பதினொன்றாம்-திருமுறை

006 க்ஷேத்திரத் திருவெண்பா

அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்

  திருமுறை : பதினொன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஓடுகின்ற நீர்மை 

  ஒழிதலுமே உற்றாரும்

கோடுகின்றார் மூப்புங் 

  குறுகிற்று -நாடுகின்ற

நல்லச்சிற் றம்பலமே 

  நண்ணாமுன் நன்னெஞ்சே

தில்லைச்சிற் றம்பலமே சேர்.  1 

 

 

கடுவடுத்த நீர்கொடுவா 

  காடிதா என்று

நடுநடுத்து நாவடங்கா 

  முன்னம் - பொடியடுத்த

பாழ்க்கோட்டஞ் சேராமுன் 

  பன்மாடத் தென்குடந்தைக்

கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.  2 

 

 

குந்தி நடந்து 

  குனிந்தொருகை கோலூன்றி

நொந்திருமி ஏங்கி 

  நுரைத்தேறி - வந்துந்தி

ஐயாறு வாயாறு 

  பாயாமுன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை.  3 

 

 

காளை வடிவொழிந்து 

  கையுறவோ டையுறவாய்

நாளும் அணுகி 

  நலியாமுன் - பாளை

அவிழ்கமுகம் பூஞ்சோலை 

  ஆருரற் காளாய்க்

கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.  4 

 

 

வஞ்சியன நுண்ணிடையார் 

  வாள்தடங்கண் நீர்சோரக்

குஞ்சி குறங்கின்மேற் 

  கொண்டிருந்து - கஞ்சி

அருத்தொருத்தி கொண்டுவா 

  என்னாமுன் நெஞ்சே

திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.  5 

 

 

காலைக் கலையிழையாற் 

  கட்டித்தன் கையார்த்து

மாலை தலைக்கணிந்து 

  மையெழுதி - மேலோர்

பருக்கோடி மூடிப் 

  பலரழா முன்னம்

திருக்கோடி காஅடைநீ சென்று.  6 

 

 

மாண்டுவாய் அங்காவா 

  முன்னம் மடநெஞ்சே

வேண்டுவாய் ஆகி 

  விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்

தென்னிடைவாய் மேய 

  சிவனார் திருநாமம்

நின்னிடைவாய் வைத்து நினை.  7 

 

 

தொட்டுத் தடவித் 

  துடிப்பொன்றுங் காணாது

பெட்டப் பிணமென்று 

  பேரிட்டுக் - கட்டி

எடுங்களத்தா என்னாமுன் 

  ஏழைமட நெஞ்சே

நெடுங்களத்தான் பாதம் நினை.  8 

 

 

அழுகு திரிகுரம்பை 

  ஆங்கதுவிட் டாவி

ஒழுகும் பொழுதறிய 

  ஒண்ணா - கழுகு

கழித்துண் டலையாமுன் 

  காவிரியின் தென்பால்

குழித்தண் டலையானைக் கூறு.  9 

 

 

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் 

  பாரெலாம் ஆண்ட

முடியரசர் செல்வத்து 

  மும்மைக் - கடியிலங்கு

தோடேந்து கொன்றையந்தார்ச் 

  சோதிக்குத் தொண்டுபட்

டோடேந்தி உண்ப துறும்.  10 

 

 

குழீஇயிருந்த சுற்றம் 

  குணங்கள்பா ராட்ட

வழீஇயிருந்த அங்கங்கள் 

  எல்லாம் - தழீஇயிருந்தும்

என்னானைக் காவா 

  இதுதகா தென்னாமுன்

தென்னானைக்கா அடைநீ சென்று.  11 

 

 

குயிலொத் திருள்குஞ்சி 

  கொக்கொத் திருமல்

பயிலப் புகாமுன்னம் 

  நெஞ்சே - மயிலைத்

திருப்புன்னை யங்கானல் 

  சிந்தியா யாகில்

இருப்பின்னை யங்காந் திளைத்து.  12 

 

 

