பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

006 தடுத்தாட்கொண்ட புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கங்கையும் மதியும் பாம்பும்

  கடுக்கையும் முடிமேல் வைத்த

அங்கணர் ஓலை காட்டி

  ஆண்டவர் தமக்கு நாடு

மங்கையர் வதன சீதமதி

  இரு மருங்கும் ஓடிச்

செங்கயல் குழைகள் நாடும்

  திரு முனைப்பாடி நாடு.  1 

 

 

பெருகிய நலத்தால் மிக்கபெரும் 

  திருநாடு தன்னில்

அரு மறைச் சைவம் 

  ஓங்க அருளினால் அவதரித்த

மருவிய தவத்தால் மிக்க 

  வளம்பதி வாய்மை குன்றாத்

திரு மறையவர்கள் நீடும் 

  திரு நாவலூராம் அன்றே.  2 

 

 

மாதொரு பாகனார்க்கு வழி 

  வழி அடிமை செய்யும்

வேதியர் குலத்துள் தோன்றி 

  மேம் படு சடையனார்க்(கு)

ஏதமில் கற்பின் வாழ்க்கை 

  மனை இசை ஞானியார்பால்

தீதகன்று உலகம் உய்யத் 

  திரு அவதாரம் செய்தார்.  3 

 

 

தம்பிரான் அருளினாலே தவத்தினால் 

  மிக்கோர் போற்று(ம்)

நம்பி ஆரூரர் என்றே 

  நாமமும் சாற்றி மிக்க

ஐம் படைச் சதங்கை சாத்தி 

  அணிமணிச் சுட்டிச் சாத்திச் 

செம்பொன் நாண் அரையில் 

  மின்னத்தெருவில் தேர்உருட்டு நாளில்.  4 

 

 

நரசிங்க முனையர் என்னும் 

  நாடுவாழ் அரசர் கண்டு

பரவருங் காதல் கூரப் 

  பயந்தவர் தம்பால் சென்று

விரவிய நண்பினாலே வேண்டினர் 

  பெற்றுத் தங்கள்

அரசிளங் குமரற்கு ஏற்ப 

  அன்பினால் மகன்மை கொண்டார்.  5 

 

 

பெருமைசால் அரசர் காதற் 

  பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்

வருமுறை மரபில் வைகி 

  வளர்ந்து மங்கலம் செய்கோலத்து

அருமறை முந்நூல் சாத்தி 

  அளவில் தொல்கலைகள் ஆய்ந்து

திருமலி சிறப்பின் ஓங்கிச்சீர் 

  மணப் பருவஞ் சேர்ந்தார்.  6 

 

 

தந்தையார் சடையனார் தம் 

  தனித் திருமகற்குச் சைவ

அந்தணர் குலத்துள் தங்கள் 

  அரும்பெரும் மரபுக்கு ஏற்ப

வந்த தொல் சிறப்பிற் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால்

செந் திரு அனைய கன்னி மணத் திறஞ் செப்பி விட்டார்.  7 

 

 

குலமுதல் அறிவின் மிக்கார் 

  கோத்திர முறையும் தேர்ந்தார்

நலமிகு முதியோர் சொல்லச் 

  சடங்கவி நன்மை ஏற்று

மலர்தரு முகத்தன் ஆகி 

  மணம்புரி செயலின் வாய்மை

பலவுடன் பேசி ஒத்த 

  பண்பினால் அன்பு நேர்ந்தான்.  8 

 

 

மற்றவன் இசைந்த வார்த்தை 

  கேட்டவர் வள்ளல் தன்னைப்

பெற்றவர் தம்பால் சென்று 

  சொன்னபின் பெருகு சிந்தை

உற்றதோர் மகிழ்ச்சி எய்தி 

  மணவினை உவந்து சாற்றிக்

கொற்றவர் திருவுக்கு ஏற்பக் 

  குறித்து நாள்ஓலை விட்டார்.  9 

 

 

மங்கலம் பொலியச் செய்த 

  மணவினை ஓலை ஏந்தி

அங்கயற் கண்ணி னாரும் 

  ஆடவர் பலரும் ஈண்டிக்

கொங்கலர்ச் சோலை மூதூர் 

  குறுகினார் எதிரே வந்து

பங்கய வதனி மாரும் 

  மைந்தரும் பணிந்து கொண்டார்.  10 

 

 

மகிழ்ச்சியால் மணம் மீக் கூறி 

  மங்கல வினைகள் எல்லாம்

புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப்

  போற்றிய தொழில ராகி

இகழ்ச்சி ஒன்றானும் இன்றி 

  ஏந்து பூமாலைப் பந்தர்

நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி 

  நீள் முளை சாத்தினார்கள்.  11 

 

 

மணவினைக்கு அமைந்த செய்கை 

  மாதினைப் பயந்தார் செய்யத்

துணர் மலர்க் கோதைத் 

  தாமச் சுரும்பணை தோளினானைப்

புணர் மணத் திருநாள் 

  முன்னாட் பொருந்திய விதியினாலே

பணை முரசு இயம்ப வாழ்த்திப்பைம் 

  பொன் நாண்காப்புச் சேர்த்தார்.  12 

 

 

மாமறை விதி வழாமல் 

  மணத்துறைக் கடன்கள் ஆற்றித்

தூமறை மூதூர்க் கங்குல் 

  மங்கலந் துவன்றி ஆர்ப்பத்

தேமரு தொடையல் மார்பன் 

  திருமணக் கோலம் காணக்

காமுறு மனத்தான் போலக் 

  கதிரவன் உதயம் செய்தான்.  13 

 

 

காலை செய்வினைகள் முற்றிக் 

  கணிதநூல் புலவர் சொன்ன

வேலை வந்து அணையும் 

  முன்னர் விதிமணக்கோலம் கொள்வான்

நூல்அசைந்து இலங்கு மார்பின் 

  நுணங்கிய கேள்வி மேலோன்

மாலையுந் தாரும் பொங்க 

  மஞ்சன சாலை புக்கான்.  14 

 

 

வாசநெய் ஊட்டி மிக்க 

  மலர்விரை அடுத்த தூநீர்ப்

பாசனத்து அமைந்த பாங்கர்ப் 

  பருமணி பைம்பொன் திண்கால்

ஆசனத்து அணிநீர் ஆட்டி 

  அரிசனம் சாத்தி அன்பால்

ஈசனுக்கு இனியான் மேனி 

  எழில் பெற விளக்கினார்கள்.  15 

 

 

அகில் விரைத்தூபம் ஏய்ந்த 

  அணிகொள் பட்டாடை சாத்தி

முகில்நுழை மதியம் போலக் 

  கைவலான் முன்கை சூழ்ந்த

துகில்கொடு குஞ்சி ஈரம் 

  புலர்த்தித்தன் தூய செங்கை

உகிர்நுதி முறையில் போக்கி 

  ஒளிர் நறுஞ்சிகழி ஆர்த்தான்.  16 

 

 

தூநறும் பசும் கர்ப்பூரச் 

  சுண்ணத்தால் வண்ணப் போதில்

ஆனதண் பனிநீர் கூட்டி 

  அமைந்த சந்தனச் சேறாட்டி

மான்மதச் சாந்து தோய்ந்த 

  மங்கலக் கலவை சாத்திப்

பான்மறை முந்நூல் மின்னப் 

  பவித்திரஞ் சிறந்த கையான்.  17 

 

 

தூமலர்ப் பிணையல் மாலை 

  துணர்இணர்க் கண்ணி கோதை

தாமம் என்று இனையவேறு 

  தகுதியால் அமையச் சாத்தி

மாமணி அணிந்த தூய 

  வளர்ஒளி இருள்கால் சீக்கு(ம்)

நாம நீள்கலன்கள் சாத்தி 

  நன்மணக் கோலம் கொண்டான்.  18 

 

 

மன்னவர் திருவும் தங்கள் 

  வைதிகத் திருவும் பொங்க

நன்நகர் விழவு கொள்ள 

  நம்பி ஆரூரர் நாதன்

தன்அடி மனத்துள் கொண்டு 

  தகும் திருநீறு சாத்திப்

பொன்அணி மணியார் யோகப் 

  புரவிமேற் கொண்டு போந்தார்.  19 

 

 

இயம்பல துவைப்ப எங்கும் 

  ஏத்தொலி எடுப்ப மாதர்

நயந்து பல்லாண்டு போற்ற 

  நான்மறை ஒலியின் ஓங்க

வியந்துபார் விரும்ப வந்து 

  விரவினர்க்கு இன்பஞ் செய்தே

உயர்ந்த வாகன யானங்கள் 

  மிசைக் கொண்டார் உழையரானார்.  20 

 

 

மங்கலகீத நாத மறை 

  யவர் குழாங்களோடு 

தொங்கலும் விரையும் சூழ்ந்த 

  மைந்தரும் துவன்றிச் சூதும்

பங்கய முகையும் சாய்த்துப் 

  பணைத்து எழுந்தணியில் மிக்க

குங்கும முலையினாரும் பரந் 

  தெழு கொள்கைத் தாகி.  21 

 

 

அருங்கடி எழுந்த போழ்தின் 

  ஆர்த்த வெள்வளை களாலும்

இருங்குழை மகரத் தாலும் 

  இலங் கொளி மணிகளாலும்

நெருங்கிய பீலிச் சோலை 

  நீல நீர்த் தரங்கத் தாலும்

கருங்கடல் கிளர்ந்தது என்னக் 

  காட்சியில் பொலிந்தது அன்றே.  22 

 

 

நெருங்கு தூரியங்கள் ஏங்க 

  நிரைத்த சாமரைகள் ஓங்கப்

பெருங்குடை மிடைந்து செல்லப் 

  பிணங்கு பூங் கொடிகள் ஆட

அருங்கடி மணம்வந்து எய்த 

  அன்றுதொட்டு என்றும் அன்பில்

வருங்குல மறையோர் புத்தூர் 

  மணம் வந்த புத்தூராமால்.  23 

 

 

நிறைகுடம் தூபம் தீபம் 

  நெருங்கு பாலிகைகள் ஏந்தி

நறைமலர் அறுகு சுண்ண 

  நறும்பொரி பலவும் வீசி

உறைமலி கலவைச் சாந்தின் 

  உறுபுனல் தெளித்து வீதி

மறையவர் மடவார் வள்ளல்

  மணம் எதிர்கொள்ள வந்தார்.  24 

 

 

கண்கள் எண்ணிலாத வேண்டுங் 

  காளையைக் காண என்பார்

பெண்களில் உயர நோற்றாள் 

  சடங்கவி பேதை என்பார்

மண்களிகூர வந்த மணம்

  கண்டு வாழ்ந்தோம் என்பார்

பண்களில் நிறைந்த கீதம் 

  பாடுவார் ஆடுவார்கள்.  25 

 

