அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்
திருமுறை : பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து
நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி
லேன்அன்று வானர்உய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை
யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்கு
யான்இனி யாரென்பரே. 1
என்பும் தழுவிய ஊனும்
நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர்
தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ
லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின்
றாடிய விண்ணவனே. 2
அவநெறிக் கேவிழப் புக்கஇந்
நான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேஇட்ட தத்துவ
னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ
னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை
நட்டம் பயில்கின்றதே. 3
பயில்கின் றிலேன்நின் திறத்திரு
நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன் நின் திருவடிக்
கேஅப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம்
பலத்துள்எந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நான்எங்ங னேபெறு
மாறுநின் னாரருளே. 4
அருதிக்கு விம்மி நிவந்ததோ
வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்ற
தேஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும்
கைத்தலம் நான்கும்மெய்த்த
சுருதிப் பதம்முழங் குந்தில்லை
மேய சுடரினுக்கே. 5
சுடலைப் பொடியும் படுதலை
மாலையும் சூழ்ந்தஎன்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென்
தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை
வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது
வேத வினோதத்தையே. 6
வேத முதல்வன் தலையும்
தலையாய வேள்விதன்னுள்
நாதன் அவன்எச்சன் நற்றலை
யும்தக்க னார்தலையும்
காதிய தில்லைச்சிற் றம்பலத்
தான்கழல் சூழந்துநின்று
மாதவர் என்னோ மறைமொழி
யாலே வழுத்துவதே. 7
வழுத்திய சீர்த்திரு மால்உல
குண்டவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றானுக்கப்
பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம்
பலத்தான் திருக்கடையிட
அழுத்திய கல்லொத் தனன்ஆயன்
ஆகிய மாயவனே. 8
மாயவன் முந்நீர்த் துயின்றவன்
அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல்
நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின்
றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என்
தலைமறை நன்னிழலே. 9
நிழல்படு பூண்நெடு மால்அயன்
காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னகல் ஏந்தித்
தமருகந் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி
நீர்த்தில்லை அம்பலத்தே
குழல்படு சொல்வழி ஆடுவர்
யாவர்க்கும் கூத்தினையே. 10
கூத்தனென் றுந்தில்லை வாணன்என்
றும்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை
யாதே இடுசுணங்கை
மூத்தவன் பெண்டீர் குணலையிட்
டாலும் முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ
இவளுக்குத் தண்ணெனவே. 11
தண்ணார் புனல்தில்லைச்
சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப்
பாயென் உடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங்
கிலோதிரு நாமங்கள்கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி
லோஎனக் கிப்பிறப்பே. 12
பிறவியிற் பெற்ற பயனொன்று
கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள்
நாடகம் ஆடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக்
கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண்
டின்பத்தை உண்டிடவே. 13
உண்டேன் அவரருள் ஆரமிர்
தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும்
கனலும் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய
நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்
தாடும் மணியினையே. 14
மணியொப் பனதிரு மால்மகு
டத்து மலர்க்கமலத்
தணியொப் பனஅவன் தன்முடி
மேல்அடி யேன்இடர்க்குத்
துணியச் சமைந்தநல் லீர்வாள்
அனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை அம்பலத்
தான்தன் திருந்தடியே. 15
அடியிட்ட கண்ணினுக் கோஅவன்
அன்பினுக் கோஅவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற்
கோதில்லை அம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட்
பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது
வாய்ந்த அரும்படையே. 16
படைபடு கண்ணிதன் பங்கதென்
தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பம்
கேள்என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும்
நீவைத் தருளுகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய
பாதம்என் னுள்புகவே. 17
புகவுகிர் வாளெயிற் றால்நிலம்
கீண்டு பொறிகலங்கி
மிகவுகு மாற்கரும் பாதத்த
னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற்
கங்கணன் என்றனன்றும்
தகவு கொலாந்தக வன்று
கொலாமென்று சங்கிப்பனே. 18
சங்கோர் கரத்தன் மகன்தக்கன்
தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள்தலை
ஊர்வேள்வி சீர்உடலம்
அங்கோல வெவ்வழ லாயிட்
டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன்
கடைக்கண் சிவந்திடவே. 19
ஏவுசெய் மேருத் தடக்கை
எழில்தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான்அன்றி
அங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல்
வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட்
டியதிறல் வேடுவனே. 20
வேடனென் றாள்வில் விசயற்கு
வெங்கணை அன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென்
றாள்இடக் காதில்இட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை
அம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை அங்கைச்
சரிவளை சிந்தினவே. 21
சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம்
என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம்
மான்தன் அருள்பெறவே. 22
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத்
தான்தன் அருளி னன்றிப்
பொருள்தரு வானத் தரசாத
லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோன்அரு
ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து
வீழும் இருஞ்சிறையே. 23
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல்
தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு
நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந்
தோடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோஅயன் மாலினொ
டும்பர்தம் நாயகற்கே. 24
அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக்
கூத்த அடியம்இட்ட
முகிழ்சூழ் இலையும் முகைகளும்
ஏயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித்
திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூழ் இமையவர் போற்றித்
தொழும்நின் பூங்கழற்கே. 25
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப்
பொலிசெம்பொன் அம்பலத்து
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ
தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன்
பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும்
திருவமிர் தாகியதே. 26
ஆகங் கனகனைக் கீறிய
கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு
ளாயெனத் தில்லைப்பிரான்
வேகந் தருஞ்சிம்புள் விட்டரி
வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன்
றோஇந்த மூவுலகே. 27
மூவுல கத்தவர் ஏத்தித்
தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர்
யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன்
மால்அயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன்
மாமிக்க வேதங்களே. 28
வேதகச் சிந்தை விரும்பிய
வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்சேய
வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள்
அரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்னையன்
தந்த தலைமகனே. 29
தலையவன் பின்னவன் தாய்தந்தை
இந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந்
தோன்நடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன்
ஆலத்தெழு கொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை
அம்பலத் துள்இறையே. 30
இறையும் தெளிகிலர் கண்டும்
எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு
ளால்அன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ
ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ
னும்புக்க நல்வழியே. 31
நல்வழி நின்றார் பகைநன்று
நொய்யர் உறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு
சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர்எரித்
தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன்
காண்க சிவகதியே. 32
கதியே அடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர்
தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே. 33
பிழையா யினவே பெருக்கிநின்
பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும்
மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை
முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய்தில்லை
நாத பொறுத்தருளே. 34
பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப்
பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப்
பிரான்அத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத்
தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக்
கென்கொல் அடுப்பனவே. 35
அடுக்கிய சீலைய ராய்அகல்
ஏந்தித் தசைஎலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூண்இரப்
பார்ஒள் இரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச்
சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்தன் தில்லை
தொழாவிட்ட ஏழையரே. 36
ஏழையென் புன்மை கருதா
திடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே
மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க
வளர்தில்லை அம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி
மேல்வைத்த புண்ணியனே. 37
புண்ணிய னேஎன்று போற்றி
செயாது புலன்வழியே
நண்ணிய னேற் கினி யாது
கொலாம்புகல் என்னுள்வந்திட்
டண்ணிய னேதில்லை அம்பல
வாஅலர் திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன்
வெளுப்பக் கறுத்தவனே. 38
கறுத்தகண் டாஅண்ட வாணா
வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை
யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ
பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ
வருஞ்சொல் அரும்பழியே. 39
பழித்தக் கவும்இக ழான்தில்லை
யான்பண்டு வேட்டுவனும்
பழித்திட் டிறைச்சி கலையன்
அளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீர்அதி பத்தன்
படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க என்னா தமிர்துசெய்
தான்என் றியம்புவரே. 40
வரந்தரு மாறிதன் மேலும்உண்
டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற
பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற என்னையும்
மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன்
பேசருந் தன்மைஇதே. 41
தன்றாள் தரித்தார் யாவர்க்கும்
மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க்
கொடிமேல் விடைஉடையோன்
மன்றாட வும்பின்னும் மற்றவன்
பாதம் வணங்கிஅங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர்அந்
தோசில ஊமர்களே. 42
களைகண் இலாமையும் தன்பொற்
கழல்துணை யாம்தன்மையும்
துளைகள் நிலாம்முகக் கைக்கரிப்
போர்வைச் சுரம்நினையான்
தளைகள் நிலாமலர்க் கொன்றையன்
தண்புலி யூரன்என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும்
அநங்கன் வரிசிலையே. 43
வரித்தடந் திண்சிலை மன்மதன்
ஆதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மகன் என்பதோர்
பொற்பும் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம்
பலவன் திருப்புருவம்
நெரித்தலுங் கண்டது வெண்பொடி
யேயன்றி நின்றிலவே. 44
நின்றில வேவிச யன்னொடும்
சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநடம் ஆடும்
பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச்
சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந்
தார்த்த கரியவனே. 45
கருப்புரு வத்திரு வார்த்தைகள்
கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம்
உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை என்னைவந்
தாண்டதும் எவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை
ஆடல் புரிந்தவனே. 46
புரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி
லேயும் திசைவழியே
விரிந்தகங் கைம்மலர் சென்னியில்
கூப்பில் வியன்நமனார்
