பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 21. தோத்திரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மாயனை நாடி மனநெடும் தேரேறிப்

போயின நாடறி யாதே புலம்புவர்

தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்

காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.  1 

 

 

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்

இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்

முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்

பன்னினர் என்றே பாடறி வீரே.  2 

 

 

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை

எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை

அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்

பித்தன் இவனென்று பேசுகின் றாரே.  3 

 

 

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி

புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்

புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்

புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.  4 

 

 

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்

வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு

நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்

கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே.  5 

 

 

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை

ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்

ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்

காமம் ஓர் ஆயிரம் கண்டொழிந் தாரே.  6 

 

 

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்

தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்

போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.  7 

 

 

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை

ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்

வானோர் உலகம் வழிபட மீண்டபின்

தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.  8 

 

 

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்

இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்

சுந்தர மாதர் துழனியொன்று அல்லது

அந்தர வானத்தின் அப்புறம் ஆமே.  9 

 

 

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்

எண்ணிற் கலங்கி இறைவன் இவன்எனார்

உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்

தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே.  10 

 

 

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்

கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்

சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்

அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே.  11 

 

 

அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்

சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை

புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி

வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.  12 

 

 

வள்ளல் தலைவனை வானநன் னாடனை

வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக்

கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று

உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே.  13 

 

 

ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை

நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்

கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்

வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே.  14 

 

 

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்

பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்

திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்

வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே.  15 

 

 

வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில்

தானகம் இல்லாத் தனியாகும் போதகன்

கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும்

பானகச் சோதியைப் பற்றிநின் றேனே.  16 

 

 

விதியது மேலை அமரர் உறையும்

பதியது பாய்புனல் கங்கையும் உண்டு

துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்

பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே.  17 

 

 

மேலது வானவர் கீழது மாதவர்

தானிடர் மானுடர் கீழது மாதனங்

கானது கூவிள மாலை கமழ்சடை

ஆனது செய்யும்எம் ஆருயிர் தானே.  18 

 

 

சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை

ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி

யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன்

வாழும் எழுத்தைந்து மன்னனும் ஆமே.  19 

 

 

உலகமது ஒத்துமண் ஒத்து உயர் காற்றை

அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும்

நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச்

செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே.  20 

 

 

பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன்

பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன்

பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப்

பரிசறிந்து அந்நிலம் பாரிக்குமாறே.  21 

 

 

அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும்

பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்

தந்த உலகெங்கும் தானே பாராபரன்

வந்து படைக்கின்ற மாண்பது வாமே.  22 

 

 

முத்தண்ட ஈரண்ட மேமுடி ஆயினும்

அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும்

அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி

மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே.  23 

 

 

ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச்

சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும்

ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன்

ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே.  24 

 

 

அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன்

பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்

தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும்

தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே.  25 

 

 

உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ

நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன்

பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே

புலம்முழு பொன்னிற மாகிநின் றானே.  26 

 

 

பராபர னாகிப் பல்லூழிகள் தோறும்

பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித்

தராபர னாய்நின்ற தன்மை யுணரார்

நிராபர னாகி நிறைந்துநின் றானே.  27 

 

 

போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை

ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்

வேற்றுடல் தானேன்றதுபெருந் தெய்வமாம்

காற்றது ஈசன் கலந்து நின்றானே.  28 

 

 

திகையனைத் தும்சிவ னேஅவ னாகின்

மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே

புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு

முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே.  29 

 

 

அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி

இவன்தான் எனநின்று எளியனும் அல்லன்

சிவன்தான் பலபல சீவனு மாகி

நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே.  30 

 

 

கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற

தலைவனனை நாடுமின் தத்துவ நாதன்

விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப

உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே.  31 

 

 

படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து

நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச்

செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி

அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே.  32 

 

 

ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின

ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி

தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்

வாச மலர்போல் மருவி நின் றானே.  33 

 

 

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை

நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்

தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி

சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே.  34 

 

 

உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்

கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்

வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்

அள்ளற் கடலை அறுத்துநின் றானே.  35 

 

 

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்

கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்

ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்

வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே.  36 

 

 

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்

கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்

பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்

எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே.  37 

 

 

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்

நித்திலச் சோதியன் நீலக் கருமையன்

எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்

சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.  38 

 

 

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்

அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்

மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்

புறம்பல காணினும் போற்றகி லாரே.  39 

 

 

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்

பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்

கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு

எங்குநின் றான்மழை போல்இறை தானே.  40 

 

 

உணர்வது வாயுமே உத்தம மாயும்

உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்

புணர்வது வாயும் புல்லிய தாயும்

உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.  41 

 

 

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்

தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்

தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்

தன்வலி யாலே தடம்கட லாமே.  42 

 

 

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை

ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்குளன்

வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்

தானே அறியும் தவத்தின் அளவே.  43 

 

 

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்

குண்டாலம் காய்த்துக் குதிரை பழுத்தது

உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்

பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே.  44 

 

திருச்சிற்றம்பலம்