 

ஆண்டகை அருளின் நோக்கின் 

  வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்

தாண்டிய பரியும் நம்பால் 

  தகுதியின் நடந்தது என்பார்

பூண்டயங்கு இவனே காணும் 

  புண்ணிய மூர்த்தி என்பார்

ஈண்டிய மடவார் கூட்டம் 

  இன்னன இசைப்பச் சென்றார்.  26 

 

 

வருமணக் கோலத்து எங்கள் 

  வள்ளலார் தெள்ளும் வாசத்

திருமணப் பந்தர் முன்பு 

  சென்று வெண்சங்கம் எங்கும்

பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் 

  பரிமிசை இழிந்து பேணும்

ஒரு மணத்திறத்தின் அங்கு 

  நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.  27 

 

 

ஆலுமறை சூழ் கயிலையின் 

  கண் அருள் செய்த

சாலு மொழியால் வழி 

  தடுத்து அடிமை கொள்வான்

மேலுற எழுந்து மிகு 

  கீழுற அகழ்ந்து

மாலும் அயனுக்கும் அரியார் 

  ஒருவர் வந்தார்.  28 

 

 

கண்ணிடை கரந்த கதிர் 

  வெண்படம் எனச் சூழ்

புண்ணிய நுதல் புனித 

  நீறு பொலிவு எய்தத்

தண்மதி முதிர்ந்து கதிர் 

  சாய்வது என மீதே

வெண்ணரை முடித்தது விழுந் 

  திடை சழங்க.  29 

 

 

காதில் அணி கண்டிகை 

  வடிந்த குழை தாழச்

சோதி மணி மார்பின் 

  அசை நூலினொடு தோளின்

மீது புனை உத்தரிய 

  வெண் துகில் நுடங்க

ஆதபம் மறைக் குடை 

  அணிக்கரம் விளங்க.  30 

 

 

பண்டி சரி கோவண 

  உடைப் பழமை கூரக்

கொண்ட தோர் சழங்கலுடை 

  ஆர்ந்து அழகு கொள்ள

வெண் துகிலுடன் குசை 

  முடிந்து விடு வேணுத்

தண்டொருகை கொண்டு கழல் 

  தள்ளு நடை கொள்ள.  31 

 

 

மொய்த்து வளர் பேரழகு 

  மூத்தவடி வேயோ

அத்தகைய மூப்பெனும் அதன் 

  படிவ மேயோ

மெய்த்த நெறி வைதிகம் 

  விளைந்த முதலேயோ

இத்தகைய வேடம் என 

  ஐயமுற எய்தி.  32 

 

 

வந்து திரு மாமறை 

  மணத் தொழில் தொடங்கும்

பந்தரிடை நம்பி எதிர் 

  பன்னு சபை முன்நின்று

"இந்த மொழி கேண்மின் 

  எதிர் யாவர்களும்" என்றான்

முந்தை மறை ஆயிரம் 

  மொழிந்த திரு வாயான்.  33 

 

 

என்றுரை செய் அந்தணனை 

  எண்ணில் மறை யோரும்

மன்றல் வினை மங்கல 

  மடங்கல் அனை யானும்

"நன்று உமது நல்வரவு 

  நங்கள் தவம் என்றே  

நின்றது இவண் நீர்மொழிமின் 

  நீர் மொழிவது" என்றார்.  34 

 

 

பிஞ்ஞகனும் நாவலர் பெருந் 

  தகையை நோக்கி

என்னிடையும் நின்னிடையும் நின்ற 

  இசை வால்யான்

முன்னுடையது ஓர் பெரு 

  வழக்கினை முடித்தே

நின்னுடைய வேள்வியினை நீ 

  முயல்தி என்றான்.  35 

 

 

நெற்றி விழியான் மொழிய 

  நின்ற நிகர் இல்லான்

"உற்றதோர் வழக்கு எனிடை 

  நீ உடையது உண்டேல்

மற்றது முடித்தல் அலது 

  யான் வதுவை செய்யேன்

முற்ற இது சொல்லுக"என 

  எல்லை முடிவு இல்லான்.  36 

 

 

ஆவதிது கேண்மின் மறையோர்! 

  என் அடியான் இந்

நாவல்நகர் ஊரன் இது 

  நான் மொழிவது என்றான்

தேவரையும் மாலயன் முதன் 

  திரு வின் மிக்கோர்

யாவரையும் வேறு அடிமை 

  யாவுடைய எம்மான்.  37 

 

 

என்றான் இறையோன் அது 

  கேட்டவர் எம் மருங்கும்

நின்றார் இருந்தார் "இவன் 

  என்நினைந்தான் கொல்" என்று

சென்றார் வெகுண்டார் சிரித்தார் 

  திரு நாவ லூரான்

"நன்றால் மறையோன் மொழி" 

  என்று எதிர்நோக்கி நக்கான்.  38 

 

 

நக்கான் முகம் நோக்கி 

  நடுங்கி நுடங்கி யார்க்கும்

மிக்கான் மிசையுத்தரியத் துகில் 

  தாங்கி மேல் சென்று

"அக்காலம் உன் தந்தைதன் 

  தந்தை ஆள்ஓலை ஈதால்

இக்காரியத்தை நீ இன்று 

  சிரித்தது என்ஏட" என்ன.  39 

 

 

மாசிலா மரபில் வந்த 

  வள்ளல் வேதியனை நோக்கி

நேசமுன் கிடந்த சிந்தை 

  நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி

"ஆசில் அந்தணர்கள் வேறோர் 

  அந்தணர்க்கு அடிமை ஆதல்

பேசஇன்று உன்னைக் கேட்டோம் 

  பித்தனோ மறையோன்" என்றார்.  40 

 

 

பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் 

  ஆக நீ இன்று

எத்தனை தீங்கு சொன்னால் யாது 

  மற்று அவற்றால் நாணேன்

அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந் 

  திலை ஆகில் நின்று

வித்தகம் பேச வேண்டாம் பணி 

  செய வேண்டும் என்றார்.  41 

 

 

கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் 

  செய்து உருகா நிற்கும்

கொண்டதோர் பித்த வார்த்தை 

  கோபமும் உடனே ஆக்கும்

உண்டொராள் ஓலை என்னும் அதன் 

  உண்மை அறிவேன் என்று

தொண்டனார் "ஓலை காட்டுக" 

  என்றனர் துணை வனாரை.  42 

 

 

ஓலை காட்டு என்று நம்பி 

  உரைக்க "நீஓலை காணல்

பாலையோ அவை முன் காட்டப் 

  பணிசெயற் பாலை" என்ற

வேலையில் நாவ லூரர் வெகுண்டு 

  மேல் விரைந்து சென்று

மாலயன் தொடரா தானை வலிந்து 

  பின் தொடரல் உற்றார்.  43 

 

 

ஆவணம் பறிக்கச் சென்ற 

  அளவினில் அந்த ணாளன்

காவணத்து இடையே ஓடக் 

  கடிது பின்தொடர்ந்து நம்பி

பூவணத்து அவரை உற்றார் 

  அவரலால் புரங்கள் செற்ற

ஏவணச் சிலையினாரை யார் 

  தொடர்ந்து எட்ட வல்லார்.  44 

 

 

மறைகள் ஆயின முன் போற்றி 

  மலர்ப்பதம் பற்றி நின்ற

இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும்

  ஆள் ஓலை வாங்கி

அறை கழல் அண்ணல் "ஆளாய் 

  அந்தணர் செய்தல் என்ன

முறை" எனக் கீறியிட்டார் முறை 

  யிட்டான் முடிவி லாதான்.  45 

 

 

அருமறை முறை யிட்டின்னும் அறி

  வதற்கு அறியான் பற்றி

ஒரு முறை முறையோ என்ன 

  உழைநின்றார் விலக்கி "இந்தப்

பெருமுறை உலகில் இல்லா நெறி 

  கொண்டு பிணங்கு கின்ற

திரு மறை முனிவரே நீர் எங்குளீர் 

  செப்பும்" என்றார்.  46 

 

 

என்றலும் நின்ற ஐயர் 

  "இங்குளேன் இருப்புஞ் சேயது 

அன்றிந்த வெண்ணெய் நல்லூர் 

  அதுநிற்க அறத்தாறு இன்றி

வன்றிறல் செய்து என்கையில் 

  ஆவணம் வலிய வாங்கி

நின்றிவன் கிழித்துத் தானே 

  நிரப்பினான் அடிமை" என்றான்.  47 

 

 

குழை மறை காதினானை  

 கோதில் ஆரூரர் நோக்கிப்

பழைய மன்றாடி போலும் 

  இவன்என்று பண்பின் மிக்க

விழைவுறு மனமும் பொங்க 

 "வெண்ணெய் நல்லூராயேல் உன்

பிழை நெறி வாழ்க்கை ஆங்கே 

  பேச நீபோதாய்" என்றார்.  48 

 

 

வேதியன் அதனைக் கேட்டு 

  "வெண்ணெய் நல்லூரிலே நீ

போதினும் நன்று மற்றப் 

புனித நான்மறையோர் முன்னர்

ஆதியின் மூல ஓலை 

  காட்டி நீ அடிமைஆதல்

சாதிப்பன்" என்று முன்னே 

  தண்டுமுன் தாங்கிச் சென்றான்.  49 

 

 

செல்லு நான் மறையோன் 

  தன்பின் திரிமுகக்காந்தஞ் சேர்ந்த

வல்லிரும்பணையு மா போல் 

  வள்ளலும் கடிது சென்றான்

எல்லையில் சுற்றத்தாரும் "இது 

  என்னாம்" என்று செல்ல

நல்ல அந்தணர்கள் வாழும் 

  வெண்ணெய் நல்லூரை நண்ணி.  50 

 

 

வேத பாரகரின் மிக்கார் 

  விளங்கு பேரவை முன்சென்று

நாதனாம் மறையோன் சொல்லும் 

  "நாவலூர் ஆரூரன் தான்

காதல் என் அடியான் 

  என்னக் காட்டிய ஓலைகீறி

மூதறிவீர் முன் போந்தானிது 

  மற்றென் முறைபாடு" என்றான்.  51 

 

 

அந்தணர் அவையில் மிக்கார் 

  "மறையவர் அடிமை ஆதல்

இந்த மாநிலத்தில் இல்லை 

  என் சொன்னாய் ஐயர் என்றார்

வந்த வாறிசைவே அன்றோ 

  வழக்கு இவன் கிழித்த ஓலை

தந்தை தன் தந்தை நேர்ந்தது 

  என்றனன் தனியாய் நின்றான்.  52 

 

 

இசைவினால் எழுதும் ஓலை 

  காட்டினான் ஆகில் இன்று

விசையினால் வலிய வாங்கிக் 

  கிழிப்பது வெற்றி ஆமோ?

