முதல்-திருமுறை

112 இன்குர லிசைகெழும்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  சிவபுரம்

திருச்சிற்றம்பலம்

 

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்

தன்கரம் மருவிய சதுரன்நகர்

பொன்கரை பொருபழங் காவிரியின்

தென்கரை மருவிய சிவபுரமே.  1 

 

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்

பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்

வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்

சென்றடி வீழ்தரு சிவபுரமே.  2 

 

மலைமகள் மறுகிட மதகரியைக்

கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்

அலைமல்கும் அரிசிலி னதனயலே

சிலைமல்கு மதிலணி சிவபுரமே.  3 

 

மண்புன லனலொடு மாருதமும்

விண்புனை மருவிய விகிர்தன்நகர்

பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்

செண்பக மலர்பொழிற் சிவபுரமே.  4 

 

வீறுநன் குடையவள் மேனிபாகங்

கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்

தேறலுண் டெழுதரு சிவபுரமே.  5 

 

மாறெதிர் வருதிரி புரமெரித்து

நீறது வாக்கிய நிமலன்நகர்

நாறுடை நடுபவர் உழவரொடுஞ்

சேறுடை வயலணி சிவபுரமே.  6 

 

ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு

மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்

பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்

சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.  7 

 

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்

முழுவலி யடக்கிய முதல்வன்நகர்

விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து

செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.  8 

 

சங்கள வியகையன் சதுர்முகனும்

அங்கள வறிவரி யவன்நகர்தான்

கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்

செங்கனி நுகர்தரு சிவபுரமே.  9 

 

மண்டையின் குண்டிகை மாசுதரும்

மிண்டரை விலக்கிய விமலன்நகர்

பண்டமர் தருபழங் காவிரியின்

தெண்டிரை பொருதெழு சிவபுரமே.  10 

 

சிவனுறை தருசிவ புரநகரைக்

கவுணியர் குலபதி காழியர்கோன்

தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்

நவமொடு சிவகதி நண்ணுவரே. 11

 

திருச்சிற்றம்பலம்