முதல்-திருமுறை

113 எரித்தவன் முப்புரம்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  வல்லம்

திருச்சிற்றம்பலம்

 

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்

தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்

விரித்தவன் வேதங்கள் வேறுவேறு

தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.  1 

 

தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்

தூயவன் தூமதி சூடியெல்லாம்

ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்

சேயவன் உறைவிடந் திருவல்லமே.  2 

 

பார்த்தவன் காமனைப் பண்பழியப்

போர்த்தவன் போதகத் தின்னுரிவை

ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று

சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே.  3 

 

கொய்தஅம் மலரடி கூடுவார்தம்

மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்

பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்

செய்தவன் உறைவிடந் திருவல்லமே.  4 

 

சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்

நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்

தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே

சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.  5 

 

பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்

உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று

விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று

சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே.  6 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7 

 

இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்

ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்

நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே

திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.  8 

 

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய

அரியவன் அருமறை யங்கமானான்

கரியவன் நான்முகன் காணவொண்ணாத்

தெரியவன் உறைவிடந் திருவல்லமே.  9 

 

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்

குன்றிய அறவுரை கூறாவண்ணம்

வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்

சென்றவன் உறைவிடந் திருவல்லமே.  10 

 

கற்றவர் திருவல்லங் கண்டுசென்று

நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன

குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்

பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே. 11

 

திருச்சிற்றம்பலம்