தசையெலாம் ஒடுங்க மூத்தான் 

  வழக்கினை சாரச் சொன்னான்

அசைவில் ஆரூரர் எண்ணம் 

  என் என்றார் அவையில்மிக்கார்.  53 

 

 

அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதிசைவன் 

  என்று அறிவீர்! என்னைத்

தனக்கு வேறு அடிமை என்றுஇவ் 

  அந்தணன் சாதித்தானேல்

மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை 

  என் சொல்லுகேன் யான்

எனக்கு இது தெளிய ஒண்ணாது 

  என்றனன் எண்ணம் மிக்கான்.  54 

 

 

அவ் வுரை அவையின் முன்பு 

  நம்பி ஆரூரர் சொல்லச்

செவ்விய மறையோர் நின்ற திரு 

  மறை முனியை நோக்கி

"இவ்வுலகின் கண் நீ இன்று 

  இவரை உன்அடிமை என்ற

வெவ்வுரை எம்முன்பு ஏற்ற வேண்டும்" 

  என்று உரைத்து மீண்டும்.  55 

 

 

ஆட்சியில் ஆவணத்தில் அன்றி 

  மற்று அயலார் தங்கள்

காட்சியில் மூன்றில் ஒன்று 

  காட்டுவாய் என்ன "முன்னே

மூட்சியிற் கிழித்த ஓலை 

  படியோலை மூல ஓலை

மாட்சியில் காட்ட வைத்தேன்" 

  என்றனன் மாயை வல்லான்.  56 

 

 

வல்லையேல் காட் டிங்கு என்ன 

  மறையவன் வலி செய்யாமல்

சொல்ல நீர் வல்லீர் ஆகில் 

  காட்டுவேன் என்று சொல்லச்

செல்வ நான் மறையோய் நாங்கள் 

  தீங்குற ஒட்டோம் என்றார் 

அல்லல் தீர்த்து ஆள நின்றார் 

 ஆவணம் கொண்டு சென்றார்.  57 

 

 

இருள் மறை மிடற்றோன் கையில் 

  ஓலை கண்டு அவையோர்ஏவ

அருள் பெறு கரண த்தானும் 

  ஆவணம் தொழுது வாங்கிச்

சுருள் பெறு மடியை நீக்கி 

  விரித்தனன் தொன்மை நோக்கித்

தெருள் பெறு சபையோர் கேட்ப 

  வாசகம் செப்பு கின்றான்.  58 

 

 

அருமறை நாவல் ஆதி 

  சைவன் ஆரூரன்செய்கை

பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் 

  பித்தனுக்கியானும் என்பால்

வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு 

  செய்தற்கு ஓலை

இருமையால் எழுதி நேர்ந்தேன் 

   இதற்குஇவை என்எழுத்து.  59 

 

 

வாசகம் கேட்ட பின்னர் மற்று 

  மேல் எழுத்து இட்டார்கள்

ஆசிலா எழுத்தை நோக்கி அவை 

  யொக்கும் என்ற பின்னர்

மாசிலா மறை யோர் "ஐயா! 

  மற்றுங்கள் பேரனார் தம்

தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் 

  பார்த்து அறிமின்" என்றார்.  60 

 

 

அந்தணர் கூற "இன்னும் 

  ஆள்ஓலை இவனே காண்பான்

தந்தைதன் தந்தை தான் 

  வேறு எழுதுகைச் சாத்துண்டாகில்

இந்த ஆவணத்தினோடும் எழுத்து 

  நீர் ஒப்பு நோக்கி

வந்தது மொழிமின்" என்றான் 

  வலிய ஆட்கொள்ளும் வள்ளல்.  61 

 

 

திரண்ட மாமறையோர் தாமும் திரு 

  நாவலூரர் கோ முன்

மருண்டது தெளிய மற்ற மறை 

  யவன் எழுத்தால் ஓலை

அரண் தரு காப்பில் வேறுஒன்று 

  அழைத்து உடன் ஒப்புநோக்கி

"இரண்டும் ஒத்திருந்தது என்னே! இனிச் 

  செயல் இல்லை" என்றார்.  62 

 

 

நான் மறை முனிவ னார்க்கு 

  நம்பி ஆரூரர் தோற்றீர்

பான்மையின் ஏவல் செய்தல் கடன் 

  என்று பண்பில் மிக்க

மேன்மையோர் விளம்ப நம்பி "விதி 

  முறை இதுவே ஆகில்

யான் இதற்கு இசையேன் என்ன 

  இசையுமோ" என்று நின்றார்.  63 

 

 

திருமிகு மறையோர் நின்ற 

  செழுமறை முனியை நோக்கி

"அருமுனி! நீமுன் காட்டும் 

  ஆவணம் அதனில் எங்கள்

பெருமை சேர் பதியே 

  யாகப் பேசியதுமக்கு இவ்வூரில்

வருமுறை மனையும் நீடு 

  வாழ்க்கையும் காட்டுக" என்றார்.  64 

 

 

பொருவரும் வழக்கால் வென்ற 

  புண்ணிய முனிவர் என்னை 

ஒருவரும் அறியீராகில் போதும்

 என்று ரைத்துச் சூழ்ந்த 

பெரு மறையவர் குழாமும் 

  நம்பியும் பின்பு செல்லத் 

திருவருட் துறையே புக்கார் 

  கண்டிலர் திகைத்து நின்றார்.  65 

 

 

எம்பிரான் கோயில் நண்ண இலங்கு 

  நூல் மார்பர் "எங்கள் 

நம்பர் தங்கோயில் புக்கது என் 

  கொலோ" என்று நம்பி 

தம்பெரு விருப்பி னோடு தனித் 

  தொடர்ந்து அழைப்ப மாதோ(டு) 

உம்பரின் விடைமேல் தோன்றி அவர் 

  தமக்கு உணர்த்தல் உற்றார்.  66 

 

 

முன்புநீ நமக்குத் தொண்டன் 

  முன்னிய வேட்கை கூரப் 

பின்பு நம் ஏவலாலே 

  பிறந்தனை மண்ணின் மீது 

துன்புறு வாழ்க்கை நின்னைத் 

  தொடர்வறத் தொடர்ந்து வந்து 

நன்புல மறையோர் முன்னர் 

  நாம் தடுத்தாண்டோம் என்றார்.  67 

 

 

என்று எழும் ஓசை கேளா 

  ஈன்றஆன் கனைப்புக் கேட்ட 

கன்று போல் கதறி நம்பி 

  கரசரண் ஆதி அங்கம் 

துன்றிய புளகம் ஆகத்தொழுத கை 

  தலை மேல் ஆக 

"மன்றுளீர் செயலோ வந்து வலிய 

  ஆட் கொண்டது" என்றார்.  68 

 

 

எண்ணிய ஓசை ஐந்தும் 

  விசும்பிடை நிறைய எங்கும் 

விண்ணவர் பொழி பூமாரி 

  மேதினி நிறைந்து விம்ம 

மண்ணவர் மகிழ்ச்சி பொங்க 

  மறைகளும் முழங்கி ஆர்ப்ப 

அண்ணலை ஓலை காட்டி 

  ஆண்டவர் அருளிச் செய்வார்.  69 

 

 

மற்று நீ வன்மை பேசி 

  வன்தொண்டன் என்னும் நாமம் 

பெற் றனை நமக்கும் அன்பில் 

  பெருகிய சிறப்பின் மிக்க 

அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் 

  மண் மேல் நம்மைச் 

சொற் தமிழ் பாடுக என்றார் 

  தூமறை பாடும் வாயார்.  70 

 

 

தேடிய அயனும் மாலும் 

  தெளிவுறா ஐந்து எழுத்தும் 

பாடிய பொருளாய் உள்ளான் 

  "பாடுவாய் நம்மை" என்ன 

நாடிய மனத்த ராகி 

  நம்பி ஆரூரர் மன்றுள் 

ஆடிய செய்ய தாளை 

  அஞ்சலி கூப்பி நின்று.  71 

 

 

வேதியன் ஆகி என்னை வழக் 

  கினால் வெல்ல வந்த 

ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு 

  தந்து உய்யக் கொண்ட 

கோதிலா அமுதே! இன்று உன் 

  குணப் பெருங்கடலை நாயேன் 

யாதினை அறிந்து என் சொல்லிப் 

  பாடுகேன்" என மொழிந்தார்.  72 

 

 

அன்பனை அருளின் நோக்கி 

  அங்கணர் அருளிச் செய்வார் 

"முன்பு எனைப் பித்தன் 

  என்றே மொழிந்தனை ஆதலால்லே 

என்பெயர் பித்தன் என்றே 

  பாடுவாய்" என்றார் நின்ற 

வன்பெருந் தொண்டர் ஆண்ட 

  வள்ளலைப் பாடல் உற்றார்.  73 

 

 

கொத்தார் மலர்க்குழலாள் ஒரு 

  கூறாய் அடியவர் பால் 

மெய்த் தாயினும் இனியானை 

  அவ்வியன் நாவலர் பெருமான் 

"பித்தா பிறை சூடி 

  எனப் பெரிதாம் திருப்பதிகம் 

இத்தாரணி முதலாம் உலகு 

  எல்லாம் உய்ய எடுத்தார்.  74 

 

 

முறையால் வரு மருதத்துடன் 

  மொழி இந்தள முதலில் 

குறையா நிலை மும்மைப்படிக் 

  கூடுங் கிழமை யினால் 

நிறைபாணியின் இசை கோள்புணர் 

  நீடும் புகல் வகையால் 

இறையான் மகிழ்இசை பாடினன் 

  எல்லாம் நிகர் இல்லான்.  75 

 

 

சொல்லார் தமிழ் இசை பாடிய 

  தொண்டன் தனை இன்னும் 

பல்லாறு உலகினில் நம் புகழ் 

  பாடு" என்றுறு பரிவில் 

நல்லார் வெண்ணெய் நல்லூர் அ ருள் 

  துறை மேவிய நம்பன் 

எல்லா உலகும் உய்யப் புரம் 

  எய்தான் அருள் செய்தான்.  76 

 

 

