிர் பெற்ற 

  அது கண்டும் அமுது செயாது 

இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் 

  உழந்தார் துயர் நீங்க 

வருந்தும் அவர் மனைப் 

  புகுந்து வாகீசத் திருமுனிவர் 

விருந்து அமுது செய்து அருளி 

  விருப்பினுடன் மேவும் நாள்.  209 

 

 

திங்களூர் தனில் நின்றும் 

  திருமறையோர் பின் செல்லப் 

பைங்கண் விடைத் தனிப்பாகர் 

  திருப்பழனப் பதி புகுந்து 

தங்கு பெரும் காதலொடும் 

  தம் பெருமான் கழல் சார்ந்து 

பொங்கிய அன்புற வணங்கி முன் 

  நின்று போற்றி இசைப்பார்.  210 

 

 

புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் 

  பொன் கழல் கீழ் 

அடை மாலைச் சீலம் உடை 

  அப்பூதி அடிகள் தமை 

நடைமாணச் சிறப்பித்து நன்மை 

  புரி தீந்தமிழின் 

தொடைமாலைத் திருப்பதிகச் 

  சொன்மாலை பாடினார்.  211 

 

 

எழும் பணியும் இளம்பிறையும் 

  அணிந்தவரை எம் மருங்கும் 

தொழும்பணி மேற் கொண்டு அருளி 

  திருச்சோற்றுத் துறை முதலாத் 

தழும்புறு கேண்மையில் நண்ணித் 

  தானங்கள் பல பாடிச் 

செம்பழனத்து இறை கோயில் திருத் 

  தொண்டு செய்து இருந்தார்.  212 

 

 

சால நாள் அங்கு அமர்ந்து 

  தம் தலைமேல் தாள் வைத்த 

ஆலமார் மணி மிடற்றார் அணி 

  மலர்ச் சேவடி நினைந்து 

சேலுலாம் புனல் பொன்னித் 

  தென்கரை ஏறிச் சென்று 

கோல நீள் மணி மாடத் 

  திரு நல்லூர் குறுகினார்.  213 

 

 

அங்கு அணைந்து தம் பெருமான் 

  அடி வணங்கி ஆராது 

பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி 

  இசைத்துப் பணி செயும் நாள்

தங்கு பெரும் காதலினால் 

  தாமரை மேல் விரிஞ்சனொடு 

செங்கண் மால் அறிவரியார் 

  திருவாரூர் தொழ நினைந்தார்.  214 

 

 

நல்லூரில் நம்பர் அருள் 

  பெற்றுப் போய்ப் பழையாறை 

பல்லூர் வெண்டலைக் கரத்தார் 

  பயிலும் இடம் பல பணிந்து 

சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் 

  சுழியைத் தொழுது ஏத்தி 

அல்லூர் வெண் பிறை அணிந்தார் 

  திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.  215 

 

 

நாலூர் தென் திருச்சேறை 

  குடவாயில் நறையூர் சேர் 

பாலூரும் இன் மொழியாள் 

  பாகனார் கழல் பரவி 

மேலூர்தி விடைக் கொடியார் மேவும் 

  இடம் பல பாடிக் 

சேலூர் தண் பணை சூழ்ந்த 

  தென் திரு வாஞ்சியம் அணைந்தார்.  216 

 

 

பெருவாச மலர்ச் சோலைப் பெரு 

  வேளூர் பணிந்து ஏத்தி 

முருகாரும் மலர்க் கொன்றை 

  முதல்வனார் பதி பிறவும் 

திருவாரும் விளமருடன் சென்று 

  இறைஞ்சி வாகீசர் 

மருவாரூர் எரித்தவர் தம் 

  திருவாரூர் வந்து அடைந்தார்.  217 

 

 

ஆண்ட அரசு எழுந்தருள 

  ஆரூரில் அன்பர்கள் தாம் 

நீண்ட சடை முடியார் பால் 

  நிறைந்த அருள் பெற்றுடையார் 

காண் தகு மாளிகை மாடம் 

  கவின் சிறந்து ஓங்கிட எங்கும் 

சேண் திகழ் வீதிகள் பொலியத் 

  திரு மலி மங்கலம் செய்தார்.  218 

 

 

வல் அமண் குண்டர் தம் 

  மாயை கடந்து மறி கடலில் 

கல்லே மிதப்பாகப் போந்தவர் 

  வந்தார் எனும் களிப்பால் 

எல்லையில் தொண்டர் எயில்புறம் 

  சென்று எதிர் கொண்டபோது 

சொல்லின் அரசர் வணங்கித் 

  தொழுது உரைசெய்து அணைவார்.  219 

 

 

பற்று ஒன்று இலாவரும் பாதகர் 

  ஆகும் அமணர் தம் பால் 

உற்ற பிணி ஒழிந்து உய்யப் 

  போந்தேன் பெறல் ஆவது ஒன்றே 

புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் 

  தொண்டராம் புண்ணியம் என்று

அற்ற உணர்வொடும் ஆரூர்த் 

  திருவீதி உள் அணைந்தார்.  220 

 

 

சூழும் திருத்தொண்டர் தம்முடன் 

  தோரண வாயில் நண்ணி 

வாழி திரு நெடும் தேவாசிரியன் 

  முன் வந்து இறைஞ்சி 

ஆழி வரைத் திரு மாளிகை 

  வாயில் அவை புகுந்து 

நீள் சுடர் மா மணிப் புற்று 

  உகந்தாரை நேர் கண்டு கொண்டார்.  221 

 

 

கண்டு தொழுது விழுந்து கர 

  சரண் ஆதி அங்கம் 

கொண்ட புளகங்களாக எழுந்து 

  அன்பு கூரக் கண்கள் 

தண்துளி மாரி பொழியத் 

  திரு மூலட்டானர் தம்மைப் 

புண்டரிகக் கழல் 

  போற்றித் திருத்தாண்டகம் புனைந்து.  222 

 

 

காண்டலே கருத்தாய் நினைந்து 

  என்னும் கலைப் பதிகம் 

தூண்டா விளக்கு அன்ன சோதி 

  முன் நின்று துதித்து உருகி 

ஈண்டு மணிக் கோயில் சூழ 

  வலம் செய்து இறைஞ்சி அன்பு 

பூண்ட மனத்தொடு நீள் 

  திருவாயில் புறத்து அணைந்தார்.  223 

 

 

செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின்முன் தேவ ஆசிரியன் சார்ந்து 

கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரைக் 

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய்கவர்ந்த கள்வனேன் என்று 

எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே.  224 

 

 

மார் பாரப் பொழி கண்ணீர் 

  மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில் 

சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் 

  மாலைகளும் செம் பொன் தாளே 

சார்வான திருமனமும் உழவாரத் 

  தனிப்படையும் தாமும் ஆகிப் 

பார் வாழத் திரு வீதிப் பணி 

  செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்.  225 

 

 

நீடு புகழ்த் திருவாரூர் நிலவு 

  மணிப்புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக் 

கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து 

  கும்பிட்டுக் கோதில் வாய்மைப் 

பாடு இளம் பூதத்தினான் எனும் 

  பதிகம் முதலான பலவும் பாடி 

நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் 

  கரைந்து உருகி நயந்து செல்வார்.  226 

 

 

நான் மறைநூல் பெருமை நமி நந்தி 

  அடிகள் திருத்தொண்டின் நன்மை 

பான்மை நிலையால் அவரைப் பரமர் 

  திருவிருத்தத்துள் வைத்துப் பாடி 

தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் 

  அரன் நெறியில் திகழும் தன்மை 

ஆன திறமும் போற்றி அணி வீதிப் 

  பணி செய்து அங்கு அமரும் நாளில்.  227 

 

 

நீர் ஆரும் சடை முடியார் நிலவு 

  திருவலி வலமும் நினைந்து சென்று 

வார் ஆரும் முலை மங்கை உமை 

  பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக் 

கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் 

  வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி 

ஆராத காதலினால் திருவாரூர் தனில் 

  மீண்டும் அணைந்தார் அன்றே.  228 

 

 

மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் 

  பெருமாள் பவனி தன்னில் 

தேவருடன் முனிவர்கள் முன் 

  சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து 

மூவுலகும் களி கூர வரும் பெருமை 

  முறைமை யெலாம் கண்டு போற்றி 

நாவினுக்குத் தனி அரசர் 

  நயக்குநாள் நம்பர்திரு அருளினாலே.  229 

 

 

திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ 

  பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும் 

விருப்புடைய உள்ளத்து மேவி எழும் 

  காதல் புரி வேட்கை கூர 

ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது 

  அகன்று அங்கு உள்ளம் வைத்துப் 

பொருப்பரையன் மடப் பாவை இடப்பாகர்பதி 

  பிறவும் பணிந்து போந்தார்.  230 

 

 

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி 

  அதன் கண் நின்றும் 

பன்னாகப் பூண் அணிவார் பயின்ற 

  திருப்பதி பலவும் பணிந்து செல்வார் 

புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் 

  வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி

மின் ஆரும் புரி முந்நூல் 

  முருகனார் திருமடத்தில் மேவும் காளை.  231 

 

 

ஆண்ட அரசு எழுந்து அருளி அணி 

  ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும் 

நீண்ட சுடர் மா மணியைக் 

  கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி 

மீண்டு அருளினார் என்று கேட்டு 

  அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும் 

ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை 

  சூழ எழுந்து அருளி எதிரே சென்றார்.  232 

 

 

கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் 

  எதிர் அணையும் காதல் கேட்டு

வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி 

  வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்

திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் 

  குழாம் இருதிறமும் சேர்ந்த போதில் 

இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி 

  அணைந்த போல் இசைந்த அன்றே.  233 

 

 

திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் 

  சிரபுரத்துத் தெய்வ வாய்மை 

பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் 

  எதிர்வணங்கி அப்பரே நீர் 

வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை 

  வகுத்து உரைப்பீர் என்று கூற 

அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை 

  அவரும் எதிர் அருளிச் செய்தார்.  234 

 

 

சித்தம் நிலாவும் தென் 

  திரு ஆரூர் நகராளும் 

மைத் தழை கண்டர் ஆதிரை 

  நாளின் மகிழ் செல்வம் 

இத் தகைமைத்து என்று என் 

  மொழிகேன்? என்று அருள் செய்தார் 

முத்து விதான மணிப் பொன் 

  கவரி மொழி மாலை.  235 

 

 

அம்மொழி மாலைச் செந்தமிழ் 

  கேளா அணி சண்பை 

மைம் மலர் கண்டத்து 

  அண்டர் பிரானார் மகனாரும் 

கொய்ம் மலர் வாவித் தென் 

  திரு ஆரூர் கும்பிட்டே 

உம்முடன் வந்து இங்கு உடன் 

  அமர்வேன் என்று உரை செய்தார்.  236 

 

 

மா மதில் ஆரூர் மன்னரை 

  அங்கு வணங்கச் செந் 

தாமரை ஓடைச் சண்பையர் 

  நாதன் தான் ஏக 

நாமரு சொல்லின் நாதரும் 

  ஆர்வத்தொடு புக்கார் 

பூ மலர் வாசம் தண் 

  பணை சூழும் புகலூரில்.  237 

 

