பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

022 முருக நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தாது சூழும் குழல் மலையாள் 

  தளிர்க்கை சூழும் திருமேனி

மீது சூழும் புனல் கற்றை 

  வேணி நம்பர் விரும்பு பதி

சோதி சூழும் மணி மௌலிச் 

  சோழர் பொன்னி திரு நாட்டுப்

போது சூழும் தடஞ்சோலைப் பொய்கை 

  சூழும் பூம் புகலூர்.  1 

 

 

நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் 

  மனம் போல் அரவு அணிந்த

சேம நிலவு திரு நீற்றின் 

  சிறந்த வெண்மைத் திருந்தொளியால்

யாம இருளும் வெளி ஆக்கும் இரவே 

  அல்ல விரை மலர் மேல்

காமர் மதுவுண் சிறை வண்டும் 

  களங்கம் இன்றி விளங்குமால்.  2 

 

 

நண்ணும் இசை தேர் மது கரங்கள் 

  நனை மென் சினையின் மருங்கலைய

வண்ண மதுரத் தேன் பொழிவ 

  வாச மலர் வாயே அல்ல

தண்ணென் சோலை எம் மருங்கும் 

  சாரும் மடமென் சாரிகையின்

பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் 

  செழுந் தேன் பொழியுமால்.  3 

 

 

வண்டு பாடப் புனல் தடத்து 

  மலர்ந்து கண்ணீர் அரும்புவன

கொண்ட வாச முகை அவிழ்ந்த 

  குளிர் பங்கயங்களே அல்ல

அண்டர் பெருமான் திருப் பாட்டின் 

  அமுதம் பெருகச் செவி மடுக்கும்

தொண்டர் வதன பங்கயமும் 

  துளித்த கண்ணீர் அரும்புமால்.  4 

 

 

ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் 

  புகலூர் அது தன்னில்

மான மறையோர் குல மரபின் 

  வந்தார் முந்தை மறைமுதல்வர்

ஞான வரம்பின் தலை நின்றார் 

  நாகம் புனைவார் சேவடிக் கீழ்

ஊனம் இன்றி நிறை அன்பால் 

  உருகு மனத்தார் முருகனார்.  5 

 

 

அடை மேல் அலவன் துயில் உணர 

  அலர் செங் கமல வயற் கயல்கண் 

மடை மேல் உகளும் திருப்புகலூர் 

  மன்னி வாழுந் தன்மையராய்

விடை மேல் வருவார்க்கு ஆளான 

  மெய்ம்மை தவத்தால் அவர் கற்றைச்

சடை மேல் அணியத் திருப் 

  பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார்.  6 

 

 

புலரும் பொழுதின் முன் எழுந்து 

  புனித நீரில் மூழ்கிப் போய்

மலரும் செவ்வித் தம் பெருமான் 

  முடிமேல் வான்நீர் ஆறுமதி

உலவும் மருங்கு முருகு உயிர்க்க 

  நகைக்கும் பதத்தின் உடன் பறித்த

அலகில் மலர்கள் வெவ் வேறு 

  திருப்பூங் கூடைகளில் அமைப்பார்.  7 

 

 

கோட்டு மலரும் நில மலரும் 

  குளிர்நீர் மலரும் கொழுங் கொடியின்

தோட்டு மலரும் மா மலரும் 

  சுருதி மலருந் திருவாயில்

காட்டு முறுவல் நிலவு அலரக் 

  கனக வரையிற் பன்னக நாண்

பூட்டும் ஒருவர் திரு முடி 

  மேல் புனையலாகும் மலர் தெரிந்து.  8 

 

 

கொண்டு வந்து தனி இடத்தில் 

  இருந்து கோக்கும் கோவைகளும்

இண்டைச் சுருக்கும் தாமம் உடன் 

  இணைக்கும் வாச மாலைகளும்

தண்டில் கட்டும் கண்ணிகளும் 

  தாளில் பிணைக்கும் பிணையல்களும்

நுண்டாது இறைக்கும் தொடையல்களும் 

  சமைத்து நுடங்கு நூன்மார்பர்.  9 

 

 

ஆங்கப் பணிகள் ஆனவற்றுக்கு 

  அமைத்த காலங்களின் அமைத்துத்

தாங்கிக் கொடு சென்று அன்பினொடும் 

  சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்

பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் 

  பரமர் பதிகப் பற்றான

ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் 

  ஓவா நாவின் உணர்வினார்.  10 

 

 

தள்ளும் முறைமை ஒழிந்திட இத் 

  தகுதி ஒழுகும் மறையவர் தாம்

தெள்ளு மறைகள் முதலான ஞானம் 

  செம் பொன் வள்ளத்தில்

அள்ளி அகிலம் ஈன்று அளித்த 

  அம்மை முலைப்பால் உடன் உண்ட

பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் 

  பெருமை உடையார் ஆயினார்.  11 

 

 

அன்ன வடிவும் ஏனமுமாய் 

  அறிவார் இருவர் அறியாமல்

மன்னும் புகலூர் உறைவாரை 

  வர்த்த மான வீச்சுரத்து

நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள 

  நாளும் பூசை வழுவாமே

பன்னும் பெருமை அஞ்செழுத்தும் 

  பயின்றே பணிந்து பரவினார்.  12 

 

 

அங்கண் அமருந் திருமுருகர் 

  அழகார் புகலிப் பிள்ளையார்

பொங்கு மணத்தின் முன் செய்த 

  பூசை அதனால் புக்கருளிச்

செங்கண் அடலேறு உடையவர் தாஞ்சிறந்த 

  அருளின் பொருள் அளிக்கத்

தங்கள் பெருமான் அடி நீழல் 

  தலையாம் நிலைமை சார்வு உற்றார்.  13 

 

 

அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் 

  தம் கழல் நிழல் கீழ்

விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் 

  தொண்டின் திறம் போற்றிக்

கரவிலவர் பால் வருவாரைக் 

  கருத்தில் உருத்திரம் கொண்டு

பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த 

  பெருமை பகர் உற்றேன். 14

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

நேச நாயனார்
View Details
மாயப்பசு வதம்
View Details
வணிகர் சிறுவனுக்காக வழக்காடுதல்
View Details