அயலோர் தவம் முயல்வார் பிறர் 

  அன்றே மணம் அழியும் 

செயலால் நிகழ் புத்தூர் வரு 

  சிவ வேதியன் மகளும்  

உயர் நாவலர் தனி நாதனை 

  ஒழியாது உணர் வழியில் 

பெயராது உயர் சிவ லோகமும் 

  எளிதாம் வகை பெற்றாள்.  77 

 

 

நாவலர் கோன் ஆரூரன் தனை 

  வெண்ணெய் நல் ஊரில் 

மேவும் அருள் துறை அமர்ந்த 

  வேதியர் ஆட்கொண்டு அதற்பின் 

பூ அலரும் தடம் பொய்கைத் 

  திரு நாவலூர் புகுந்து 

தேவர் பிரான் தனைப் பணிந்து 

  திருப் பதிகம் பாடினார்.  78 

 

 

சிவன் உறையுந் திருத்துறையூர் 

 சென்ற ணைந்து தீவினையால் 

அவநெறியில் செல்லாமே தடுத்து 

  ஆண் டாய் அடியேற்குத் 

தவ நெறிதந்து அருள் 

  என்று தம்பிரான் முன்நின்று 

பவ நெறிக்கு விலக்கு 

  ஆகுந் திருப்பதிகம் பாடினார்.  79 

 

 

புலன் ஒன்றும்படி தவத்திற் புரிந்த 

  நெறி கொடுத்து அருள 

அலர் கொண்ட நறுஞ் சோலைத் 

  திருத்துறையூர் அமர்ந்து அருளும் 

நிலவும் தண் புனலும் ஒளிர் 

  நீள் சடையோன் திருப்பாதம் 

மலர் கொண்டு போற்றி சைத்து 

  வந்தித்தார் வன் தொண்டர்.  80 

 

 

திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான் 

  அமர்ந்து அருளும் 

பொருத்தமாம் இடம் பலவும் 

  புக்கிறைஞ்சி பொற்புலியூர் 

நிருத்தனார் திருக் கூத்துத் 

  தொழுவதற்கு நினைவுற்று 

வருத்தம்மிகு காதலினால் வழிக் 

  கொள்வான் மனங் கொண்டார்.  81 

 

 

மலைவளர் சந்து அகில் பீலி 

  மலர்பரப்பி மணி கொழிக்கும் 

அலை தருதண் புனல் பெண்ணை 

  யாறு கடந்து ஏறியபின் 

இலகு பசும் புரவிநெடும் 

  தேர் இரவிமேல் கடலில் 

செலவணையும் பொழுது அணையத் 

  திருவதிகை புறத்து அணைந்தார்.  82 

 

 

உடைய அரசு உல கேத்தும் 

  உழவாரப் படை யாளி 

விடை யவர்க்குக் கைத்தொண்டு விரும்பு 

  பெரும் பதியை மிதித்து 

அடையும் அதற்கு அஞ்சுவான் என்று 

  அந் நகரில் புகுதாதே 

மடைவளர் தண் புறம் பணையிற் 

  சித்தவட மடம் புகுந்தார்.  83 

 

 

வரிவளர் பூஞ்சோலை சூழ் 

  மடத்தின் கண் வன்தொண்டர் 

விரிதிரை நீர்க் கெடில 

  வடவீரட்டானத்து இறை தாள் 

புரி வுடைய மனத்தினராய்ப் 

  புடை எங்கும் மிடைகின்ற 

பரிசனமும் துயில் கொள்ளப் 

  பள்ளி அமர்ந்து அருளினார்.  84 

 

 

அது கண்டு வீரட்டத்து அமர்ந்து 

 அருளும் அங் கணரும்  

முது வடிவின் மறை யவராய் 

  முன் ஒருவர் அறியாமே 

பொது மடத்தின் உள்புகுந்து பூந் 

  தாரான் திரு முடிமேல் 

பதும மலர்த் தாள் வைத்துப் 

  பள்ளிகொள்வார் போல் பயின்றார்.  85 

 

 

அந்நிலை ஆரூரன் உணர்ந்து அரு 

  மறையோய் உன்னடி என் 

சென்னியில் வைத்தனை என்னத் திசை 

  அறி யாவகை செய்த(து) 

என்னுடைய மூப்புக் காண் என்று  

  அருள அதற்கு இசைந்து 

தன் முடி அப்பால் வைத்தே 

  துயில் அமர்ந்தான் தமிழ்நாதன்.  86 

 

 

அங்குமவன் திரு முடிமேல் மீண்டும் 

  அவர் தாள் நீட்டச் 

செங்கயல் பாய் தடம் புடை 

  சூழ் திரு நாவலூராளி 

இங்கு என்னைப் பலகாலும் மிதித்தனை 

  நீ யார் என்னக் 

கங்கை சடைக் கரந்த பிரான் 

  அறிந்திலையோ எனக் கரந்தான்.  87 

 

 

செம்மாந்து இங்குயான் அறியாது 

  என்செய்தேன் எனத்தெளிந்து 

தம்மானை அறியாத சாதியார் 

  உளரே என்(று) 

அம்மானைத் திருவதிகை வீரட்டா 

  னத்து அமர்ந்த 

கைம்மாவின் உரியானைக் கழல் 

  பணிந்து பாடினார்.  88 

 

 

பொன் திரளும் மணித் திரளும் 

  பொரு கரிவெண் கோடுகளும் 

மின்றிரண்ட வெண் முத்தும் விரை 

  மலரும் நறுங் குறடும் 

வன்றிரை களாற் கொணர்ந்து திரு

   வதிகை வழி படலால் 

தென் திசையில் கங்கை எனும் 

  திருக் கெடிலம் திளைத்தாடி.  89 

 

 

அங்கணரை அடி போற்றி அங்கு 

  அகன்று மற்று அந்தப் 

பொங்கு நதித் தென்கரை போய்ப்போர் 

  வலித்தோள் மாவலி தன் 

மங்கல வேள் வியில் பண்டு 

  வாமனனாய் மண் இரந்த 

செங் கணவன் வழி பட்ட 

  திரு மாணிகுழி அணைந்தார்.  90 

 

 

பரம் பொருளைப் பணிந்து தாள் 

  பரவி ப்போய்ப் பணிந்தவர்க்கு 

வரம் தருவான் தினை நகரை 

  வணங்கினர் வண்தமிழ் பாடி 

நரம்புடை யாழ்ஒலி முழவின் நாத 

  ஒலி வேத ஒலி 

அரம்பையர் தம் கீதஒலி அறாத் 

  தில்லை மருங்கு அணைந்தார்.  91 

 

 

தேம் அலங்கல் அணி மாமணி மார்பின் 

  செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண் 

பூமலங்க எதிர் பாய்வன மாடே புள்ளலம்பு 

  திரை வெள் வளை வாவி 

தா மலங்குகள் தடம் பணை சூழும் 

  தன் மருங்கு தொழு வார்கள் தம்மும்மை 

மா மலங்களற வீடு அருள் தில்லை 

  மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி .  92 

 

 

நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் 

  நாளி கேரம் இலவங்கம் நரந்தம் 

பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் 

 பொதுளும் வஞ்சி பலஎங்கும் நெருங்கி  

மேக சால மலி சோலைகள் ஆகி

   மீது கோகிலம் மிடைந்து மிழற்றப் 

போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்

  புறம் பணை கடந்து புகுந்தார்.  93 

 

 

வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் 

  மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம் 

கன்னி காரங் குரவங் கமழ் புன்னை 

  கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித் 

துன்னு சாதி மரு மாலதி மௌவல் 

  துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த 

பன் மலர்ப் புனித நந்த வனங்கள் 

  பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.  94 

 

 

இடம் மருங்கு தனிநாயகி காண ஏழ் 

  பெரும் புவனம் உய்ய எடுத்து 

நடநவின்று அருள் சிலம்பொலி போற்றும் நான் 

  மறைப் பதியை நாளும் வணங்க 

கடல் வலங் கொள்வது போல் புடை 

  சூழுங் காட்சி மேவி மிகு 

சேட்செல ஓங்கும் தடமருங்கு வளர் மஞ்சிவர் 

  இஞ்சிதண் கிடங்கை எதிர்கண்டு மகிழ்ந்தார்.  95 

 

 

மன்றுளாடு மதுவின் நசை யாலே மறைச்

   சுரும் பறை புறத்தின் மருங்கே 

குன்று போலு மணி மாமதில் சூழுங் 

  குண்ட கழக்கமல வண்டலர் கைதைத் 

துன்று நீறு புனை மேனிய வாகித் 

  தூயநீறு புனை தொண்டர்கள் என்னச் 

சென்று சென்று முரல்கின்றன கண்டு சிந்தை 

  அன்பொடு திளைத்து எதிர் சென்றார்.  96 

 

 

பார் விளங்க வளர் நான்மறை நாதம் 

  பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும் 

சீர் விளங்கு மணி நாவொ லியாலும் 

  திசைகள் நான்கு எதிர் புலப்படலாலும் 

தார் விளங்கு வரை மார்பின் அயன் 

  பொன் சதுர்முகங்கள் எனஆயின தில்லை 

ஊர்விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் 

  திசை வாயில் முன் எய்தி.  97 

 

 

அன்பின் வந்து எதிர் கொண்ட சீர்அடியார் 

  அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ 

முன்பு இறைஞ்சினரியாவர் என்று அறியா 

  முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து 

பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு 

  நாவல் நகரார் பெரு மானும் 

பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் 

  பொருவிறந்த திரு வீதி புகுந்தார்.  98 

 

 

அங்கண் மா மறை முழங்கும் மருங்கே 

  ஆட ரம்பையர் அரங்கு முழங்கும் 

மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும் 

  வாச மாலைகளில் வண்டு முழங்கும் 

பொங்கும் அன்பருவி கண் பொழி தொண்டர் 

  போற்றி சைக்கும் ஒலி எங்கும் முழங்கும் 

திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் 

  தேவ தேவர் புரியும் திருவீதி.  99 

 

 

போக நீடு நிதி மன்னவன் மன்னும் 

  புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி 

மாகம் முன் பருகு கின்றன போலும் 

  மாளிகைக் குலம் மிடைந்த பதாகை 

யோக சிந்தை மறை யோர்கள் வளர்க்கும் 

 ஓம தூமம் உயர்வானில் அடுப்ப  

மேக பந்தி களின் மீதிடை எங்கும் 

  மின் நுடங்குவன என்ன விளங்கும்.  100 

 

 