 

அத் திரு மூதூர் 

  மேவிய நாவுக் கரசுந்தம் 

சித்தம் நிறைந்தே அன்பு 

  தெவிட்டும் தெளிவெள்ளம் 

மொய்த்து இழி தாரைக் கண் 

  பொழி நீர் மெய்ம் முழுதாரப் 

பைத் தலை நாகப் பூண் 

  அணிவாரைப் பணி உற்றார்.  238 

 

 

தேவர் பிரானைத் தென் 

  புகலூர் மன்னிய தேனைப் 

பா இயல் மாலைச் 

  செந்தமிழ் பாடிப் பரிவோடு 

மேவிய காலம் தோறும் 

  விருப்பில் கும்பிட்டே 

ஓவுதல் ஓவு திருப்பணி 

  செய்து அங்கு உறைகின்றார்.  239 

 

 

சீர் தரு செங்காட்டங் 

  குடி நீடும் திருநள்ளாறு 

ஆர் தரு சோலை 

  சூழ்தரு சாந்தை அயவந்தி 

வார் திகழ் மென் முலையான் 

  ஒரு பாகன் திருமருகல் 

ஏர் தரும் அன்பால் 

  சென்று வணங்கி இன்புற்றார்.  240 

 

 

அப்படிச் சின்னாள் சென்ற பின் 

  ஆரூர் நகர் ஆளும் 

துப்பு உறழ் வேணிக் கண் 

  நுதலாரைத் தொழுது இப்பால் 

மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் 

  வேணு புரத்து எங்கள் 

பொன் புரி முந்நூல் 

  மார்பரும் வந்தார் புகலூரில்.  241 

 

 

பிள்ளையார் எழுந்து அருளப் 

  பெரு விருப்பால் வாகீசர்

உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு 

  அங்கு உடன்உறையும் நாளின்கண்

வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று 

  அவர் பால் எழுந்து அருள 

எள் அரும் சீர் நீல 

  நக்கர் தாமும் எழுந்து அருளினார்.  242 

 

 

ஆங்கு அணையும் அவர்களுடன் 

  அப்பதியில் அந்தணராம் 

ஓங்கு புகழ் முருகனார் 

  திரு மடத்தில் உடனாகப் 

பாங்கில் வரும் சீர் அடியார் 

  பலரும் உடன் பயில் கேண்மை 

நீங்கரிய திருத் தொண்டின் 

  நிலை உணர்ந்து நிகழ்கின்றார்.  243 

 

 

திருப் பதிகச் செழுந்தமிழின் 

  திறம் போற்றி மகிழ்வுற்றுப் 

பொருப்பு அரையன் மடப்பாவை இடப் 

  பாகர் பொன் தாளில் 

விருப்பு உடைய திருத் தொண்டர் 

  பெருமையினை விரித்து உரைத்து அங்கு

ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் 

  உறைவின் பயன் பெற்றார்.  244 

 

 

அந் நாளில் தமக்கு ஏற்ற 

  திருத் தொண்டின் நெறி ஆற்ற 

மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் 

  பதி எனைப் பலவும் 

முன்னாகச் சென்று ஏத்தி 

  முதல்வன் தாள் தொழுவதற்குப் 

பொன்னாரும் மணி மாடப் பூம் 

  புகலூர் தொழுது அகன்றார்.  245 

 

 

திரு நீல நக்க 

  அடிகள் சிறுத்தொண்டர் முருகனார் 

பெருநீர்மை அடியார்கள் பிறரும் 

  விடை கொண்டு ஏக 

ஒரு நீர்மை மனத்து 

  உடைய பிள்ளையாருடன் அரசும் 

வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் 

  திரு அம்பர் வணங்கினார்.  246 

 

 

செங்குமுத மலர் வாவித் 

  திருக்கடவூர் அணைந்து அருளிப் 

பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் 

  அடிகள் தொழுது ஏத்திக்

குங்குலியக் கலயனார் திருமத்தில் 

  குறை அறுப்ப 

அங்கு அவர்பால் சிவன் 

  அடியாருடன் அமுது செய்தார்கள்.  247 

 

 

சீர் மன்னும் திருக் 

  கடவூர்த் திருமயானமும் வணங்கி 

ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல 

  பாடி இனிது அமர்ந்து 

கார் மன்னும் கறைக் கண்டர் 

  கழல் இணைகள் தொழுது அகன்று 

தேர் மன்னும் மணி வீதித் 

  திரு ஆக்கூர் சென்று அணைந்தார்.  248 

 

 

சார்ந்தார் தம் புகல் இடத்தைத் 

  தான் தோன்றி மாடத்துக் 

கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து 

  கோதில் தமிழ்த்தொடை புனைந்து 

வார்ந்து ஆடும் சடையார் தம் 

  பதி பலவும் வணங்கி உடன் 

சேர்ந்தார்கள் தம் பெருமான் 

  திரு வீழி மிழலையினை.  249 

 

 

வீழி மிழலை வந்து அணைய 

  மேவும் நாவுக்கு அரசினையும் 

காழி ஞானப் பிள்ளையையும் 

  கலந்த உள்ளக் காதலினால் 

ஆழி வலவன் அறியாத 

  அடியார் அடியார் அவர்களுடன் 

வாழி மறையோர் எதிர் கொண்டு 

  வணங்க வணங்கி உள்புக்கார்.  250 

 

 

மாட வீதி அலங்கரித்து மறையோர் 

  வாயின் மணி விளக்கு 

நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து 

  நிறை பொன் குடம் எடுத்துப் 

பீடு பெருகும் வாகீசர் 

  பிள்ளையாரும் தொண்டர்களும் 

கூட மகிழ்ந்து விண் இழிந்த 

  கோயில் வாயில் சென்று அணைந்தார்.  251 

 

 

சென்று உள் புகுந்து திருவீழி 

  மிழலை அமர்ந்த செங்கனகக் 

குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் 

  வலமா வந்து திரு 

முன்றில் வணங்கி முன் எய்தி 

  முக்கண் செக்கர் சடை மவுலி 

வென்றி விடையார் சேவடிக் கீழ் 

  விழுந்தார் எழுந்தார் விம்மினார்.  252 

 

 

கைகள் குவித்துக் கழல் போற்றிக் 

  கலந்த அன்பு கரைந்து உருக 

மெய்யில் வழியும் கண் அருவி 

  விரவப் பரவும் சொல் மாலை 

செய்ய சடையார் தமைச் சேரார் 

  தீங்கு நெறி சேர்கின்றார் என்று 

உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து 

  அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க.  253 

 

 

முன்னாள் அயனும் திருமாலும் 

  முடிவும் முதலும் காணாத

பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ 

  நீர் மிழலையினில் போற்றிப் 

பல் நாள் பிரியா நிலைமையினால் 

  பயிலக் கும்பிட்டு இருப்பாராய் 

அந்நாள் மறையோர் திருப்பதியில் 

  இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள்.  254 

 

 

சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து 

  சில நாள் சென்று அதன் பின்

மாரி சுருங்கி வளம் பொன்னி 

  நதியும் பருவம் மாறுதலும் 

நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் 

  பல மன் உயிர்கள் எல்லாம் 

பாரின் மலிந்த இலம் பாட்டில் 

  படர் கூர் வறுமை பரந்ததால்.  255 

 

 

வையம் எங்கும் வற்கடம் ஆய்ச் 

  செல்ல உலகோர் வருத்தமுற 

நையும் நாளில் பிள்ளையார் 

  தமக்கும் நாவுக்கு அரசருக்கும் 

கையில் மானும் மழுவும் உடன் 

  காணக் கனவில் எழுந்து அருளிச் 

செய்ய சடையார் திருவீழி மிழலை 

  உடையார் அருள் செய்வார்.  256 

 

 

கால நிலைமையால் உங்கள் கருத்தில் 

  வாட்டம் உறீர் எனினும்

ஏல உம்மை வழி படுவார்க்கு 

  அளிக்க அளிக்கின்றோம் என்று 

கோலம் காண எழுந்து அருளிக் 

  குலவும் பெருமை இருவர்க்கும் 

ஞாலம் அறியப் படிக்காசு 

  வைத்தார் மிழலை நாயகனார்.  257 

 

 

விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் 

  கிழக்கும் மேற்கும் பீடத்தில்

அண்ணல் புகலி ஆண் தகையார் 

  தமக்கும் ஆண்ட அரசினுக்கும் 

நண்ணும் நாள்கள் தொறும் காசு 

  படிவைத்து அருள நானிலத்தில் 

எண்ணில் அடியார் உடன் அமுது 

  செய்து அங்கு இருந்தார் இருவர்களும்.  258 

 

 

அல்லார் கண்டத்து அண்டர் பிரான் 

  அருளால் பெற்ற படிக்காசு 

பல்லாறு இயன்ற வளம் பெருகப் 

  பரமன் அடியார் ஆனார்கள் 

எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு 

  பொழுதும் பறை நிகழ்த்திச்

சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் 

  துயர்கூர் வறுமை தொலைத்திட்டார்.  259 

 

 

ஈசர் மிழலை இறையவர் பால் 

  இமையப் பாவை திருமுலைப் பால்

தேசம் உய்ய உண்டவர் தாம் 

  திருமா மகனார் ஆதலினால் 

காசு வாசியுடன் பெற்றார் கைத் 

  தொண்டு ஆகும் படிமையினால் 

வாசி இல்லாக் காசு படி 

  பெற்று வந்தார் வாகீசர்.  260 

 

 

ஆறு சடை மேல் அணிந்து அருளும் 

  அண்ணல் வைத்த படிக் காசால்

ஈறு இலாத பொருள் உடைய 

  இருவர் உடைய திருமடங்கள் 

சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து 

  உண்ண உண்ணத் தொலையாதே 

ஏறு பெருமை புவி போற்ற 

  இன்புற்று இருக்கும் அந் நாளில்.  261 

 

 

காலம் தவறு தீர்ந்து எங்கும் 

  கலிவான் பொழிந்த புனல் கலந்து

ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி 

  உணவு பெருகி நலம் சிறப்ப 

மூல அன்பர் இருவர்களும் மொழி 

  மாலைகளும் பல சாத்தி 

நீல கண்டர் உறை பதிகள் 

  பிறவும் வணங்க நினைவுற்றார்.  262 

 

 

வாய்ந்த மிழலை மா மணியை 

  வணங்கிப் பிரியா விடை கொண்டு

பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் 

  போற்றிப் புனிதர் வாழ்பதிகள் 

ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை 

  வண்தமிழ்கள் புனைந்து போய்ச்

சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு 

  எல்லை இல்லாச் சீர்த்தியினார்.  263 

 

 

மன்றல் விரவு மலர்ப் புன்னை 

  மணம் சூழ் சோலை உப்பளத்தின்

முன்றில் தோறும் சிறு மடவார் 

  முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக் 

குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் 

  புகுந்து வலம் கொண்டு 

சென்று சேர்ந்தார் தென் புகலிக் 

  கோவும் அரசும் திரு முன்பு.  264 

 

 

பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு 

  நெருங்கும் அப் பதியில் 

அரவச் சடை அந்தணனாரை அகில 

  மறைகள் அர்ச்சனை செய்து 

உரவக் கதவம் திருக் காப்புச் 

  செய்த அந்நாள் முதல் இந்நாள் 

வரையும் அடைத்தே நிற்கின்ற மணி 

  நீள் வாயில் வணங்குவார்.  265 

 

 

தொல்லை வேதம் திருக் காப்புச் 

  செய்த வாயில் தொடர் அகற்ற

வல்ல அன்பர் அணையாமை மருங்கு 

  ஓர் வாயில் வழி எய்தி 

அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் 

  தொழுவார் ஆம்படி கண்டு 

எல்லை இல்லாப் பெரும் புகழார் 

  இதனை அங்குக் கேட்டு அறிந்தார்.  266 

 

 

ஆங்கு அப் பரிசை அறிந்து 

  அருளி ஆழித்தோணி புரத்து அரசர்

ஓங்கு வேதம் அருச்சனை செய் 

  உம்பர் பிரானை உள் புக்குத் 

தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத் 

  திருமுன் கதவம் திருக்காப்பு 

நீங்கப் பாடும் அப்பர் என 

  நீடும் திருநாவுக்கு அரசர்.  267 

 

 

உண்ணீர்மையினால் பிள்ளையார் உரைசெய்து 

  அருள அதனாலே

பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் 

  பாடப் பயன் துய்ப்பான் 

தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் 

  தாழ்க்கத் திருக் கடைக்காப்பு 

எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் 

  என்று பாடி இறைஞ்சுதலும்.  268 

 

 

வேத வளத்தின் மெய்ப் பொருளின் 

  அருளால் விளங்கும் மணிக் கதவம்

காதல் அன்பர் முன்பு திருக் 

  காப்பு நீங்கக் கலை மொழிக்கு 

நாதர் ஞான முனிவருடன் 

  தொழுது விழுந்தார் ஞாலத்துள் 

ஓத ஒலியின் மிக்கு எழுந்த 

  தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும்.  269 

 

 

அன்பர் ஈட்டம் களி சிறப்ப 

  ஆண்ட அரசும் சிவக் கன்றும் 

இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து 

  உள் புகுந்து தம் பெருமான் 

முன்பு பணிந்து போற்றி இசைத்துப் 

  பரவி மொழி மாலைகள் பாடி 

என்பு கரைய உள் உருகி 

  இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார்.  270 

 

 

புறம்பு நின்று வாகீசர் புனிதர் 

  அருளால் இக் கதவம் 

திறந்தும் அடைத்தும் செல்லும் 

  நெறி திருந்தமலையாள் திருமுலையில்

கறந்த ஞானம் குழைத்த அமுது 

  செய்த புகலிக் கவுணியரை 

நிறைந்த கதவம் அடைக்கும் வகை 

  நீரும் பாடி அருளும் என.  271 

 

 

சண்பை ஆளும் தமிழ் விரகர் 

  தாமும் திரு நாவுக்கரசர் 

பண்பின் மொழிந்த உரை கொண்டு 

  பதிகம் பாடும் அவ்வளவில் 

கண் பொற்பமைந்த நுதல் 

  காளகண்டர் அருளால் கடிதுடனே 

திண் பொன் கதவம் திருக் காப்புச் 

  செய்தது எடுத்த திருப் பாட்டில்.  272 

 

 

அது கண்டு உடைய பிள்ளையார் 

  தாமும்ஆண்ட அரசும் மகிழ்ந்து

இது நம் பெருமான் அருள் செய்யப் 

  பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்

பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் 

  தொழுது பணிவு உற்றார் 

எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் 

  என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல்.  273 

 

 

அங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டுஅடியார் 

  எல்லாம் அதிசயித்துப்

பொங்கு புளகம் எய்திட மெய் 

  பொழியும் கண்ணீர் பரந்து இழிய 

எங்கும் நிகர் ஒன்று இல்லாத 

  இருவர் பாதம் இறைஞ்சினார் 

நங்கள் புகலிப் பெரும் தகையும் 

  அரசும் மடத்தில் நண்ணிய பின்.  274 

 

 

அரிதில் திறக்கத் தாம் பாட 

  அடைக்க அவர் பாடிய எளிமை 

கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது 

  அயர்ந்தேன் எனக் கவன்று 

பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் 

  அணைந்து பேழ் கணித்து 

மருவும் உணர்வில் துயில் கொண்டார் 

  வாய்மை திறம்பா வாகீசர்.  275 

 

 

மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் 

  பாதம் மனத்தின் கண்

உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை 

  ஓர் பாகம் உடையவர் தாம்

பொன்னின் மேனி வெண் நீறு 

  புனைந்த கோலப் பொலிவினொடும் 

துன்னி அவர்க்கு வாய் மூரில் 

  இருப்போம் தொடர வா என்றார்.  276 

 

 

போதம் நிகழ வா என்று போனார் 

  என் கொல் எனப் பாடி 

ஈது எம்பெருமான் அருளாகில் யானும் 

  போவேன் என்று எழுந்து 

வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து 

  போக அவர் முன்னே 

ஆதி மூர்த்தி முன் காட்டும் 

  அவ் வேடத்தால் எழுந்து அருள.  277 

 

 

சீரார் பதியின் நின்று எழுந்து 

  செல்லும் திருநாவுக்கு அரசர் 

ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண 

  எய்தா வாறே போல் 

நீரார் சடையார் எழுந்து அருள 

  நெடிது பின்பு செல்லும் அவர் 

பேராளரை முன் தொடர்ந்து அணையப் 

  பெறுவார் எய்தப் பெற்று இலரால்.  278 

 

 

அன்ன வண்ணம் எழுந்து அருளி 

  அணித்தே காட்சி கொடுப்பார் போல்

பொன்னின் கோயில் ஒன்று எதிரே 

  காட்டி அதனுள் புக்கு அருளத் 

துன்னும் தொண்டர் அம் மருங்கு 

  விரைந்து தொடரப் போந்த படி 

மன்னும் புகலி வள்ளலார் தாமும் 

  கேட்டு வந்து அணைந்தார்.  279 

 

 

அழைத்துக் கொடு போந்து அணியார் போல் 

  காட்டி மறைந்தார் என அயர்ந்து

பிழைத்துச் செவ்வி அறியாதே 

  திறப்பித் தேனுக்கே அல்லால் 

உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு 

  உறைக்கப் பாடி அடைப்பித்த

தழைத்த மொழியார் உப்பாலார் தாம் 

  இங்கு எப்பால் மறைவது என.  280 

 

 

மாட நீடு திருப்புகலி மன்னர் 

  அவர்க்கு மால் அயனும் 

நேடி இன்னங் காணாதார் நேரே 

  காட்சி கொடுத்து அருள 

ஆடல் கண்டு பணிந்து ஏத்தி 

  அரசும் காணக் காட்டுதலும் 

பாட அடியார் என்று எடுத்துப் 

  பரமர் தம்மைப் பாடினார்.  281 

 

 

பாடும் தமிழ் மாலைகள் கொண்டு 

  பரமர் தாமும் எழுந்து அருள

நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் 

  கோயில் வலம் செய்து 

சூடும் பிறையார் பெரும் தொண்டர் 

  தொழுது போற்றித் துதி செய்து 

நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து 

  அந் நகரில் உடன் உறைந்தார்.  282 

 

 

ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே 

  அங்கண் இனிது அமர்ந்து 

பூண்ட காதல் பொங்கி எழ 

  வாய் மூர் அடிகள் போற்றி 

மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி 

  ஞான முனிவர் ஒடு 

மீண்டு வந்து திருமறைக் காடு 

  எய்தி விமலர் தாள் பணிந்தார்.  283 

 

 

ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு 

  ஆன பணி செய்து அமரும் நாள்

சீத மதி வெண் குடை 

  வளவர் மகளார் தென்னன் தேவியாம் 

கோதில் குணத்துப் பாண்டி மா 

  தேவியார் முன் குலச்சிறையார் 

போத விட்டார் சிலர் வந்தார் 

  புகலி வேந்தர் தமைக் காண.  284 

 

 

வந்து சிவனார் திருமறைக் காடு 

  எய்தி மன்னு வேணுபுரி 

அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் 

  பால் எய்தி அடி வணங்க 

சிந்தை மகிழ்ந்து தீது இன்மை 

  வனவத் தீங்கும் உளவாமோ 

இந்த உலகம் உய வந்தீர் இரு 

  தாள் நினைவார்க்கு என்று உரைப்பார்.  285 

 

 

சைவ நெறி வைதிகம் நிற்கச் 

  சழக்கு நெறியைத் தவம் என்னும்

பொய் வல் அமணர் செயல் தன்னைப் 

  பொறுக்க கில்லோம் எனக் கேட்டே

அவ் வன் தொழிலோர் செயல் 

  மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத்

தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் 

  சண்பைத் திரு மறையோர்.  286 

 

 

ஆய பொழுது திரு நாவுக்கரசு 

  புகலி ஆண் தகைக்குக் 

காய மாசு பெருக்கி உழல் 

  கலதி அமணர் கடுவினை செய் 

மாயை சாலம் மிக வல்லார் அவர் 

  மற்று என்னை முன் செய்த 

தீய தொழிலும் பல கெட்டேன் 

  சொல்ல இசையேன் யான் என்றார்.  287 

 

 

என்று கூற எல்லை இலா 

  நீறு போற்றும் இருவரையும் 

சென்று காணும் கருத்து உடையேன் 

  அங்குத் தீங்கு புரி அமணர் 

நின்ற நிலைமை அழிவித்துச் சைவ 

  நெறி பாரித்து அன்றி 

ஒன்றும் செய்யேன் ஆணை உமது 

  என்றார் உடைய பிள்ளையார்.  288 

 

 

போமா துணிந்து நீர் அங்குப் 

  போகப் போதா அவ் அமணர் 

தீ மாயையினை யானே போய்ச் 

  சிதைத்து வருகின்றேன் என்ன 

ஆமாறு எல்லாம் உரைத்து அவரை 

  மறுக்க மாட்டது அரசு இருப்பத் 

தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் 

  போனார் ஞானத் தலைவனார்.  289 

 

 

வேணு புரக்கோன் எழுந்து அருள 

  விடைகொண்டு இருந்த வாகீசர்

பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் 

  தம்மைப் போற்றி இசைத்துப்

பேணி இருந்து அங்கு உறையும் 

  நாள் பெயர்வார் வீழிமிழலை அமர் 

தாணுவின் தன் செய்ய கழல் 

  மீண்டும் சார நினைக்கின்றார்.  290 

 

 

சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் 

  சோதி அருள் பெற்று அகன்று போய்

வேலை விடம் உண்டவர் வீழி 

  மிழலை மீண்டும் செல்வன் என 

ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் 

  பிறவும் தாம் பணிந்து 

சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் 

  தலைவர் மிழலை வந்து அடைந்தார்.  291 

 

 

வீழி மிழலை தனிப் பணிந்து 

  வேத முதல்வர் தாம் இருப்ப 

ஆழி வலம் ஏந்திய அரியால் 

  ஆகாசத்தின் நின்று இழிந்த 

வாழி மலர்ந்த கோயில்தனில் 

  மன்னும் பொருளை போற்றிசைத்துத் 

தாழும் நாளில் பிறபதியும் பணியும் 

  காதல் தலை நிற்பார்.  292 

 