பரிந்தவன் ஊர்புகல் இல்லை
பதிமூன் றெரியஅம்பு
தெரிந்த எங் கோன்தன் திரையார்
புனல்வயல் சேண்தில்லையே. 47
சேண்தில்லை மாநகர்த் திப்பியக்
கூத்தனைக் கண்டும்அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை
ஆங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை இன்னம் புலன்வழி
யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னைஎன் செய்திட
வோசிந்தை நீவிளம்பே. 48
விளவைத் தளர்வித்த விண்டுவும்
தாமரை மேல்அயனும்
அளவிற் கறியா வகைநின்ற
அன்றும் அடுக்கல் பெற்ற
தளர்விற் றிருநகை யாளும்நின்
பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட
வார்சடைக் கங்கையனே. 49
கங்கை வலம்இடம் பூவலம்
குண்டலம் தோடிடப்பால்
தங்கும் கரவலம் வெம்மழு
வீயிடம் பாந்தள்வலம்
சங்கம் இடம்வலம் தோலிடம்
ஆடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன்
வலங்காண் இடம்அணங்கே. 50
அணங்கா டகக்குன்ற மாதற
வாட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை எல்லை
மிதித்தலும் என்புருகா
வணங்கா வழுத்தா விழாஎழும்
பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவள்என்ன என்றுகொ
லாம்வந்து கூடுவதே. 51
கூடுவ தம்பலக் கூத்தன்
அடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவன் ஆக்கம்அச்
செவ்வழி அவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ
தொண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல்
லோர்செய்யும் வித்தகமே. 52
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக்
கண்டத் தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை
மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும்
திறத்தா கமிகர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக் கெங்குத்த
தோஅரன் பொன்னடியே. 53
பொன்னம் பலத்துறை புண்ணியன்
என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக்
கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீர்அறு
வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் பிழைதவிர்ந் தீர்அறு
வேலிகொள் பிஞ்ஞகனே. 54
நேசன்அல் லேன்நினை யேன்வினை
தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ்
சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானை பொன்னார்
திருச் சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப் பென்னாய்க்
கழியுங்கொல் என்தனக்கே. 55
தனந்தலை சக்கரம் வானத்
தலைமை குபேரன்தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா
சவன்உயிர் பல்லுடல்ஊர்
சினந்தலை காலன் பகல்காமன்
தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்அரு ளால்முனி
வால்பெற் றிகந்தவரே. 56
அவமதித் தாழ்நர கத்தில்
இடப்படும் ஆதர்களும்
தவமதித் தொப்பிலர் என்னவிண்
ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம்
பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும்
நினைந்திட்ட செல்வருமே. 57
வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப் பொருளைத்
தெருளாத உள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே. 58
சிரித்திட்ட செம்பவ ளத்தின்
திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும்
வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச்
சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லைச் சிற்றம்
பலத்துத் திருநடனே. 59
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி
வென்செய்யும் காமன்அன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக்
குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர்
வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலன்அந் நாள்நின்
றுதையுணா விட்டனனே. 60
விட்டங் கொளிமணிப் பூண்திகழ்
வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியநல் லான்அல்லன்
அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை எய்தலும்
தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று
பார்க்கப் பொடிந்தனனே. 61
பொடியேர் தருமே னியனாகிப்
பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு
கோயிற் கருவியில்லா
வடியே படஅமை யுங்கணை
என்ற வரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத்
தாடிதன் மொய்கழலே. 62
கழலும் பசுபாச ராம்இமை
யோர்தங் கழல்பணிந்திட்
டழலும் இருக்கும் தருக்குடை
யோர்இடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித்
தாடிசிற் றம்பலத்தைச்
சுழலும் ஒருகால் இருகால்
வரவல்ல தோன்றல்களே. 63
தோன்றலை வெண்மதி தாங்கியைத்
துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி
யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்தலை ஆன்பால் அதுகலந்
தால்அன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென்
றோதில்லை மன்றிடையே. 64
மன்றங் கமர்திருச் சிற்றம்
பலவ வடவனத்து
மின்றங் கிடைக்குந்தி நாடக
மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச்
சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேல்அடை
யாவிட்ட கைதவமே. 65
தவனைத் தவத்தவர்க் கன்பனைத்
தன்அடி எற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத்
தைச்சிவந் தானைச் செய்ய
அவனைத் தவளத் திருநீ
றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை
வல்வினை பற்றறவே. 66
பற்றற முப்புரம் வெந்தது
பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலில்
நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புகழ் ஏத்தித்
திரிவது சூழ்சடையோய்
புற்றர வாட்டித் திரியும்
அதுவொரு புல்லனவே. 67
புல்லறி வின்மற்றைத் தேவரும்
பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணிய
னைப்போல் அருளுவரே
கல்லெறிந் தானும்தன் வாய்நீர்
கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா
வழிசென்று நண்ணினரே. 68
நண்ணிய தீவினை நாசஞ்
செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோர்
உலகத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம்
பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை
யாரத் தொழுமின்களே. 69
கைச்செல்வம் எய்திட லாமென்று
பின்சென்று கண்குழித்தல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே
என்றும் பொன்றல்இல்லா
அச்செல்வம் எய்திட வேண்டுதி
யேல்தில்லை அம்பலத்துள்
இச்செல்வன் பாதம் கருதிரந்
தேன்உன்னை என்நெஞ்சமே. 70
திருச்சிற்றம்பலம்