ஆடுதோகை புடை நாசிகள் தோறும் அரணி 

  தந்த சுடர் ஆகுதி தோறும் 

மாடு தாம மணி வாயில்கள் தோறும் 

  மங்கலக் கலசம் வேதிகை தோறும் 

சேடு கொண்ட ஒளி தேர் நிரை 

  தோறும் செந்நெல் அன்னமலை சாலைகள் தோறும் 

நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும் நிறைந்த 

  தேவர் கணம் நீளிடை தோறும்.  101 

 

 

எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள 

  எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் 

மண்ணில் இப் பதியில் வந்தன என்ன 

  மங்கலம் பொலி வளத்தன ஆகிப் 

புண்ணியப் புனித அன் பர்கள் முன்பு 

  புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும் 

அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த 

  அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.  102 

 

 

மால் அயன் சதமகன் பெரும் தேவர் 

  மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி 

சீல மாமுனிவர் சென்று முன் துன்னித் 

  திருப் பிரம்பின் அடி கொண்டு திளைத்துக் 

காலம் நேர் படுதல் பார்த்தயல் நிற்பக் 

  காதல் அன்பர் கணநாதர் புகும்பொற் 

கோல நீடு திருவாயில் இறைஞ்சிக் குவித்த 

  செங்கை தலை மேற்கொடு புக்கார்.  103 

 

 

பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை 

  மின் பிறங்கும் பேரம்பலம் மேரு 

வரு முறை வலம் கொண் டிறைஞ்சிய 

  பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் 

அரு மறை முதலில் நடுவினில் கடையில் 

  அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த 

திருவளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் 

  திரு அணுக்கன் திரு வாயில்.  104 

 

 

வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப 

  மன்றுளே மால் அயன் தேட 

ஐயர் தாம் வெளியே ஆடு கின்றாரை 

  அஞ்சலி மலர்த்தி முன் குவித்த 

கை களோ திளைத்த கண்களோ அந்தக் 

  கரணமோ கலந்த அன்பு ந்தச் 

செய் தவப் பெரியோன் சென்று தாழ்ந்து 

  எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு.  105 

 

 

ஐந்து பேர் அறிவும் கண்களே 

  கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் 

சிந்தையே ஆகக் குணம் ஒரு 

  மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக 

இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த 

  எல்லையில் தனிப் பெருங் கூத்தின் 

வந்த பேரின்ப வெள்ளத் துள் 

  திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.  106 

 

 

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் 

  திரு நடம் கும்பிடப் பெற்று 

மண்ணிலே வந்த பிறவியே எனக்கு 

  வாலி தாம் இன்பம் ஆம் என்று 

கண்ணில் ஆனந்த அருவி நீர் 

  சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப் 

பண்ணினால் நீடி அறி வரும் 

  பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.  107 

 

 

தடுத்து முன் ஆண்ட தொண்டனார் 

  முன்பு தனிப் பெருந்தாண்டவம் புரிய 

எடுத்த சேவடியார் அருளினால் "தரளம் 

  எறிபுனல் மறி திரைப் பொன்னி 

மடுத்த நீள்வண்ணப் பண்ணை ஆரூரில் 

  வருக நம்பால்" என வானில் 

அடுத்த போதினில் வந்து எழுந்தது 

  ஓர்நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்.  108 

 

 

ஆடுகின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த 

  அப்பணி சென்னி மேற் கொண்டு 

சூடு தங்கரங்கள் அஞ்சலி கொண்டு 

  தொழுந் தொறும் புறவிடை கொண்டு 

மாடு பேரொளியின் வளரும் அம்பலத்தை 

  வலங் கொண்டு வணங் கினர் போந்து 

நீடுவான் பணிய உயர்ந்த பொன்வரை 

  போல் நிலை எழுகோபுரங் கடந்து.  109 

 

 

நின்று கோபுரத்தை நில முறப் 

  பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி 

மன்ற லார் செல்வ மறுகி 

  னூடேகி மன்னிய திருப்பதி அதனில் 

தென்திசை வாயில் கடந்து முன்போந்து 

  சேட்படுந் திரு எல்லை இறைஞ்சிக் 

கொன்றை வார் சடையான் அருளையே 

  நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார்.  110 

 

 

புறந் தரு வார் போற்றி 

  இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர் 

அறம் பயந்தாள் திரு முலைப் 

  பால் அமுதுண்டு வளர்ந்தவர் தாம் 

பிறந்து அருளும் பெரும் பேறு 

  பெற்றது என முற்று லகில் 

சிறந்த புகழ்க் கழுமல மாம் 

  திருப் பதியைச் சென்று அணைந்தார்.  111 

 

 

பிள்ளையார் திரு அவதாரம் 

  செய்த பெரும் புகலி 

உள்ளு நான் மிதியேன் என்றூர் 

  எல்லைப் புறம் வணங்கி 

வள்ள லார் வலமாக வரும் 

  பொழுதின் மங்கை இடங் 

கொள்ளு மால் விடையானும் எதிர் 

  காட்சி கொடுத்து அருள.  112 

 

 

மண்டிய பேரன் பினால் வன் 

  தொண்டர் நின்று இறைஞ்சித் 

தெண் திரை வேலையில் மிதந்த 

  திருத்தோணி புரத் தாரைக் 

கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று 

  இருந்த படி என்று 

பண் டரும் இன்னிசை பயின்ற 

  திருப் பதிகம் பாடினார்.  113 

 

 

இருக்கோலம் இடும் பெருமான் எதிர் 

  நின்றும் எழுந்து அருள 

வெருக் கோளுற்றது நீங்க ஆரூர் 

  மேற் செல விரும்பிப் 

பெருக்கோதம் சூழ் புறவப் பெரும்  

 பதியை வணங்கிப் போய்த் 

திருக் கோலக்கா வணங்கி செந் 

  தமிழ் மாலைகள் பாடி.  114 

 

 

தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் 

  திருப்புன்கூர் நம்பர் பால் 

ஆனாப் பேரன்பு மிக அடி 

  பணிந்து தமிழ் பாடி 

மானார்க்கும் கர தலத்தார் மகிழ்ந்த 

  இடம் பல வணங்கிக் 

கானார்க்கும் மலர்த் தடஞ் சூழ் 

  காவிரியின் கரை அணைந்தார்.  115 

 

 

வம்புலா மலர் அலைய 

  மணிகொழித்து வந்திழியும் 

பைம்பொன் வார் கரைப் 

  பொன்னிப்பயில் தீர்த்தம் படிந்தாடி 

தம்பிரான் மயிலா டுதுறை 

  வணங்கித் தாவில் சீர் 

அம்பர் மாகாளத்தின் அமர்ந்த 

  பிரான் அடி பணிந்தார்.  116 

 

 

மின்னார் செஞ்சடை அண்ணல் 

  விரும்பு திருப்புகலூரை 

முன்னாகப் பணிந்தேத்தி முதல்வன் 

  தன்அருள் நினைந்து 

பொன்னாரும் உத்தரியம் புரி 

  முந்நூல் அணிமார்பர் 

தென் நாவலூராளி திருவாரூர் 

  சென்று அணைந்தார்.  117 

 

 

தேர் ஆரும் நெடு 

  வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு 

"ஆராத காதலின் நம் 

  ஆரூரன் நாம் அழைக்க 

வாரா நின்றான் அவனை 

  மகிழ்ந்து எதிர்கொள்வீர்" என்று 

நீராரும் சடை முடிமேல் 

 நிலவணிந்தார் அருள் செய்தார்.  118 

 

 

தம்பிரான் அருள் செய்யத் 

 திருத்தொண்டர் அது சாற்றி 

"எம் பிரானார் அருள் தான் 

  இருந்த பரிசு இதுவானால் 

நம் பிரானார் ஆவார் 

  அவரன்றே" எனும் நலத்தால் 

உம்பர் நாடு இழிந்தது என 

  எதிர்கொள்ள உடன் எழுந்தார்.  119 

 

 

மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு 

  பெருங் கொடி நெருங்கத் 

தாளின் நெடுந் தோரணமும் தழைக்

  கமுகும் குழைத் தொடையும் 

நீள் இலைய கதலிகளும் நிறைந்த 

  பசும் பொற்ற சும்பும் 

ஒளி நெடு மணிவிளக்கும் உயர் 

  வாயில் தொறும் நிரைத்தார்.  120 

 

 

சோதி மணி வேதிகைகள் தூநறுஞ் 

  சாந்து அணி நீவிக் 

கோதில் பொரி பொற்சுண்ணங் குளிர் 

  தரள மணி பரப்பி 

தாதிவர் பூந் தொடை மாலைத் 

  தண் பந்தர்களுஞ் சமைத்து 

வீதிகள் நுண் துகள் அடங்க 

  விரைப் பனிநீர் மிகத்தெளித்தார்.  121 

 

 

மங்கல கீதம் பாட மழை 

  நிகர் தூரியம் முழங்கச் 

செங் கயற்கண் முற்றிழையார் தெற்றி 

  தொறும் நடம் பயில 

நங்கள் பிரான் திருவாரூர் நகர் 

  வாழ்வார் நம்பியை முன் 

பொங்கெயில் நீள் திரு வாயில் 

  புறம் உறவந்து எதிர்கொண்டார்.  122 

 

 

வந்து எதிர்கொண்டு வணங்குவார் முன் 

  வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து 

சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் 

 திருத் தொண்டர் தம்மை நோக்கி 

"எந்தை இருப்பதும் ஆரூர் அவர் 

  எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்னும் 

சந்த இசைப் பதிகங்கள் பாடித் 

 தம் பெருமான் திருவாயில் சார்ந்தார்.  123 

 

 

வானுற நீள்திரு வாயில் நோக்கி 

  மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித் 

தேனுறை கற்பக வாச மாலைத் 

  தேவா சிரியன் தொழுது இறைஞ்சி 

ஊனும் உயிரும் உருக்கும் அன்பால்

  உச்சி குவித்த செங்கை களோடும்

தூநறுங் கொன்றையான் மூலட்டானம்

   சூழ்திரு மாளிகை வாயில் புக்கார்.  124 

 

 

புற்றிடங் கொண்ட புரா தனனைப் 

  பூங் கோயில் மேய பிரானையார்க்கும் 

பற்று இடம் ஆயபரம் பொருளைப் 

  பார்ப்பதி பாகனை பங்க யத்தாள் 

அர்ச்சனை செய்ய அருள் புரிந்த 

  அண்ணலை மண்மிசை வீழ்ந்து இறைஞ்சி 

நற்றமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.  125 

 

 

அன்பு பெருக உருகி உள்ளம் 

  அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக 

முன்பு முறைமை யினால் வணங்கி 

  முடிவு இலாக்காதல் முதிர ஓங்கி 

நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி நாயகன் சேவடி எய்தப் பெற்ற 

இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண்டமிழ் மாலை பாட.  126 

 

 

வாழிய மா மறைப் புற்றிடங்கொள் 

   மன்ன வனார் அருளாலோர் வாக்கு 

"தோழமை ஆக உனக்கு நம்மைத் 

   தந்தனம் நாம் முன்பு தொண்டுகொண்ட 

வேள்வியில் அன்று நீ கொண்டகோலம் 

  என்றும் புனைந்து நின் வேட்கை தீர 

வாழி மண் மேல் விளையாடுவாய்" 

  என்று ஆரூரர் கேட்க எழுந்ததுஅன்றே.  127 

 

 

கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் 

  கேடு இலாதானை இறைஞ்சி நின்றே 

ஆட்கொள வந்த மறை யவனே 

  ஆரூர் அமர்ந்த அரு மணியே 

வாட்கயல் கொண்ட கண்மங்கை பங்கா! 