 

பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை 

  போய்ப் பணிவார் பொற்பு அமைந்த

ஆவுக்கு அருளும் ஆவடு தண் 

  துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி

நாவுக் கரசர் ஞானப் போன 

  கர்க்குச் செம் பொன் ஆயிரமும் 

பாவுக்கு அளித்த திறம் போற்றிப் 

  போந்து பிறவும் பணிகின்றார்.  293 

 

 

செய்ய சடையார் பழையாறை எய்த 

  அதனில் செல் பொழுதில் 

மையல் அமணர் மறைத்த 

  வடதளியின் மன்னும் சிவனாரைக் 

கைகள் கூப்பித் தொழுது அருளக் 

  கண்டவாற்றால் அமணர்கள் தம் 

பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் 

  பொறாத உள்ளம் மிகப் புழுங்கி.  294 

 

 

அந்த விமானம் தனக்கு அருகா 

  ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்

கந்தம் மலரும் கடிக் கொன்றை 

  முடியார் செய்ய கழல் உன்னி 

மந்த அமணர் வஞ்சனையால் 

  மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் 

பந்தம் கொண்ட குண்டர் திறம் 

  பாற்றும் என்று பணிந்து இருந்தார்.  295 

 

 

வண்ணம் கண்டு நான் உம்மை 

  வணங்கி அன்றிப் போகேன் என்று

எண்ண முடிக்கும் வாகீசர் 

  இருந்தார் அமுது செய்யாதே 

அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு 

  அரசு தம்மைப் பணிவதற்குத் 

திண்ணமாக மன்னனுக்குக் கனவில் 

  அருளிச் செய்கின்றார்.  296 

 

 

அறிவில் அமணர் நமை மறைப்ப 

  இருந்தோம் என்று அங்கு அடையாளக்

குறிகள் அறியச் செய்து அருளி 

  நம்மை அரசு கும்பிடுவான் 

நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் 

  போக்கு என்று அருள் புரிய 

செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் 

  செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி.  297 

 

 

கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் 

  கூடக் கடிது எய்தி 

அண்டர் பெருமான் அருள் செய்த 

  அடையாளத்தின் வழி கண்டு 

குண்டர் செய்த வஞ்சணையைக் குறித்து 

  வேந்தன் குலவு பெரும் 

தொண்டர் தம்மை அடி வணங்கித் 

  தொக்க அமணர் தூர் அறுத்தான்.  298 

 

 

ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் 

  ஆயிரமும் மாய்ந்தற் பின்

மேன்மை அரசன் ஈசர்க்கு 

  விமானம் ஆக்கி விளக்கியபின் 

ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு 

  நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச

ஞான அரசும் புக்கு இறைஞ்சி 

  நாதர் முன்பு போற்றுவார்.  299 

 

 

தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் 

  சாதி அமணர் மறைத்தாலும்

நிலை இலாதார் நிலைமையினால் 

  மறைக்க ஒண்ணுமோ என்னும் 

விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் 

  விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே

இலை கொள் சூலப் படையார் சேர் 

  இடங்கள் பிறவும் தொழ அணைவார்.  300 

 

 

பொங்கு புனலார் பொன்னியில் 

  இரண்டு கரையும் பொருவிடையார்

தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் 

  தமிழ் மாலைகளும் சாத்திப் போய்

எங்கும் நிறைந்த புகழ் ஆளர் 

  ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச் 

செங்கண் விடையார் திருவானைக் காவின் 

  மருங்கு சென்று அணைந்தார்.  301 

 

 

சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் 

  செஞ்சொல் மாலை பல பாடி

இலங்கு சடையார் எறும்பியூர் 

  மலையும் இறைஞ்சிப் பாடியபின்

மலர்ந்த சோதித் திருச்சிராப்பள்ளி 

  மலையும் கற்குடியும்

நலம்கொள் செல்வத் திருப்பராய்த் 

  துறையும் தொழுவான் நண்ணினார்.  302 

 

 

மற்றப் பதிகள் முதலான மருங்கு 

  உள்ளனவும் கை தொழுது 

பொன் புற்று அமைந்த திருப்பணிகள் 

  செய்து பதிகம் கொடு போற்றி 

உற்ற அருளால் காவிரியை ஏறி 

  ஒன்னார் புரம் எரியச் 

செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் 

  சென்று சேர்கின்றார்.  303 

 

 

வழி போம் பொழுது மிக இளைத்து 

  வருத்தம் உற நீர் வேட்கையொடும்

அழிவாம் பசி வந்து அணைந்திடவும் 

  அதற்குச் சித்தம் அலையாதே 

மொழி வேந்தரும் முன் எழுந்து 

  அருள முருகுஆர் சோலைப் பைஞ்ஞீலி

விழி ஏந்திய நெற்றியினார் தம் 

  தொண்டர் வருத்தம் மீட்பாராய்.  304 

 

 

காவும் குளமும் முன் சமைத்துக் 

  காட்டி வழி போம் கருத்தினால்

மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் 

  பொதி சோறும் கொண்டு 

நாவின் தனி மன்னவர்க்கு எதிரே 

  நண்ணி இருந்தார் விண்ணின் மேல்

தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி 

  ஏனமும் காண்பு அரியவர் தாம்.  305 

 

 

அங்கண் இருந்த மறையவர் பால் 

  ஆண்டஅரசும் எழுந்து அருள

வெங்கண் விடை வேதியர் நோக்கி 

  மிகவும் வழிவந்து இளைத்து இருந்தீர்

இங்கு என் பாலே பொதி சோறு 

  உண்டு இதனைஉண்டு தண்ணீர் இப்

பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் 

  போக்கிப் போவீர் எனப் புகன்றார்.  306 

 

 

நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் 

  அருள்என்று அறிந்தார் போல்

உண்ணும் என்று திருமறையோர் 

  உரைத்துப் பொதிசோறு அளித்தலுமே

எண்ண நினையாது எதிர் வாங்கி 

  இனிதாம் அமுது செய்து இனிய 

தண்ணீர் அமுது செய்து அருளித் 

  தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்.  307 

 

 

எய்ப்பு நீங்கி நின்றவரை 

  நோக்கி இருந்த மறையவனார் 

அப்பால் எங்கு நீர் போவது 

  என்றார் அரசும் அவர்க்கு எதிரே 

செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் 

  போவது என்று உரைப்ப 

ஒப்பு இலாரும் யான் அங்குப் 

  போகின்றேன் என்று உடன் போந்தார்.  308 

 

 

கூட வந்து மறையவனார் 

  திருப்பைஞ்ஞீலி குறுகியிட 

வேடம் அவர் முன் மறைத்தலுமே 

  மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்

ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் 

  அளித்த கருணை எனப் 

பாடல் புரிந்து விழுந்து எழுந்து 

  கண்ணீர் மாரிபயில் வித்தார் .  309 

 

 

பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் 

  பரமர் கோயில் சென்று எய்தி

மைஞ் ஞீலத்து மணி கண்டர் 

  தம்மை வணங்கி மகிழ் சிறந்து 

மெய்ஞ் ஞீர்மையினில் அன்புருக 

  விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக்

கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு 

  செய்து காதலுடன் இருந்தார்.  310 

 

 

நாதர் மருவும் திருமலைகள் நாடும் 

  பதிகள் பல மிகவும் 

காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த 

  இசை வண் தமிழ் பாடி 

மாதோர் பாகர் அருளாலே 

  வடபால் நோக்கி வாகீசர் 

ஆதி தேவர் அமர்ந்த 

  திரு அண்ணாமலையை நண்ணினார்.  311 

 

 

செங்கண் விடையார் திரு அண்ணா 

  மலையைத் தொழுது வலம் கொண்டு

துங்க வரையின் மிசை ஏறி 

  தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும் 

அங்கண் அரசைத் தொழுது 

  எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர் 

தங்கு பிறப்பே வீட்டினுக்கு 

  மேலாம் பெருமை சாதித்தார்.  312 

 

 

அண்ணாமலை மலை மேல் அணிமலையை 

  ஆரா அன்பின் அடியவர் தம்

கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் 

  கடலில் வந்து எழுந்த 

உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு 

  உருகும் சிந்தை உடன் 

பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் 

  பணிந்து பரவிப் பணி செய்தார்.  313 

 

 

பணியார் வேணிச் சிவ பெருமான் 

  பாதம்போற்றிப் பணி செயும் நாள்

மணியார் கண்டத்து எம் பெருமான் 

  மண் மேல்மகிழும் இடம் எங்கும்

தணியாக் காதலுடன் சென்று வணங்கித் 

  தக்க பணி செய்வார் 

அணியார் தொண்டைத் திருநாட்டில் 

  அருளால் அணைவார் ஆயினார்.  314 

 

 

காதல் செய்யும் கருத்தின் உடன் 

  காடும் மலையும் கான் ஆறும் 

சூதமலி தண் பணைப் பதிகன் 

  பலவும் கடந்து சொல்லினுக்கு 

நாதர் போந்து பெரும் தொண்டை 

  நன்னாடு எய்தி முன் ஆகச் 

சீத மலர் மென் சோலை சூழ் 

  திரு ஓத்தூரில் சென்று அடைந்தார்.  315 

 

 

செக்கர் சடையார் திரு ஓத்தூர்த் 

  தேவர் பிரானார் தம் கோயில் 

புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் 

  போற்றிக் கண்கள் புனல் பொழிய 

முக் கண் பிரானை விரும்பும் 

  மொழித்திருத் தாண்டகங்கள் முதலாகத் 

தக்க மொழி மாலைகள் சாத்திச் 

  சார்ந்து பணி செய்து ஒழுகுவார்.  316 

 

 

செய்ய ஐயர் திரு ஓத்தூர் 

  ஏத்திப் போந்து செழும் புவனம் 

உய்ய நஞ்சு உண்டு அருளும் 

  அவர் உறையும் பதிகள்பல வணங்கித் 

தையல் தழுவக் குழைந்த பிரான் 

  தங்கும் தெய்வப்பதி என்று 

வையம் முழுதும் தொழுது ஏத்தும் 

  மதில் சூழ்காஞ்சி மருங்கு அணைந்தார்.  317 

 

 

ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் 

  தம் பேர் அருளினால் 

சூலை மடுத்து முன் ஆண்ட 

  தொண்டர் வரப்பெற்றோம் என்று 

காலை மலரும் கமலம் போல் 

  காஞ்சி வாணர் முகம் எல்லாம் 

சால மலர்ந்து களி சிறப்பத் 

  தழைத்த மனங்கள் தாங்குவார்.  318 

 

 

மாட வீதி மருங்கு எல்லாம் 

  மணி வாயில்களில் தோரணங்கள் 

நீடு கதலியுடன் கமுகு நிறைத்து 

  நிறை பொற்குடம் தீபம் 

தோடு குலவு மலர் மாலை 

  சூழ்ந்த வாசப் பந்தர்களும் 

ஆடு கொடியும் உடன் எடுத்து 

  அங்கு அணிநீள் காஞ்சி அலங்கரித்தார்.  319 

 

