முதல்-திருமுறை

115 சங்கொளிர் முன்கையர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  இராமனதீச்சரம்

திருச்சிற்றம்பலம்

 

சங்கொளிர் முன்கையர் தம்மிடையே

அங்கிடு பலிகொளு மவன்கோபப்

பொங்கர வாடலோன் புவனியோங்க

எங்குமன் இராமன தீச்சரமே.  1 

 

சந்தநன் மலரணி தாழ்சடையன்

தந்தம தத்தவன் தாதையோதான்

அந்தமில் பாடலோன் அழகன்நல்ல

எந்தவன் இராமன தீச்சரமே.  2 

 

தழைமயி லேறவன் தாதையோதான்

மழைபொதி சடையவன் மன்னுகாதிற்

குழையது விலங்கிய கோலமார்பின்

இழையவன் இராமன தீச்சரமே.  3 

 

சத்தியு ளாதியோர் தையல்பங்கன்

முத்திய தாகிய மூர்த்தியோதான்

அத்திய கையினில் அழகுசூலம்

வைத்தவன் இராமன தீச்சரமே.  4 

 

தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்

தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப்

பாய்ந்தகங் கையொடு படவரவம்

ஏய்ந்தவன் இராமன தீச்சரமே.  5 

 

சரிகுழல் இலங்கிய தையல்காணும்

பெரியவன் காளிதன் பெரியகூத்தை

அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்

எரியவன் இராமன தீச்சரமே.  6 

 

மாறிலா மாதொரு பங்கன்மேனி

நீறது ஆடலோன் நீள்சடைமேல்

ஆறது சூடுவான் அழகன்விடை

ஏறவன் இராமன தீச்சரமே.  7 

 

தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்

படவர வாட்டிய படர்சடையன்

நடமது வாடலான் நான்மறைக்கும்

இடமவன் இராமன தீச்சரமே.  8 

 

தனமணி தையல்தன் பாகன்றன்னை

அனமணி அயன்அணி முடியுங்காணான்

பனமணி அரவரி பாதங்காணான்

இனமணி இராமன தீச்சரமே.  9 

 

தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்

அறிவோரால் நாமம் அறிந்துரைமின்

மறிகையோன் தன்முடி மணியார்கங்கை

எறிபவன் இராமன தீச்சரமே.  10 

 

இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பாக்கர்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details
பட்டினத்தார்
View Details