  மற்றுஉன் பெரிய கருணை அன்றே 

நாட் கமலப் பதம் தந்தது 

  இன்று நாயினேனை பொருளாக என்றார்.  128 

 

 

என்று பல முறையால் வணங்கி 

  எய்திய உள்ளக் களிப் பினொடும் 

வென்றி அடல் விடைபோல் நடந்து 

  வீதி விடங்கப் பெருமான் முன்பு 

சென்று தொழுது துதித்து வாழ்ந்து  

  திருமாளிகை வலம் செய்து போந்தார் 

அன்று முதல் அடியார்கள் எல்லாம் 

  தம்பிரான் தோழர் என்றே அறைந்தார்.  129 

 

 

மை வளர் கண்டர் அருளினாலே 

  வண்டமிழ் நாவலர் தம் பெருமான் 

சைவ விடங்கின் அணி புனைந்து 

  சாந்தமும் மாலையும் தாரும் ஆகி 

மெய்வளர் கோலம் எல்லாம் பொலிய 

  மிக்க விழுத்தவ வேந்தர் என்னத் 

தெய்வ மணிப் புற்றுளாரைப் பாடித்திளைத்து 

  மகிழ் வொடுஞ் செல்லா நின்றார்.  130 

 

 

இதற்கு முன் எல்லை இல்லாத் 

  திரு நகர் இதனுள் வந்து 

முதல் பெருங் கயிலை ஆதி 

  முதல்வர் தம் பங்கி னாட்குப் 

பொதுக் கடிந்து உரிமை செய்யும் 

  பூங்குழற் சேடி மாரில் கதிர்த்தபூண் 

ஏந்து கொங்கை கமலினி அவதரித்தாள்.  131 

 

 

கதிர் மணி பிறந்தது என்ன 

  உருத்திர கணிகை மாராம் 

பதி யிலார் குலத்தில் தோன்றிப் 

  பரவையார் என்னும் நாமம் 

விதி யுளி விளக் கத்தாலே 

  மேதகு சான்றோர் ஆன்ற   

மதி யணி புனிதன் நன்னாள் 

  மங்கல அணியால் சாத்தி.  132 

 

 

பரவினர் காப்புப் போற்றிப் பயில் 

  பெருஞ் சுற்றம் திங்கள் 

விரவிய பருவம் தோறும் விழா 

  அணி எடுப்ப மிக்கோர் 

"வர மலர் மங்கை இங்கு 

  வந்தனள்" என்று சிந்தை 

தர வரு மகிழ்ச்சி பொங்கத் 

  தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.  133 

 

 

மானிளம் பிணையோ? தெய்வ 

  வளரிள முகையோ? வாசத் 

தேனிளம் பதமோ? வேலைத் 

  திரைஇளம் பவள வல்லிக் 

கானிளம் கொடியோ? திங்கள் 

  கதிரிளங் கொழுந்தோ? காமன் 

தானிளம் பருவம் கற்கும் 

  தனி இளந் தனுவோ என்ன.  134 

 

 

நாடும் இன்பொற்பு வாய்ப்பு நாளும் 

  நாள் வளர்ந்து பொங்க 

ஆடும் மென் கழங்கும் பந்தும் 

 அம்மனை ஊசல் இன்ன 

பாடும் இன் னிசையும் தங்கள் 

  பனிமலை வல்லி பாதம் 

கூடும் அன்பு உருகப் பாடும் 

  கொள்கையோர் குறிப்புத் தோன்ற.  135 

 

 

பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதை 

  மைப் பருவம் நீங்கி 

அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் 

  மெய்த் தனங்கள் ஈட்டம் 

கெள்ள மிக்குயர்வ போன்ற கொங்கை

  கோங் கரும்பை வீழ்ப்ப 

உள்ள மெய்த் தன்மை முன்னை 

  உண்மையும் தோன்ற உய்ப்பார்.  136 

 

 

பாங்கியர் மருங்கு சூழப் பட 

  ரொளி மறுகு சூழத் 

தேங்கமழ் குழலின் வாசம் திசை

  யெலாம் சென்று சூழ 

ஓங்கு பூங் கோயில் உள்ளார் 

  ஒருவரை அன்பி னோடும் 

பூங் கழல் வணங்க என்றும் 

  போதுவார் ஒருநாட் போந்தார்.  137 

 

 

அணி சிலம்பு அடிகள் பார் 

  வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப 

மணி கிளர் காஞ்சி அல்குல் 

  வரி அர உலகை வென்ற 

துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு 

 சுரி குழற் கழிய விண்ணும் 

பணியும் என்றின வண்டு ஆர்ப்ப 

  பரவையார் போதும் போதில்.  138 

 

 

புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் 

  தொழுது செல்வார் 

சுற்றிய பரிசனங்கள் சூழ 

  ஆளுடை நம்பி 

நற்பெரும்பான்மை கூட்ட நகை

  பொதிந்துஇலங்கு செவ்வாய் 

விற்புரை நுதலின் வேற்கண் 

  விளங்கு இழையவரைக் கண்டார்.  139 

 

 

கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் 

  தன் பெரு வாழ்வோ? 

பொற்புடைய புண்ணி யத்தின் புண்ணி 

  யமோ புயல் சுமந்து 

விற் குவளை பவள மலர் 

  மதிபூத்த விரைக் கொடியோ? 

அற்புதமோ? சிவ னருளோ? அறி 

  யேன் என்று அதிசயித்தார்.  140 

 

 

ஓவிய நான் முகன்

  எழுத ஒண்ணாமை உள்ளத்தால் 

மேவிய தன் வருத்தமுற 

  விதித்ததொரு மணி விளக்கோ 

மூவுலகின் பயனாகி முன் 

  நின்றது என நினைந்து 

நாவலர் காவலர் நின்றார் 

  நடு நின்றார் படைமதனார்.  141 

 

 

தண்டரள மணித் தோடும் தகைத்

  தோடும் கடை பிறழும் 

கெண்டை நெடுங் கண் வியப்பப் 

  கிளர்ஒளிப் பூண் உரவோனை 

அண்டர் பிரான் திருவருளால் அயல் 

  அறியா மனம் விரும்பப் 

பண்டை விதி கடை கூட்டப் 

  பரவையாருங் கண்டார்.  142 

 

 

கண் கொள்ளாக் கவின் பொழிந்த 

  திருமேனி கதிர் விரிப்ப 

விண் கொள்ளாப் பேரொளியான் எதிர் 

  நோக்கும் மெல்லி யலுக்கு 

எண் கொள்ளா காதலின் முன்பு 

  எய்தாத ஒரு வேட்கை 

மண்கொள்ளா நாண் மடம் அச்சம் 

  பயிர்ப்பை வலிந்து எழலும்.  143 

 

 

முன்னே வந்து எதிர் தோன்றும் 

  முருகனோ? பெருகு ஒளியால் 

தன் னேரில் மாரனோ? தார் 

  மார்பின் விஞ் சையனோ? 

மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ? 

என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார்.  144 

 

 

அண்ணல் அவன் தன் மருங்கே 

  அளவு இறந்த காதலினால் 

உண்ணிறையும் குணம் நான்கும் ஒரு 

  புடைச் சாய்ந்தன எனினும் 

வண்ண மலர்க் கரும் கூந்தல் 

  மடக் கொடியை வலிதாக்கிக் 

கண் நுதலைத் தொழும் அன்பே 

  கைக் கொண்டு செலவுய்ப்ப.  145 

 

 

பாங்கு ஓடிச் சிலை வளைத்துப்  

  படை அநங்கன் விடு பாணம் 

தாங் கோலி எம் மருங்கும் 

  தடை செய்ய மடவரலும் 

தேங்கோதை மலர்க்குழல் மேல் சிறை 

  வண்டு கலந்து ஆர்ப்பப் 

பூங்கோயில் அமர்ந்த பிரான் பொற் 

  கோயில் போய்ப் புகுந்தான்.  146 

 

 

வன்தொண்டர் அது கண்டு "என் மனம் 

  கொண்ட மயில் இயலின் 

இன்தொண்டைச் செங்கனி வாய் இளங்கொடி 

  தான் யார்" என்ன 

அன் றங்கு முன் நின்றார் 

  அவர் நங்கை பரவையார் 

சென் றும்பர் தரத்தார்க்கும் சேர்வு 

  அரியார் எனச் செப்ப.  147 

 

 

பேர் பரவை பெண்மையினில் 

  பெரும் பரவை விரும்பல்குல் 

ஆர்பரவை அணி திகழும் 

  மணி முறுவல் அரும் பரவை 

சீர்பரவை ஆயினாள் திரு 

  உருவின் மென் சாயல் 

ஏர்பரவை இடைப் பட்ட 

  என் ஆசை எழு பரவை.  148 

 

 

என்றினைய பலவும் நினைந்து எம் 

  பெருமான் அருள் வகையான் 

முன் தொடர்ந்து வருங் காதல் 

  முறைமை யினால் தொடக்குண்டு 

"நன்று எனை ஆட்கொண்டவர் பால் 

  நண்ணுவன்" என்றுள் மகிழ்ந்து 

சென்றுடைய நம்பியும் போய்த் தேவர் 

  பிரான் கோயில் புக.  149 

 

 

பரவையார் வலங் கொண்டு 

  பணிந்து ஏத்தி முன்னரே 

புரவலனார் கோயிலின் நின்று 

  ஒரு மருங்கு புறப்பட்டார் 

விரவு பெருங் காதலினால் 

  மெல்லியலார் தமை வேண்டி 

அரவின் ஆரம் புனைந்தார் 

  அடி பணிந்தார் ஆரூரர்.  150 

 

 