 

தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து 

  சொல்லுக்கு அரசர் பால் 

கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் 

  வீதி பணி செய்யும் 

அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு 

  முதல் ஆம் அவை ஏந்தி 

இண்டை புனைந்த சடை முடியார்க்கு 

  அன்பர் தம்மை எதிர் கொண்டார்.  320 

 

 

எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் 

  தம்மை இறைஞ்சி எழுந்து அருளி 

மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் 

  மறுகு உள் போந்து வானநதி 

குதி கொண்டு இழிந்த சடைக் 

  கம்பர் செம்பொன் கோயில் குறுகினார் 

அதிர் கொண்டு அலை நேர் 

  மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர்.  321 

 

 

திரு வாயிலினைப் பணிந்து எழுந்து 

  செல்வத் திரு முன்றிலை அணைந்து 

கருவார் கச்சி ஏகம்பர் கனக 

  மணி மாளிகை சூழ்ந்து 

வருவார் செம் பொன் மலை வல்லி 

  தழுவக் குழைந்த மணி மேனிப் 

பெரு வாழ்வினை முன் கண்டு 

  இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார்.  322 

 

 

வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் 

  கால் தோறும் வரும் புளகம் 

ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப 

  அன்பு கரைந்து புள் அலைப்பச் 

சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் 

  திளைப்பத் திருவேகம்பர் தமை 

நேர்ந்த மனத்தில் உற வைத்து 

  நீடும் பதிகம் பாடுவார்.  323 

 

 

கரவாடும் வன் நெஞ்சர்க்கு 

  அரியானை என்று எடுத்துப் 

பரவாய சொல் மாலைத் திருப் 

  பதிகம் பாடிய பின் 

விரிவார் தம் புரம் எரித்த 

  விடையவனார் வெள் எயிற்றின் 

அரவு ஆரம் புனைந்தவர் தம் 

  திருமுன்றில் புறத்து அணைந்தார்.  324 

 

 

கையார்ந்த திருத்தொண்டு கழிய 

  மிகும் காதலோடும் 

செய்யா நின்றே எல்லாச் 

  செந்தமிழ் மாலையும் பாடி 

மையார்ந்த மிடற்றர் திரு 

  மயானத்தை வலம் கொண்டு 

மெய்யார்வம் உறத் தொழுது 

  விருப்பினோடு மேவு நாள்.  325 

 

 

சீர் வளரும் மதில் கச்சி நகர்த் 

  திரு மேல் தளி முதலாம் 

நீர் வளரும் சடையவர் தாம் 

  நிலவி உறை ஆலயங்கள் 

ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி 

  ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் 

சார்வுறு மாலைகள் சாத்தித் 

  தகும் தொண்டு செய்திருந்தார்.  326 

 

 

அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து 

  உறையும் நாளின் கண் 

மன்னு திரு மாற் பேறு 

  வந்து அணைந்து தமிழ் பாடிச் 

சென்னி மிசை மதி புனைவார் 

  பதி பலவும் சென்று இறைஞ்சித் 

துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த 

  பெரும் காதலினால்.  327 

 

 

ஏகம்பன் காண் அவன் என் 

  எண்ணத்தான் எனப் போற்றிப் 

பாகம் பெண் உருவானைப் பைங் 

  கண் விடை உயர்த்தானை 

நாகம் பூண் உகந்தானை நலம் 

  பெருகும் திரு நீற்றின் 

ஆகந்தோய் அணியானை அணைந்து 

  பணிந்து இன்புற்றார் .  328 

 

 

திருக்கச்சி ஏகம்பம் பணிந்து 

  ஏத்தித் திங்களார் 

நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு 

  பதி தொழ நினைவார் 

வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் 

  வயல்விளைக்கும் நாட்டு இடை போய்ப்

பருக்கைத் திண் களிற்று உரியார் 

  கழுக் குன்றின் பாங்கு அணைந்தார்.  329 

 

 

நீடு திருக் கழுக் குன்றில் 

  நிருத்தனார் கழல் வணங்கிப் 

பாடு தமிழ்த் தொடை புனைந்து 

  பாங்கு பல பதிகளிலும் 

சூடும் இளம் பிறை முடியார் 

  தமைத் தொழுது போற்றிப் போய் 

மாடு பெரும் கடல் உடுத்த 

  வான்மியூர் மருங்கு அணைந்தார்.  330 

 

 

திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து 

  பணிந்த அன்பினொடும் 

பெரு வாய்மைத் தமிழ்பாடி 

  அம் மருங்கு பிறப்பு அறுத்துத் 

தருவார் தம் கோயில் பல சார்ந்து 

  இறைஞ்சித் தமிழ் வேந்தர் 

மருவாரும் மலர்ச் சோலை 

  மயிலாப்பூர் வந்து அடைந்தார்.  331 

 

 

வரை வளர் மா மயில் 

  என்ன மாடமிசை மஞ்சாடும் 

தரை வளர் சீர்த் திருமயிலைச் 

  சங்கரனார் தாள் வணங்கி 

உரை வளர் மாலைகள் 

  அணிவித்து உழவாரப் படை ஆளி 

திரை வளர் வேலைக் கரை 

  போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார்.  332 

 

 

ஒற்றியூர் வள நகரத்து ஒளி 

  மணி வீதிகள் விளக்கி 

நற்கொடி மாலைகள் பூகம் நறும் 

  கதலி நிரை நாட்டிப் 

பொற்குடங்கள் தூபங்கள் 

  தீபங்கள் பொலிவித்து 

மற்றவரை எதிர் கொண்டு கொடு 

  புக்கார் வழித் தொண்டர்.  333 

 

 

திரு நாவுக் கரசரும் அத் 

  திரு ஒற்றியூர் அமர்ந்த 

பெரு நாகத்தின் சிலையார் 

  கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு 

ஒரு ஞானத் தொண்டர் உடன் 

  உருகி வலம் கொண்டு அடியார் 

கரு நாமம் தவிர்ப்பாரைக் 

  கை தொழுது முன் வீழ்ந்தார்.  334 

 

 

எழுதாத மறை அளித்த 

  எழுத்து அறியும் பெருமானைத் 

தொழுத ஆர்வம் உற நிலத்தில் 

  தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம் 

முழுது ஆய பரவசத்தின் 

  முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க 

விழுதாரை கண் பொழிய 

  விதிர்ப்பு உற்று விம்மினார்.  335 

 

 

வண்டு ஓங்கும் செங் கமலம் 

  என எடுத்து மனம் உருகப் 

பண் தோய்ந்த சொல் 

  திருத் தாண்டகம் பாடிப் பரவுவார் 

விண் தோய்ந்த புனல் கங்கை 

  வேணியார் திரு உருவம் 

கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை 

  தொழுது புறத்து அணைந்தார்.  336 

 

 

விளங்கு பெருந் திருமுன்றில் 

  மேவும் திருப்பணி செய்தே 

உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு 

  திருக் குறுந் தொகைகள் 

களங்கொள் திரு நேரிசைகள் பல 

  பாடிக் கை தொழுது 

வளங்கொள் திருப் பதியதனில் 

  பல நாள்கள் வைகினார்.  337 

 

 

அங்குறையும் நாளின்கண் 

  அருகுளவாம் சிவாலயங்கள் 

எங்கும் சென்று இனிது இறைஞ்சி 

  ஏத்தும் அவர் இறை அருளால் 

பொங்கு புனல் திரு ஒற்றியூர் 

  தொழுது போந்து உமையாள் 

பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் 

  பதி அணைந்தார்.  338 

 

 

திருப்பாசூர் நகர் எய்திச் 

  சிந்தையினில் வந்து ஊறும் 

விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் 

  இடம் கொண்டு உலகு உய்ய 

இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து 

  அருள எடுத்த தனிப் 

பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது 

  எழுந்து போற்றுவார்.  339 

 

 

முந்தி மூவெயில் எய்த 

  முதல்வனார் என எடுத்துச் 

சிந்தை கரைந்து உருகு திருக் 

  குறுந் தொகையும் தாண்டகமும் 

சந்தம் நிறை நேர் இசையும் 

  முதலான தமிழ் பாடி 

எந்தையார் திரு அருள் 

  பெற்று ஏகுவார் வாகீசர்.  340 

 

 

அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று 

  அயல் உளவாம் பதி அனைத்தின்

மைம் மலரும் களத்தாரை 

  வணங்கி மகிழ்வொடும் போற்றி 

மெய்ம்மை நிலை வழுவாத 

  வேளாள விழுக் குடிமைச் 

செம்மையினால் பழையனூர்த் 

  திரு ஆல வனம் பணிந்தார்.  341 

 

 

திரு ஆலங்காடு உறையும் 

  செல்வர்தாம் எனச் சிறப்பின் 

ஒருவாத பெரும் திருத் தாண்டகம் 

  முதலாம் ஓங்கு தமிழ்ப் 

பெரு வாய்மைத் தொடை மாலை 

  பல பாடிப் பிற பதியும் 

மருஆர்வம் பெற வணங்கி வடதிசை 

  மேல் வழிக் கொள்வார்.  342 

 

 

பல் பதியும் நெடும் கிரியும் 

  படர் வனமும் சென்று அடைவார் 

செல் கதி முன் அளிப்பார் 

  தம் திருக்காரிக் கரை பணிந்து 

தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் 

  பின் உம்பர் குழாம் 

மல்கு திருக் காளத்தி 

  மா மலை வந்து எய்தினார்.  343 

 

 

பொன் முகலித் திருநதியின் 

  புனித நெடும் தீர்த்தத்தில் 

முன் முழுகிக் காளத்தி 

  மொய் வரையின் தாழ்வரையில் 

சென்னி உறப் பணிந்து எழுந்து 

  செம் கண் விடைத் தனிப்பாகர் 

மன்னும் மலை மிசை ஏறி 

  வலம் கொண்டு வணங்குவார்.  344 

 

 

காதணி வெண் குழையானைக் 

  காளத்தி மலைக் கொழுந்தை 

வேத மொழி மூலத்தை விழுந்து 

  இறைஞ்சி எழுந்து பெரும் 

காதல் புரி மனம் களிப்பக் 

  கண் களிப்பப் பரவசமாய் 

நாதனை என்கண்ணுளான் என்னும் 

  திருத்தாண்டகம் நவின்றார்.  345 

 

 

மலைச் சிகரச் சிகா மணியின் 

  மருங்கு உற முன்னே நிற்கும் 

சிலைத் தடக்கைக் கண்ணப்பர் 

  திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி 

அலைத்து விழும் கண் அருவி 

  ஆகத்துப் பாய்ந்து இழியத் 

தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து 

  புறம் போந்து அணைந்தார்.  346 

 

 

சேண் நிலவு திருமலையில் 

  திருப்பணி ஆயின செய்து 

தாணுவினை அம்மலை மேல் 

  தாள் பணிந்த குறிப்பினால் 

பேணிதிருக் கயிலை மலை வீற்று 

  இருந்த பெருங் கோலம் 

காணுமது காதலித்தார் கலை 

  வாய்மைக் காவலனார்.  347 

 