காளையர்கள் ஈளையர்க 

  ளாகிக் கருமயிரும்

பூளையெனப் பொங்கிப் 

  பொலிவழிந்து - சூளையர்கள்

ஓகாளஞ் செய்யாமுன் 

  நெஞ்சமே உஞ்சேனை

மாகாளங் கைதொழுது வாழ்த்து.  13 

 

 

இல்லும் பொருளும் 

  இருந்த மனையளவே

சொல்லும் அயலார் 

  துடிப்பளவே - நல்ல

கிளைகுளத்து நீரளவே 

  கிற்றியே நெஞ்சே

வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.  14 

 

 

அஞ்சனஞ்சேர் கண்ணார் 

  அருவருக்கும் அப்பதமாய்க்

குஞ்சி வெளுத்துடலங் 

  கோடாமுன் - நெஞ்சமே

போய்க்காடு கூடப் 

  புலம்பாது பூம்புகார்ச்

சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.  15 

 

 

இட்ட குடிநீர் இருநாழி ஓருழக்காச்

சட்டஒரு முட்டைநெய் 

  தான்கலந் - தட்ட

அருவாச்சா றென்றங் 

  கழாமுன்னம் பாச்சில்

திருவாச்சி ராமமே சேர்.  16 

 

 

கழிந்தது நென்னற்றுக் 

  கட்டுவிட்டு நாறி

ஒழிந்த துடல்இரா 

  வண்ணம் - அழிந்த

திராமலையா கொண்டுபோ 

  என்னாமுன் நெஞ்சே

சிராமலையான் பாதமே சேர்.  17 

 

 

இழவாடிச் சுற்றத்தார் 

  எல்லாருங் கூடி

விழவாடி ஆவிவிடா 

  முன்னம் - மழபாடி

ஆண்டானை ஆரமுதை 

  அன்றயன்மால் காணாமை

நீண்டானை நெஞ்சே நினை.  18 

 

 

உள்ளிடத்தான் வல்லையே 

  நெஞ்சமே ஊழ்வினைகள்

கள்ளிடத்தான் வந்து 

  கலவாமுன் - கொள்ளிடத்தின்

தென்திருவாப் பாடியான் 

  தெய்வமறை நான்கினையும்

தன்திருவாய்ப் பாடியான் தாள்.  19 

 

 

என்னெஞ்சே உன்னை 

  இரந்தும் உரைக்கின்றேன்

கன்னஞ்செய் வாயாகிற் 

  காலத்தால் - வன்னெஞ்சேய்

மாகம்பத் தானை 

  உரித்தானை வண்கச்சி

ஏகம்பத் தானை இறைஞ்சு.  20 

 

 

கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் 

  கால்குலைய மற்றோர்

மரம்ஊன்றி வாய்குதட்டா 

  முன்னம் - புரம்மூன்றுந்

தீச்சரத்தாற் செற்றான் 

  திருப்பனந்தாள் தாடகைய

ஈச்சரத்தான் பாதமே ஏத்து.  21 

 

 

தஞ்சாக மூவுலகும் 

  ஆண்டு தலையளித்திட்

டெஞ்சாமை பெற்றிடினும் 

  யான்வேண்டேன் - நஞ்சங்

கரந்துண்ட கண்டர்தம் 

  ஒற்றியூர் பற்றி

இரந்துண் டிருக்கப் பெறின்.  22 

 

 

நூற்றனைத்தோர் பல்லூழி 

  நுண்வயிர வெண்குடைக்கீழ்

வீற்றிருந்த செல்வம் 

  விழையாதே - கூற்றுதைத்தான்

ஆடரவங் கச்சா 

  அரைக்கசைத்த அம்மான்தன்

பாடரவங் கேட்ட பகல்.  23 

 

 

உய்யும் மருந்திதனை 

  உண்மின் எனஉற்றார்

கையைப் பிடித்தெதிரே 

  காட்டியக்காற் - பைய

எழுந்திருமி யான்வேண்டேன் 

  என்னாமுன் நெஞ்சே

செழுந்திரும யானமே சேர்.  24 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

அனாயா நாயனார்
View Details
பன்றிக் குட்டிகளைப் பாலூற்றிக் காப்பாற்றல்
View Details
படையுடன் சோழனை மடுவில் வீழ்த்தல்
View Details