அவ்வாறு பணிந்து ஏத்தி 

  அணி ஆரூர் மணிப் புற்றின் 

மைவாழும் திரு மிடற்று 

  வானவர்பால் நின்றும் போந்து 

எவ்வாறு சென்றாள் என் 

  இன்னுயிராம் அன்னம் எனச் 

செவ்வாய் வெண் நகைக் 

  கொடியைத் தேடுவார் ஆயினார்.  151 

 

 

பாசமாம் வினைப் பற்று 

  அறுப்பான் மிகும் 

ஆசை மேலும் ஓர் 

  ஆசை அளிப்பதோர் 

தேசின் மன்னி என் 

  சிந்தை மயக்கிய 

ஈசனார் அருள் என் 

  நெறிச் சென்றதே.  152 

 

 

உம்பர் நாயகர் தங்கழல் அல்லது 

நம்புமாறு அறியேனை நடுக்குற 

வம்பு மால் செய்து வல்லியின் ஒல்கியின்று 

எம் பிரான் அருள் எந்நெறிச் சென்றதே.  153 

 

 

பந்தம் வீடு தரும் 

  பரமன் கழல் 

சிந்தை ஆர்வுற உன்னும் 

  என் சிந்தையை 

வந்து மால்செய்து மான் 

  எனவே விழித்து 

எந்தையார் அருள் எந் 

  நெறிச் சென்றதே.  154 

 

 

என்று சாலவும் ஆற்றலர் என்னுயிர் 

நின்றது எங்கு என நித்திலப் பூண் முலை 

மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான் 

சென்று தேவாசிரியனைச் சேர்ந்த பின்.  155 

 

 

காவி நேர் வரும் 

  கண்ணியை நண்ணுவான் 

யாவ ரோடும் உரை 

  யியம்பாது இருந்து 

"ஆவி நல் குவார் 

  ஆரூரை ஆண்டவர் 

பூவின் மங்கையைத் தந்து" 

  எனும் போழ்தினில்.  156 

 

 

நாட்டு நல்லிசை நாவ 

  லூரன் சிந்தை 

வேட்ட மின்னிடை இன் 

  அமு தத்தினைக் 

காட்டுவன் கடலை கடைந்தது 

  என்ப போல் 

பூட்டும் ஏழ் பரித் 

  தேரோன் கடல்புக.  157 

 

 

எய்து மென் பெடையோடும் 

  இரைதேர்ந்து உண்டு 

பொய் கையிற் 

  பகல் போக்கிய புள்ளினம் 

வைகு சேக்கை கண் 

  மேற்செல வந்தது 

பையுள் மாலை 

  தமி யோர் பனிப்புற.  158 

 

 

பஞ்சின் மெல் அடிப் 

  பாவையர் உள்ளமும் 

வஞ்ச மாக்கள் தம்வல் 

  வினையும் அரன் 

அஞ்சு எழுத்தும் உணரா 

  அறி விலோர் 

நெஞ்சும் என்ன இருண்டது 

  நீண்ட வான்.  159 

 

 

மறுவில் சிந்தை வன் 

  தொண்டர் வருந்தினால் 

இறு மருங்குலார்க்கு யார் 

  பிழைப்பார் என்று 

நறுமலர்க் கங்குல் நங்கை 

  முன் கொண்ட புன் 

முறுவல் என்ன முகிழ்த்தது 

  வெண் நிலா.  160 

 

 

அரந்தை செய்வார்க்கு அழுங்கித் 

  தம் ஆருயிர் 

வரன் கைதீண்ட மலர் 

  குலமாதர் போல் 

பரந்த வெம் பகற்கொல்கிப் 

  பனி மதிக் 

கரங்கள் தீண்ட அலர்ந்த 

  கயி ரவம்.  161 

 

 

தோற்றும் மன் உயிர்கட்கு 

  எலாம் தூய்மையே 

சாற்றும் இன்பமும் தண் 

  மையும் தந்துபோய் 

ஆற்ற அண்டம் எலாம் பரந்து அண்ணல் வெண் 

நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா.  162 

 

 

வாவி புள் ளொலி மாறிய மாலையில் 

நாவ லூரரும் நங்கை பரவையாம் 

பாவை தந்த படர் பெருங் காதலும் 

ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.  163 

 

 

தந் திருக் கண் 

  எரிதழலிற் பட்டு 

வெந்த காமன் வெளியே 

  உருச் செய்து 

வந்து என் முன்நின்று 

  வாளி தொடுப்பதே 

எந்தையார் அருள் இவ் 

  வண்ணமோ? என்பார்.  164 

 

 

ஆர்த்தி கண்டும் என்மேல் 

  நின்று அழல்கதிர் 

தூர்ப்பதே! எனைத் தொண்டு 

  கொண்டு ஆண்டவர் 

நீர்த் தரங்க நெடுங்கங்கை 

  நீள் முடிச் 

சாத்தும் வெண்மதி போன்றிலை 

  தண் மதி!.  165 

 

 

அடுத்து மேன்மேல் அலைத்து 

  எழும் ஆழியே 

தடுத்து முன்எனை ஆண்டவர் 

  தாம் உணக் 

கடுத்த நஞ் சுன் 

  தரங்கக் கரங்களால் 

எடுத்து நீட்டு நீ என்னை 

  இன்றுஎன் செயாய்.  166 

 

 

பிறந்தது எங்கள் பிரான் 

  மலயத்து இடைச் 

சிறந்து அணைந்தது தெய்வ 

  நீர் நாட்டினில் 

புறம் பணைத் தடம் 

  பொங்கழல் வீசிட 

மறம் பயின்றது எங்கோ? 

  தமிழ் மாருதம்!.  167 

 

 

இன்ன தன்மைய பின்னும் 

  இயம் புவான் 

மன்னு காதலன் ஆகிய 

  வள்ளல் பால் 

தன் அரும்பெறல் நெஞ்சு 

  தயங்கப் போம் 

அன்னம் அன்னவள் செய் 

  கை அறைகுவாம்.  168 

 

 

கனங்கொண்ட மணிகண்டர் கழல் வணங்கிக் 

  கணவனை முன்பெறுவாள் போல 

இனங் கொண்ட சேடியர்கள் புடைசூழ 

  எய்து பெருங் காதலோடும் 

தனங் கொண்டு தளர் மருங்குற் 

  பரவையும் வன்தொண்டர் பால் 

தனித்துச்சென்ற மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு 

  தன்மணி மாளிகையைச் சார்ந்தாள்.  169 

 

 

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன 

  போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர் 

வேறொருவர் உடன் பேசாள் மெல்ல 

  அடி ஒதுங்கி மாளிகையின் மேலால் 

ஏறி மரகதத் தூணத்து இலங்கு 

  மணி வேதிகையில் நலங்கொள் பொற்கால் 

மாறில் மலர்ச்சேக்கை மிசைமணி நிலா 

  முன்றில் மருங்கிருந்தாள் வந்து.  170 

 

 

அவ்வளவில் அருகிருந்த சேடிதனை 

  முகநோக்கி "ஆரூர் ஆண்ட 

மைவிரவு கண்டரை நாம் வணங்கப்போம் 

  மறுகெதிர் வந்தவரார்?" என்ன 

"இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடொருவர் 

  தாம் எதிர்நின்று ஆண்ட 

சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் 

  தோழனார் நம்பி" என்றாள்.  171 

 

 

என்றவுரை கேட்டலுமே "எம் பிரான் 

  தம ரேயோ" என்னா முன்னம் 

வன்தொண்டர் பால் வைத்த மனக்காதல் 

  அளவு இன்றி வளர்ந்து பொங்க 

நின்ற நிறை நாண்முதலாங் குணங்களுடன் 

  நீங்க உயிர் ஒன்றும் தாங்கி 

மின்தயங்கு நுண் இடையாள் வெவ்வுயிர்த்து 

  மெல்அணை மேல் வீழ்ந்த போது.  172 

 

 

ஆர நறுஞ்சேறு ஆட்டி அரும் 

  பனிநீர் நறுந்திவலை அருகு வீசி 

ஈர இளந் தளிர்க்குளிரி படுத்து 

  மடவார் செய்த இவையும் எல்லாம் 

பேரழலின் நெய் சொரிந்தால் ஒத்தன 

  மற்றுஅதன் மீது சமிதை என்ன 

மாரனும் தன்பெருஞ் சிலையின் வலிகாட்டி 

  மலர் வாளி சொரிந்தான் வந்து.  173 

 

 

மலரமளித் துயில்ஆற்றாள் வரும் தென்றல் 

  மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் 

நிலவுமிழும் தழல்ஆற்றாள் நிறை ஆற்றும் 

  பொறை ஆற்றா நீர்மை யோடும் 

கலவ மயில் என எழுந்து கருங் 

  குழலின் பரமாற்றாக் கையள் ஆகி 

இலவ இதழ்ச் செந்துவர் வாய்நெகிழ்ந்து 

  ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னாள்.  174 

 

 

கந்தம் கமழ்மென் குழலீர்! இதுஎன்? கலை 

  வாண் மதியம் கனல்வான் எனைஇச் 

சந்தின் தழ லைப்பனிநீர் அளவித் 

  தடவுங் கொடியீர்! தவிரீர்! தவிரீர்! 

வந்துஇங்கு உலவும் நிலவும் விரையார் 

  மலை யானிலமும் எரியாய் வருமால் 

அந்தண் புனலும் அரவும் விரவும் 

  சடையான் அருள் பெற்றுடையார் அருளார்.  175 

 

 

புலரும் படியன்றி இரவென்னளவும் பொறையும் 

  நிறையும் இறையும் தரியா, 

உலரும் தனமும் மனமும் வினையேன் 

  ஒருவேன் அளவோ? பெருவாழ்வுரையீர் 

பலரும்புரியும் துயர்தான் இதுவோ படைமன் 

  மதனார்புடை நின்று அகலார்! 

அலரும் நிலவும் மலரும் முடியார் 

  அருள்பெற்று உடையார் அவரோ அறியார்.  176 

 

 

தேரும் கொடியும் மிடையும் மறுகில் 

  திருவா ரூரிர்! நீரே அல்லால் 

ஆரென் துயரம் அறிவார்? அடிகேள் 

  அடியேன் அயரும் படியோ இதுதான்? 

நீரும் பிறையும் பொறிவாள் அரவின் 

  நிரையும் நிரை வெண்டலையின் புடையே 

ஊரும் சடையீர்! விடைமேல் வருவீர்! 