 

அங்கண் மா மலைமேல் மருந்தை 

  வணங்கியார் அருளால் மிகப்

பொங்கு காதலின் உத்தரத் திசை 

  மேல் விருப்போடு போதுவார் 

துங்க மால் வரை கானியாறு 

  தொடர்ந்த நாடு கடந்தபின் 

செங்கண் மால் விடை அண்ணல் 

  மேவும் திருப் பருப்பதம் எய்தினார்.  348 

 

 

மான விஞ்சையர் வான நாடர்கள் 

  வான் இயக்கர்கள் சித்தர்கள் 

கான கின்னரர் பன்னகாதிபர் 

  காம சாரிகளே முதல் 

ஞான மோனிகள் நாளும் நம்பரை 

  வந்து இறைஞ்சி நலம் பெறும் 

தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி 

  வண் தமிழ் சாற்றினார்.  349 

 

 

அம் மருங்கு கடந்து போம் அவர் 

  ஆர் கொள் சூல அயில் படைச்

செம்மல் வெண் கயிலைப் பொருப்பை 

  நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்

எம் மருங்கும் ஓர் காதல் இன்றி 

  இரண்டு பாலும் வியந்து உளோர் 

கைம் மருங்கு அணையும் தெலுங்கு 

  கடந்து கன்னடம் எய்தினார்.  350 

 

 

கரு நடம் கழிவாக ஏகிய 

  பின் கலந்த வனங்களும் 

திரு நதித் துறை யாவையும் பயில் 

  சேண் நெடும் கிரி வட்டையும் 

பெரு நலம் கிளர் நாடும் 

  எண்ணில பின்படச் செறி பொற்பினால் 

வரு நெடும் கதிர் கோலு 

  சோலைய மாளவத்தினை நண்ணினார்.  351 

 

 

அங்கு முற்றி அகன்று போகி 

  அரும் சுரங்கள் கடந்து சென்று 

எங்கும் மிக்க அறங்கள் நீடும் 

  இலாட பூமி இகந்து போய் 

மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் 

  ஆறு கடந்து அயல் 

பங்கயப் பழனத்து மத்திய 

  பை திரத்தினை எய்தினார்.  352 

 

 

அன்ன நாடு கடந்து கங்கை 

  அணைந்து சென்று வலம் கொளும்

மின்னு வேணியர் வாரணாசி 

  விருப்பினோடு பணிந்து உடன் 

பின் அணைந்தவர் தம்மை அங்கண் 

  ஒழிந்து கங்கை கடந்து போய் 

மன்னு காதல் செய் நாவின் 

  மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார்.  353 

 

 

மாகம் மீது வளர்ந்த கானகம் 

  ஆகி எங்கும் மனித்தரால் 

போகலா நெறி அன்றியும் 

  புரிகின்ற காதல் பொலிந்து எழச் 

சாக மூல பலங்கள் துய்ப்பனவும் 

  தவிர்ந்து தனித்து நேர் 

ஏகினார் இரவும் பெரும் 

  கயிலைக் குலக்கிரி எய்துவார்.  354 

 

 

ஆயவார் இருளின் கண் ஏகும் 

  அவ்அன்பர் தம்மை அணைந்து முன்

தீயவாய விலங்கு வன் தொழில் 

  செய்ய அஞ்சின நஞ்சுகால் 

வாய நாக மணிப் பணங் 

  கொள் விளக்கு எடுத்தன வந்து கால்

தோய வானவராயினும் தனி 

  துன் அருஞ்சுரம் முன்னினார்.  355 

 

 

வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடைவெய்யவன் 

  கதிர் கை பரந்து

எங்கும் மிக்க பிளப்பில் நாகர் 

  தம் எல்லை புக்கு எரிகின்றன 

பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் 

  புக்க சூழல் புகும் பகல் 

செங்கதிர்க் கனல் போலும் அத்திசை 

  திண்மை மெய்த்தவர் நண்ணினார்.  356 

 

 

இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் 

  அரும் சுரம் எய்துவார் 

பங்கயம் புரை தாள் பரட்டளவும் 

  பசைத் தசை தேயவும் 

மங்கை பங்கர் தம் வெள்ளிமால் 

  வரை வைத்த சிந்தை மறப்பரோ 

தம் கரங்கள் இரண்டுமே கொடு 

  தாவி ஏகுதல் மேவினார்.  357 

 

 

கைகளும் மணி பந்து 

  அசைந்துறவே கரைந்து சிதைந்தபின் 

மெய் கலந்து எழு சிந்தை 

  அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட 

மொய் கடுங் கனல் வெம்பரல் 

  புகை மூளும் அத்த முயங்கியே 

மை கொள் கண்டர் தம் அன்பர் 

  செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்.  358 

 

 

மார்பமும் தசை நைந்து சிந்தி 

  வரிந்த என்பு முரிந்திட 

நேர் வரும் குறி நின்ற சிந்தையின் 

  நேசம் ஈசனை நேடு நீடு 

ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் 

  உடம்பு அடங்கம் ஊன் கெடச்

சேர் வரும் பழுவம் புரண்டு 

  புரண்டு சென்றனர் செம்மையோர்.  359 

 

 

அப்புறம் புரள்கின்ற நீள் இடை 

  அங்கம் எங்கும் அரைந்திடச் 

செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி 

  சிந்தை சென்று உறும் ஆதலால் 

மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த 

  பின் மெல்ல உந்து முயற்சியும் 

தப்புறச் செயல் இன்றி அந்நெறி 

  தங்கினார் தமிழ் ஆளியார்.  360 

 

 

அன்ன தன்மையர் கயிலையை 

  அணைவதற்கு அருளார் 

மன்னும் தீந்தமிழ் புவியின் 

  மேல் பின்னையும் வழுத்த 

நன்னெடும் புனல் தடமும் ஒன்று 

  உடன் கொடு நடந்தார் 

பன்னகம் புனை பரமர் 

  ஓர் முனிவராம் படியால்.  361 

 

 

வந்து மற்றவர் மருங்குற 

  அணைந்து நேர் நின்று 

நொந்து நோக்கி மற்றவர் 

  எதிர் நோக்கிட நுவல்வார் 

சிந்தி இவ் உறுப்பு 

  அழிந்திட வருந்திய திறத்தால் 

இந்த வெங்கடத்து எய்தியது 

  என் என இசைத்தார்.  362 

 

 

மாசில் வற்கலை ஆடையும் 

  மார்பின் முந்நூலும் 

தேசுடைச் சடை மவுலியும் 

  நீறும் மெய் திகழ 

ஆசில் மெய்த்தவர் ஆகி 

  நின்றவர் தமை நோக்கிப் 

பேச உற்றதோர் உணர்வு 

  உற விளம்புவார் பெரியோர்.  363 

 

 

வண்டுலாங் குழல் மலை 

  மகளுடன் வட கயிலை 

அண்டர் நாயகர் இருக்கும் அப் 

  பரிசு அவர் அடியேன் 

கண்டு கும்பிட விருப்பொடும் 

  காதலின் அடைந்தேன் 

கொண்ட என் குறிப்பு இது 

  முனியே எனக் கூற.  364 

 

 

கயிலை மால் வரை 

  யாவது காசினி மருங்கு 

பயிலும் மானுடப் பான்மையோர் 

  அடைவதற்கு எளிதோ 

அயில் கொள் வேல் படை 

  அமரரும் அணுகுதற்கு அரிதால் 

வெயில் கொள் வெஞ்சுரத்து என் 

  செய்தீர் வந்து என விளம்பி.  365 

 

 

மீளும் அத்தனை உமக்கு இனிக் 

  கடன் என விளங்கும் 

தோளும் ஆகமும் துவளும் 

  முந்நூல் முனி சொல்ல 

ஆளும் நாயகன் கயிலையில் 

  இருக்கை கண்டு அல்லால் 

மாளும் இவ்வுடல் கொண்டு 

  மீளேன் என மறுத்தார்.  366 

 

 

ஆங்கு மற்றவர் துணிவு 

  அறிந்தவர் தமை அறிய 

நீங்கு மாதவர் விசும்பு இடைக் 

  கரந்து நீள் மொழியால் 

ஓங்கு நாவினுக்கு அரசனே 

  எழுந்திர் என்று உரைப்பத் 

தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு 

  எழுந்து ஒளி திகழ்வார்.  367 

 

 

அண்ணலே எனை ஆண்டு 

  கொண்டு அருளிய அமுதே 

விண்ணிலே மறைந்து அருள் 

  புரி வேத நாயகனே 

கண்ணினால் திருக் கயிலையில் 

  இருந்த நின் கோலம் 

நண்ணி நான் தொழ நயந்து 

  அருள் புரி எனப் பணிந்தார்.  368 

 

 

தொழுது எழுந்த நல் தொண்டரை 

  நோக்கி விண் தலத்தில் 

எழு பெரும் திருவாக்கினால் 

  இறைவர் இப் பொய்கை 

முழுகி நம்மை நீ கயிலையில் 

  இருந்த அம் முறைமை 

பழுதில் சீர்த் திருவையாற்றில் 

  காண் எனப் பணித்தார்.  369 

 

 

ஏற்றினார் அருள் தலை மிசைக் 

  கொண்டு எழுந்து இறைஞ்சி 

வேற்றும் ஆகி விண் ஆகி 

  நின்றார் மொழி விரும்பி 

ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் 

  அஞ்சு எழுத்து ஓதிப் 

பால் தடம் புனல் 

  பொய்கையில் மூழ்கினார் பணியால்.  370 

 

 

ஆதி தேவர் தம் திரு அருள் 

  பெருமை யார் அறிந்தார் 

போத மாதவர் பனிமலர்ப் 

  பொய்கையில் மூழ்கி 

மாதோர் பாகனார் மகிழும் 

  ஐ ஆற்றில் ஓர் வாவி 

மீது தோன்றி வந்து 

  எழுந்தனர் உலகெலாம் வியப்ப.  371 

 

 

வம்புலாம் மலர் வாவியின் 

  கரையில் வந்து ஏறி 

உம்பர் நாயகர் திரு அருள் 

  பெருமையை உணர்வார் 

எம் பிரான் தரும் கருணை கொல் 

  இது என இரு கண் 

பம்பு தாரை நீர் வாவியில் 

  படிந்து எழும் படியார்.  372 

 

 

மிடையும் நீள் கொடி 

  வீதிகள் விளங்கிய ஐயாறு 

உடைய நாயகர் சேவடி 

  பணிய வந்து உறுவார் 

அடைய அப்பதி நிற்பவும் 

  சரிப்பவும் ஆன 

புடை அமர்ந்த தம் 

  துணையொடும் பொலிவன கண்டார்.  373 

 

 

பொன் மலைக் கொடியுடன் 

  அமர்வெள்ளியம் பொருப்பில் 

தன்மை ஆம் படி 

  சத்தியும் சிவமுமாம் சரிதைப் 

பன்மை யோனிகள் யாவையும் 

  பயில்வன பணிந்தே 

மன்னும் மாதவர் தம்பிரான் 

  கோயில் முன் வந்தார்.  374 

 

 