  உமது அன்பிலர்போல் யானோ உறுவேன்?.  177 

 

 

என்றின்னனவே பலவும் புகலும் இருளார் 

  அளகச் சுருள் ஓதியையும் 

வன்தொண்டரையும் படிமேல் வரமுன்பு அருளுவான் 

  அருளும் வகையார் நினைவார் 

சென்று உம்பர்களும் பணியும் செல்வத் 

  திருவாரூர்வாழ் பெருமான் அடிகள் 

அன்றுஅங்கு அவர் மன்றலை நீர்செயும் 

  என்றுஅடியார் அறியும்படியால் அருளி.  178 

 

 

மன்னும் புகழ் நாவலர்கோன் மகிழ "மங்கை 

  பரவை தன்னைத் தந் தோம் 

இன்னவ்வகை நம் அடியார் அறியும் படியே 

  உரை செய்தனம்" என்று அருளிப் 

பொன்னின் புரி புன் சடையன் விடையன் 

  பொருமா கரியின் உரிவை புனைவான் 

அன்னந் நடையாள் பரவைக்கு "அணியது ஆரூரன் 

  பால் மணம்" என்று அருள.  179 

 

 

காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் 

  இருளும் கங்குல் கழி போம் 

யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழு

  காலையில் வந்து அடியார் கூடிச் 

சேமத் துணையாம் அவர் பேர் அருளைத் தொழுதே திரு நாவலர் கோன் மகிழத் 

தாமக் குழலாள் பரவை வதுவை தகு நீர்மை யினால் நிகழச் செய்தார்.  180 

 

 

தென் நாவலூர் மன்னன் தேவர் 

  பிரான் திரு வருளால் 

மின்னாருங் கொடி மருங்குல் பரவை 

  எனும் மெல்லியல் தன் 

பொன் ஆரும் முலை ஓங்கல் 

  புணர் குவடே சார்வாகப் 

பன் னாளும் பயில் யோக 

  பரம்பரையின் விரும்பினார்.  181 

 

 

தன்னை யாளுடைய பிரான் 

  சரணர விந்த மலர் 

சென்னியிலும் சிந்தையிலும் மலர் 

  வித்துத் திருப் பதிகம் 

பன்னு தமிழ்த்தொடை மாலைபல 

  சாத்திப் பரவை எனும் 

மின்னிடையாள் உடன் கூடி 

  விளையாடிச் செல் கின்றார்.  182 

 

 

மாது உடன் கூட வைகி 

  மாளிகை மருங்கு சோலை 

போதலர் வாவி மாடு செய் 

  குன்றின் புடையோர் தெற்றிச் 

சீதளத் தரளப் பந்தர்ச் செழுந் 

  தவிசி இழிந்து தங்கள் 

நாதர் பூங் கோயில் நண்ணிக் 

  கும்பிடும் விருப்பால் நம்பி.  183 

 

 

அந்தரத்து அமரர் போற்றும் அணி 

  கிளர் ஆடை சாத்திச் 

சந் தனத்து அளறு தோய்ந்த 

  குங்குமக் கலவை சாத்திச் 

சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர் 

  மணிக் கலன்கள் சாத்தி 

இந்திரத் திருவின் மேலாம் எழில் 

  மிக விளங்கித் தோன்ற.  184 

 

 

கையினிற் புனை பொற் கோலும் 

  காதினில் இலங்கு தோடும் 

மெய் யினில் துவளு நூலும் 

  நெற்றியில் விளங்கும் நீறும் 

ஐயனுக்கு அழகு இதாம் என்று 

  ஆயிழை மகளிர் போற்றச் 

சைவ மெய்த்திருவின் கோலம் தழைப்ப 

  வீதி யினைச் சார்ந்தார்.  185 

 

 

நாவலூர் வந்த சைவ நற் 

  தவக் களிறே என்றும் 

"மேலவர் புரங்கள் செற்ற விடை

  யவர்க்கு அன்பர்" என்றும் 

"தாவில் சீர்ப் பெருமை ஆரூர் 

  மறையவர் தலைவ" என்றும் 

மேவினர் இரண்டு பாலும் வேறு 

  வேறா யம் போற்ற.  186 

 

 

கைக் கடா குரங்கு கோழி 

  சிவல் கவுதாரி பற்றிப் 

பக்கம் முன் போதுவார்கள் பயில் 

  மொழி பயிற்றிச் செல்ல 

மிக்க பூம் பிடகை கொள்வோர் 

  விரையடைப் பையோர் சூழ 

மைக்கருங் கண்ணி னார்கள் மறுக 

  நீள் மறுகில் வந்தார்.  187 

 

 

பொலங் கலப் புரவி பண்ணிப் 

  போதுவார் பின்பு போத 

இலங்கொளி வலயப் பொற்தோள் இடை 

  இடை மிடைந்து தொங்கல் 

நலங் கிளர் நீழல் சூழ 

  நான்மறை முனிவரோடும் 

அல ங்கலந் தோளினான் வந்து 

  அணைந்தனன் அண்ணல் கோயில்.  188 

 

 

கண் நுதல் கோயில் தேவ 

  ஆசிரியன் ஆம் காவணத்து 

விண்ணவர் ஒழிய மண் மேல்மிக்க 

  சீர் அடியார் கூடி 

எண்இலார் இருந்த போதில் இவர்க்கு 

  யான் அடியான் ஆகப் 

பண்ணு நாள் எந்நாள் என்று 

  பரமர்தாள் பரவிச் சென்றார்.  189 

 

 

அடி யவர்க்கு அடியன் ஆவேன்" 

  என்னும் ஆதரவு கூரக் 

கொடி நெடும் கொற்ற வாயில்

   பணிந்துகை குவித்துப் புக்கார் 

கடிகொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு 

  எதிர் காணக் காட்டும் 

படி எதிர் தோன்றி நிற்கப் 

  பாதங்கள் பணிந்து பூண்டு.  190 

 

 

மன்பெருந் திருமா மறை 

  வண்டு சூழ்ந்(து) 

அன்பர் சிந்தை அலர்ந்த 

  செந் தாமரை 

நன்பெரும் பரம ஆனந்த 

  நன் மது 

என் தரத்தும் அளித்து 

  எதிர் நின்றன.  191 

 

 

ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின 

காலன் ஆருயிர் மாளக் கறுத்தன

மாலை தாழ் குழல் மாமலையாள் செங் கை 

சீலம் ஆக வருடச் சிவந்தன.  192 

 

 

நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன

வேதி யாதவர் தம்மை வேதிப்பன

சோதியாய் எழுஞ் சோதியுட் சோதிய 

ஆதி மால் அயன் காணா அளவின.  193 

 

 

வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன 

பேதையேன் செய் பிழை பொறுத்து ஆண்டன 

ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன 

பூத நாத! நின் புண்டரீகப் பதம்.  194 

 

 

இன்னவாறு ஏத்துநம்பிக் கேறு 

 சேவகனார் தாமும் 

அந்நிலை அவர்தாம் வேண்டும் 

  அதனையே அருளவேண்டி 

மன்னு சீர்அடியார் தங்கள் வழித் 

  தொண்டை உணர நல்கிப் 

பின்னையும் அவர்கள் தங்கள் 

  பெருமையை அருளிச் செய்வார்.  195 

 

 

பெருமையால் தம்மை ஒப்பார்

  பேணலால் எம்மைப் பெற்றார் 

ஒருமையால் உலகை வெல்வார்

 ஊனம்மேல் ஒன்றும் இல்லார்

அருமையாம் நிலையில் நின்றார்

 அன்பினால் இன்பம் ஆர்வார் 

இருமையும் கடந்து நின்றார் இவரை 

  நீ அடைவாய் என்று.  196 

 

 

நாதனார் அருளிச் செய்ய நம்பி 

  ஆரூரர்" நான் இங்கு 

ஏதந் தீர் நெறியைப் பெற்றேன்" 

  என்றெதிர் வணங்கிப் போற்ற 

" நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து 

  நீ நிறை சொன் மாலை 

கோதிலா வாய் மையாலே பா"

  டென அண்ணல் கூற.  197 

 

 

தன்னை ஆளுடைய நாதன் தான் 

  அருள் செய்யக் கேட்டுச் 

சென்னியால் வணங்கி நின்ற திரு 

  முனைப் பாடி நாடர் 

"இன்னவாறு இன்ன பண்பு என்று 

  ஏத்துகேன் அதற்கு யான்யார் 

பன்னுபா மாலை பாடும் பரிசு 

  எனக்கு அருள்செய்" என்ன.  198 

 

 

தொல்லை மால் வரை பயந்த 

  தூய்ஆள் தன் திருப் பாகன் 

அல்லல் தீர்ந்து உலகு உய்ய 

  மறை அளித்த திரு வாக்கால் 

" தில்லை வாழ் அந்தணர் தம் 

  அடி யார்க்கும் அடியேன்" என்று 

"எல்லை யில் வண் புகழாரை 

  எடுத்து இசைப்பா மொழி" என்றார்.  199 

 

 

மன்னு சீர் வயல் ஆரூர் 

  மன்னவரை வன் தொண்டர் 

சென்னியுற அடி வணங்கித் திருவருள் 

  மேல் கொள் பொழுதில் 

முன்னம் மால் அயன் அறியா 

  முதல்வர்தாம் எழுந்து அருள 

அந்நிலை கண்டு அடியவர் பால் 

  சார்வதனுக்கு அணை கின்றார்.  200 

 

 

தூரத்தே திரு க்கூட்டம் பல 

  முறையால் தொழுது அன்பு 

சேரத் தாழ்ந்து எழுந்து அருகுசென்று 

  எய்தி நின்று அழியா 

வீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி 

  வேறு அடியேன் என்று 

ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் 

  பதிகம் அருள் செய்தார்.  201 

 

 

தம் பெருமான் கொடுத்த மொழி 

  முதல் ஆகத் தமிழ் மாலைச் 

செம் பொருளால் திருத் தொண்டத் 

  தொகை ஆன திருப் பதிகம் 

உம்பர் பிரான் தான் அருளும் 

உணர்வு பெற உல கேத்த 

எம் பெருமான் வன் தொண்டர் 

  பாடி அவர் எதிர் பணிந்தார்.  202 

 

 

உம்பர் நாயகர் அடியார் பேர் 

  உவகை தாம் எய்த 

நம்பி ஆரூரர் திருக் 

  கூட்டத்தின் நடு வணைந்தார் 

தம்பிரான் தோழர் அவர் தாம் 

  மொழிந்த தமிழ் முறையே 

எம் பிரான் தமர்கள் திருத் 

  தொண்டு ஏத்தல் உறுகின்றேன். 203

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மதுரை நகர் அமைத்தல்
View Details
காக புஜண்டர்
View Details
செருத்துணை நாயனார்
View Details