காணும் அப்பெருங் கோயிலும் 

  கயிலை மால் வரையாய்ப் 

பேணும் மால் அயன் 

  இந்திரன் முதல் பெருந்தேவர் 

பூணும் அன்போடு போற்றி இசைத்து 

  எழும் ஒலி பொங்கத் 

தாணு மா மறை யாவையும் 

  தனித் தனி முழங்க.  375 

 

 

தேவர் தானவர் சித்தர் 

  விச் சாதரர் இயக்கர் 

மேவு மாதவர் முனிவர்கள் 

  புடையெலாம் மிடையக் 

காவி வாள் விழி 

  அரம்பையர் கானமும் முழவும் 

தாவில் ஏழ் கடல் 

  முழக்கினும் பெருகொலி தழைப்ப.  376 

 

 

கங்கையே முதல் தீர்த்தமாம் 

  கடவுள் மா நதிகள் 

மங்கலம் பொலி புனல் பெரும் 

  தடம் கொடு வணங்க 

எங்கும் நீடிய பெரும் 

  கண நாதர்கள் இறைஞ்சப் 

பொங்கியங்களால் பூத 

  வேதாளங்கள் போற்ற.  377 

 

 

அந்தண் வெள்ளி மால் வரை 

  இரண்டாம் என அணைந்து ஓர் 

சிந்தை செய்திடச் செங்கண் மால் 

  விடை எதிர் நிற்ப 

முந்தை மாதவப் பயன் 

  பெறு முதன்மையால் மகிழ்ந்தே 

நந்தி எம்பிரான் நடு விடை 

  ஆடி முன் நணுக.  378 

 

 

வெள்ளி வெற்பின் மேல் மரகதக் 

  கொடி உடன் விளங்கும் 

தெள்ளு பேர் ஒளிப் பவள 

  வெற்பு என இடப்பாகம் 

கொள்ளும் மா மலையாள் உடன் 

  கூட வீற்று இருந்த 

வள்ளலாரை முன் கண்டனர் 

  வாக்கின் மன்னவனார்.  379 

 

 

கண்ட ஆனந்தக் கடவினைக் 

  கண்களால் முகந்து 

கொண்டு கை குவித்து எதிர் 

  விழுந்து எழுந்து மெய் குலைய 

அண்டர் முன்பு நின்று 

  ஆடினார் பாடினார் அழுதார் 

தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன 

  யார் சொல வல்லார்.  380 

 

 

முன்பு கண்டு கொண்டு அருளினார் 

  அமுது உண்ண மூவா 

அன்பு பெற்றவர் அளவு இலா 

  ஆர்வம் முன் பொங்கப் 

பொன் பிறங்கிய சடையாரைப் 

  போற்று தாண்டகங்கள் 

இன்பம் ஓங்கிட ஏத்தினார் 

  எல்லையில் தவத்தோர்.  381 

 

 

ஆயவாறு மற்று அவர் 

  மனம் களிப்புறக் கயிலை 

மேய நாதர் தம் துணையொடும் 

  வீற்று இருந்து அருளித் 

தூய தொண்டரும் தொழுது எதிர் 

  நிற்க அக் கோலம் 

சேயது ஆக்கினார் திருவையாறு 

  அமர்ந்தமை திகழ.  382 

 

 

ஐயர் கோலம் அங்கு அளித்து 

  அகன்றிட அடித் தொண்டர் 

மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட 

  வருந்தி மற்று இங்குச் 

செய்ய வேணியர் அருள் 

  இதுவோ எனத் தெளிந்து 

வையம் உய்ந்திட கண்டமை 

  பாடுவார் மகிழ்ந்து.  383 

 

 

மாதர் பிறைக் கண்ணியானை 

  மலையான் மகளொடும் என்னும் 

கோதறு தண் தமிழ்ச் 

  சொல்லால் குலவு திருப்பதிகங்கள் 

வேத முதல்வர் ஐயாற்றில் 

  விரவும் சராசரம் எல்லாம் 

காதல் துணை ஒடும் கூடக் 

  கண்டேன் எனப் பாடி நின்றார்.  384 

 

 

கண்டு தொழுது வணங்கிக் 

  கண் நுதலார் தமைப் போற்றிக் 

கொண்ட திருத் தாண்டகங்கள் 

  குறுந்தொகை நேரிசை அன்பின் 

மண்டு விருத்தங்கள் பாடி 

  வணங்கித் திருத்தொண்டு செய்தே 

அண்டர் பிரான் திருவையாறு 

  அமர்ந்தனர் நாவுக்கு அரசர்.  385 

 

 

நீடிய அப்பதி நின்று 

  நெய்த்தானமே முதலாக 

மாடுயர் தானம் பணிந்து 

  மழபாடியாரை வணங்கிப் 

பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து 

  பணி செய்து போற்றித் 

தேடிய மாலுக்கு அரியார் 

  திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார்.  386 

 

 

சேர்ந்து விருப்பொடும் புக்குத் 

  திரு நட மாளிகை முன்னர்ச் 

சார்ந்து வலம் கொண்டு 

  இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு 

நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து 

  ஒழியா அன்பு பொங்க 

ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க 

  அயர் உறும் தன்மையர் ஆனார்.  387 

 

 

திருப்பூந் துருத்தி அமர்ந்த 

  செஞ்சடையானை ஆன் ஏற்றுப் 

பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் 

  பொய்யிலியைக் கண்டேன் என்று

விருப்புறு தாண்டகத்தோடு மேவிய 

  காதல் விளைப்ப 

இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் 

  குறுந் தொகை பாடி.  388 

 

 

அங்கு உறையும் தன்மை வேண்டி 

  நாம் அடி போற்றுவது என்று

பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் 

  போற்றிய பாடல் புரிந்து 

தங்கித் திருத் தொண்டு செய்வார் 

  தம்பிரானார் அருள் பெற்றுத் 

திங்களும் ஞாயிறும் தோயும் 

  திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்.  389 

 

 

பல் வகைத் தாண்டகத் தோடும் 

  பரவும் தனித் தாண்டகமும் 

அல்லல் அறுப்பவர் தானத்து 

  அடைவும் திருத் தாண்டகமும் 

செல் கதி காட்டிடப் போற்றும் 

  திரு அங்க மாலையும் உள்ளிட்டு 

எல்லையில் பன்மைத் தொகையும் 

  இயம்பினர் ஏத்தி இருந்தார்.  390 

 

 

பொன்னி வலம் கொண்ட 

  திருப் பூந்துருத்தி அவர் இருப்பக் 

கல் மனத்து வல் அமணர் 

  தமை வாதில் கட்டு அழித்துத் 

தென்னவன் கூன் நிமிர்த்தி 

  அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு 

மன்னிய சீர் சண்பை நகர் 

  மறையவனார் வருகின்றார்.  391 

 

 

தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் 

  எழுந்து அருளிச் செழும் பொன்னி

வாய்ந்த வளம் தரு நாட்டு 

  வந்து அணைந்தார் வாக்கினுக்கு 

வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் 

  பால் செல்வன் எனப் 

பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு 

  அணையில் வந்து அணைந்தார்.  392 

 

 

சண்பை வருந் தமிழ் 

  விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு 

மண் பரவும் பெருங் கீர்த்தி 

  வாகீசர் மனம் மகிழ்ந்து 

கண் பெருகுங் களிகொள்ளக் 

  கண்டு இறைஞ்சும் காதலினால் 

எண் பெருகும் விருப்பு எய்த 

  எழுந்து அருளி எதிர் சென்றார்.  393 

 

 

காழியர் கோன் வரும் எல்லை 

  கலந்து எய்திக் காதலித்தார் 

சூழும் இடைந்திடு நெருக்கில் 

  காணாமே தொழுது அருளி 

வாழி அவர் தமைத் 

  தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத் 

தாழும் உடல் இது கொண்டு 

  தாங்குவன் யான் எனத் தரித்தார்.  394 

 

 

வந்து ஒருவர் அறியாமே 

  மறைந்த வடிவொடும் புகலி 

அந்தணனார் ஏறி எழுந்து அருளி 

  வரும் மணி முத்தின் 

சந்த மணிச் சிவிகையினைத் 

  தாங்குவார் உடன் தாங்கிச் 

சிந்தை களிப்புற வருவார் 

  தமையாரும் தெளிந்து இலரால்.  395 

 

 

திரு ஞான மாமுனிவர் அரசு 

  இருந்த பூந் துருத்திக்கு 

அருகுகாக எழுந்து அருளி எங்கு 

  உற்றார் அப்பர் என 

உருகா நின்று உம் அடியேன் 

  உம் அடிகள் தாங்கி வரும் 

பெரு வாழ்வு வந்து எய்தப் 

  பெற்று இங்கு உற்றேன் என்றார்.  396 

 

 

பிள்ளையார் அதுகேளாப் பெருகு 

  விரைவு உடன் இழிந்தே 

உள்ளமிகு பதைப்பு எய்தி 

  உடைய அரசினை வணங்க 

வள்ளலார் வாகீசர் அவர் 

  வணங்கா முன் வணங்கத் 

துள்ளு மான் மறிக் கரத்தார் 

  தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்.  397 

 

 

கழு மலக் கோன் திருநாவுக்கு 

  அரசருடன் கலந்து அருளிச் 

செழு மதியம் தவழ் 

  சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின் 

மழுவினொடு மான் ஏந்தும் 

  திருக்கரத்தார் மலர்த் தாள்கள் 

தொழுது உருகி இன்புற்றுத் துதி 

  செய்து அங்கு உடன் இருந்தார்.  398 

 

 

வல் அமணர் தமை வாதில் 

  வென்றதுவும் வழுதி பால் 

புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் 

  பொருந்தப் புனல் நாட்டில் 

எல்லை இலாத் திரு நீறு 

  வளர்த்து அதுவும் இருந் தவத்தோர் 

சொல்ல அது கேட்டு உவந்தார் 

  தூய புகழ் வாகீசர்.  399 

 

 

பண்புடைய பாண்டி மா 

  தேவியார் தம் பரிவும் 

நண்புடைய குலச் சிறையார் 

  பெருமையும் ஞானத் தலைவர் 

எண் பெருக உரைத்து அருள 

  எல்லையில் சீர் வாகீசர் 

மண் குலவு தமிழ் நாடு 

  காண்பதற்கு மனம் கொண்டார்.  400 

 

 

பிரம புரத் திரு முனிவர் 

  பெரும் தொண்டை நல் நாட்டில் 

அரன் உறையும் தானங்கள் 

  அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு 

உரன் உடைய திரு நாவுக்கு 

  அரசர் உரை செய்து அருளப் 

புரம் எரித்தார் திருமகனார் 

  பூந்துருத்தி தொழுது அகன்றார்.  401 

 

 

ஆண்ட அரசு அங்கணர் சீர் 

  அருள் பெற்றப் பதி நின்றும் 

பாண்டி நாட்டு எழுந்து அருளும் 

  பான்மையராய்த் தென் திசை போய்க்

காண் தகைய திருப் புத்தூர் 

  பணிந்து ஏத்திக் கதிர் மதியம் 

தீண்டு கொடி மதில் மதுரைத் 

  திரு ஆலவாய் சேர்ந்தார்.  402 

 

 

சென்று அணைந்து மதுரையினில் 

  திருந்திய நூல் சங்கத்துள் 

அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து 

  அருளிய அங்கணர் கோயில் 

முன்றிலினை வலம் கொண்டு 

  முன் இறைஞ்சி உள் புக்கு 

வன் தனி மால் விடையாரை 

  வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்.  403 

 

 

எய்திய பேர் ஆனந்த 

  இன்பத்தின் இடை அழுந்தி 

மொய் திகழும் சடையானை 

  முளைத்தானை என்று எடுத்துச் 

செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் 

  பாடிப் புறத்து அணைவார் 

கை தொழுது பணிந்து ஏத்தித் 

  திரு உள்ளம் களி சிறந்தார்.  404 

 

 

சீர் திகழும் பாண்டிமா 

  தேவியார் திரு நீற்றின் 

சார்வு அடைய கூன் நிமிர்ந்த 

  தென்னவனார் தம் உடனே 

பார் பரவும் குலச் சிறையார் 

  வாகீசர் தமைப் பணி உற்று 

ஆரகிலாக் காதல் மிக 

  அடி போற்ற அங்கு இருந்தார்.  405 

 

 

திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் 

  செழும் பொருள் நூல் 

தருவானை நேர் இசையும் 

  தாண்டகமும் முதலான 

பெரு வாய்மைத் தமிழ் பாடிப் 

  பேணு திருப்பணி செய்து 

மருவார் தம் புரம் எரித்தார் 

  பூவணத்தை வந்து அடைந்தார்.  406 

 

 

கொடி மாடம் நிலவு திருப் 

  பூவணத்துக் கோயிலின் உள் 

நெடியானுக்கு அறிவு அரியார் நேர் 

  தோன்ற கண்டு இறைஞ்சி 

வடிவேலு திரிசூலத் 

  தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் 

பொடி நீடு திருமேனிப் 

  புனிதர் பதி பிற பணிவார்.  407 

 

 

தென் இலங்கை இராவணன் 

  தன் சிரம் ஈரைந்தும் துணித்த 

மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் 

  பெரும் பாதகம் தீர்த்த 

பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து 

  போய்ப் பெரு மகிழ்ச்சி 

துன்னி மனம் கரைந்து உருகத் 

  தொழுது எழுந்தார் சொல் அரசர்.  408 

 

 

தேவர் தொழும் தனி 

  முதலைத் திரு இராமேச்சுரத்து 

மேவிய சங்கரனை எதிர் 

  நின்று விருப்புறு மொழியால் 

பாவு திரு நேர் இசைகள் 

  முதலான தமிழ் பாடி 

நாவரசர் திருத் தொண்டு நலம் 

  பெருகச் செய்து அமர்ந்தார்.  409 

 

 

அங்குறைந்து கண் நுதலார் அடி 

  சூடி அகன்று போய்ப் 

பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் 

  புறம் பணை சூழ் நெல் வேலி 

செங்கண் விடையார் மன்னும் 

  திருக் கானப் பேர் முதலாம் 

எங்கும் நிகழ் தானங்கள் 

  எல்லாம் புக்கு இறைஞ்சுவார்.  410 

 

 

தொழுது பல வகையாலும் சொல் 

  தொடை வண் தமிழ் பாடி 

வழுவில் திருப்பணி செய்து மனம் 

  கசிவு உற்று எப் பொழுதும் 

ஒழுகிய கண் பொழி புனலும் 

  ஓவாது சிவன் தாள்கள் 

தழுவிய சிந்தையில் உணர்வும் 

  தங்கிய நீர்மையில் சரித்தார்.  411 

 

 

தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் 

  எங்கும் சென்று இறைஞ்சிப்

பாம்பு அணிவார் தமைப் பணிவார் 

  பொன்னி நாடது அணைந்து 

வாம் புனல் சூழ் வள நகர்கள் 

  பின்னும் போய் வணங்கியே 

பூம் புகலூர் வந்து அடைந்தார் 

  பொய்ப் பாசம் போக்குவார்.  412 

 

 

பொய்கை சூழ் பூம் புகலூர்ப் 

  புனிதர் மலர்த் தாள் வணங்கி 

நையும் மனப் பரிவினோடும் 

  நாள் தோறும் திரு முன்றில் 

கை கலந்த திருத் தொண்டு 

  செய்து பெரும் காதல் உடன் 

வைகு நாள் எண் இறந்த 

  வண் தமிழ் மாலைகள் மொழிவார்.  413 

 

 

நின்ற திருத் தாண்டகமும் 

  நீடு தனித் தாண்டகமும் 

மன்று உறைவார் வாழ் பதிகள் 

  வழுத்து திருத் தாண்டகமும் 

கொன்றை மலர்ச் சடையார் பால் 

  குறைந்த திரு நேர் இசையும் 

துன்று தனி நேர் இசையும் 

  முதலான தொடுத்து அமைத்தார்.  414 

 

 

ஆருயிரின் திரு விருத்தம் 

  தச புராணத்து அடைவும் 

பார் பரவும் பாவ 

  நாசப் பதிகம் பன்முறையும்

நேர் பட நின்று அறை 

  கூவும் திருப்பதிகம் முதல் பிறவும் 

பேர் அருளின் கடல் 

  அளிக்கும் பெருமானைப் பாடினார்.  415 

 

 

அந் நிலைமையினில் ஆண்ட அரசு 

  பணி செய்ய அவர் 

நல் நிலைமை காட்டுவார் நம்பர் 

  திரு மணி முன்றில் 

தன்னில் வரும் உழவாரம் நுழைந்த 

  இடம் தான் எங்கும் 

பொன்னினொடு நவமணிகள் பொலிந்து 

  இலங்க அருள் செய்தார்.  416 

 

 

செம்பொன்னும் நவமணியும் சேண் 

  விளங்க ஆங்கொவையும் 

உம்பர் பிரான் திருமுன்றில் உருள் 

  பருக்கை உடன் ஒக்க 

எம் பெருமான் வாகீசர் 

  உழ வாரத்தினில் ஏந்தி 

வம்பலர் மென் பூங்கமல 

  வாவியினில் புக எறிந்தார்.  417 

 

 

புல்லோடும் கல்லோடும் 

  பொன்னோடும் மணியோடும் 

சொல்லோடும் வேறு பாடு இலா 

  நிலைமை துணிந்து இருந்த 

நல்லோர் முன் திருப் புகலூர் 

  நாயகனார் திரு அருளால் 

வில்லோடு நுதல் மடவார் 

  விசும்பூடு வந்து இழிந்தார்.  418 

 

 

வானகம் மின்னுக் கொடிகள் வந்து 

  இழிந்தால் என வந்து 

தான நிறை சுருதிகளில் 

  தகும் அலங்காரத் தன்மை 

கான அமுதம் பரக்கும் 

  கனிவாயில் ஒளி பரப்பப் 

பானல் நெடுங் கண்கள் வெளி 

  பரப்பி இசை பாடுவார்.  419 

 

 

கற்பகப் பூந்தளிர் அடி போம் 

  காமரு சாரிகை செய்ய 

உற்பலம் மென் முகிழ் விரல் 

  வட்டு அணையோடும் கை பெயரப் 

பொற்புறும் அக் கையின் வழிப் 

  பொரு கயல் கண் புடை பெயர 

அற்புத பொன் கொடி 

  நுடங்கி ஆடுவபோல் ஆடுவார்.  420 

 

 

ஆடுவார் பாடுவார் அலர் 

  மாரி மேல் பொழிவார் 

கூடுவார் போன்று அணைவார் 

  குழல் அவிழ இடை நுடங்க 

ஓடுவார் மார வேளுடன் 

  மீள்வார் ஒளி பெருக 

நீடுவார் துகில் அசைய 

  நிற்பாரும் ஆயினார்.  421 

 

 

இத் தன்மை அரம்பையர்கள் 

  எவ்விதமும் செயல் புரிய 

அத்தனார் திருவடிக் கீழ் நினைவு 

  அகலா அன்பு உருகும் 

மெய்த் தன்மை உணர்வு உடைய 

  விழுத் தவத்து மேலோர் தம் 

சித்த நிலை திரியாது செய் 

  பணியின் தலை நின்றார்.  422 

 

 

இம் மாயப் பவத் தொடக்காம் 

  இருவினைகள் தமை நோக்கி 

உம்மால் இங்கு என்ன குறை 

  உடையேன் யான் திருவாரூர் 

அம்மானுக்கு ஆள் ஆனேன் 

  அலையேன் மின் நீர் என்று 

பொய்ம் மாயப் பெருங் கடலுள் 

  எனும் திருத் தாண்டகம் புகன்றார்.  423 

 

 

மாதர் அவர் மருங்கு அணைய 

  வந்து எய்தி மதன வசக் 

காதலர் புரிந்து ஒழுகும் 

  கை தவங்கள் செய்திடவும் 

பேதம் இலா ஓர் உணர்வில் 

  பெரிய வரைப் பெயர்விக்க 

யாதும் ஒரு செயல் இல்லாமையில் 

  இறைஞ்சி எதிர் அகன்றார்.  424 

 

 

இந் நிலைமை உலகு ஏழும் 

  எய்த அறிந்து இயல்பு ஏத்த 

மன்னிய அன்பு உறு பத்தி 

  வடிவு ஆன வாகீசர் 

மின் நிலவும் சடையார் தம் மெய் 

  அருள் தான் எய்த வரும் 

அந்நிலைமை அணித்து ஆகச் சில 

  நாள் அங்கு அமர்ந்து இருந்தார்.  425 

 

 

மன்னிய அந்தக் கரணம் 

  மருவுதலைப் பாட்டினால் 

தன்னுடைய சரண் ஆன 

  தமியேனைப் புகலூரன் 

என்னை இனிச் சேவடிக்கீழ் 

  இருத்திடும் என்று எழுகின்ற 

முன் உணர்வின் முயற்சியினால் 

  திருவிருத்தம் பல மொழிந்தார்.  426 

 

 

மண் முதலாம் உலகு ஏத்த 

  மன்னு திருத் தாண்டகத்தைப் 

புண்ணியா உன் அடிக்கே 

  போதுகின்றேன் எனப் புகன்று 

நண்ணரிய சிவ ஆனந்த 

  ஞான வடிவே ஆகி 

அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட 

  அரசு அமர்ந்து இருந்தார்.  427 

 

 

வானவர்கள் மலர் மாரி மண் 

  நிறைய விண் உலகின் 

மேல் நிறைந்த ஐந்து பேரிய 

  ஒலியும் விரிஞ்சன் முதல் 

யோனிகள் ஆயின எல்லாம் உள் 

  நிறைந்த பெரு மகிழ்ச்சி 

தான் நிறைந்த சித்திரையில் 

  சதயம் ஆம் திரு நாளில்.  428 

 

 

அடியன் ஏன் ஆதரவால் 

  ஆண்ட அரசின் சரிதப் 

படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் 

  அப் பர முனிவன் 

கடி மலர் மென் சேவடிகள் கை 

  தொழுது குலச் சிறையார் 

முடிவில் புகழ்த் திருத் தொண்டின் 

  முயற்சியினை மொழிகின்றேன்.  429 

 

திருச்சிற்றம்பலம்