பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 17. சூனிய சம்பாஷணை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்

ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்

ஏய பெருமான்இருந்து பொருகின்ற

மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.  1 

 

 

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி

மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை

மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு

ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.  2 

 

 

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்

சாறுபடுவன நான்கு பனையுள

ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை

ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே.  3 

 

 

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

தொழுதுகொண்டு ஓடினார் தோட்டக் குடிகள்

முழுதும் பழுத்தது வாழைக் கனியே.  4 

 

 

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்

செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை

மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்

பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே.  5 

 

 

பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள

கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது

உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு

வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.  6 

 

 

மூவணை ஏரும் உழுவது முக்காணி

தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்

நாஅணைகோலி நடுவில் செறுஉழார்

காலணை கோலிக்களர்உழு வாரே.  7 

 

 

ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள

மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்

பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்

கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.  8 

 

 

பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள

குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள

குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்

பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.  9 

 

 

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள

ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்

காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து

மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே.  10 

 

 

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்

மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது

வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்

தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.  11 

 

 

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி

திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி

வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்

விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.  12 

 

 

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்

கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை

மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்

கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.  13 

 

 

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது

விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்

விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு

விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.  14 

 

 

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்

களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்

களர்உழு வார்கள் களரின் முளைத்த

வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே.  15 

 

 

கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து

ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு

நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை

ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.  16 

 

 

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்

குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ

உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்

முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.  17 

 

 

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்

பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.  18 

 

 

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்

தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்

தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன

மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.  19 

 

 

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்

தெருளாத கன்னி தெளிந்திருந்து ஓத

மலராத பூவின் மணத்தின் மதுவைப்

பிறவாத வண்டு மணமுண்ட வாறே.  20 

 

 

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்

கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி

ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்

வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.  21 

 

 

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு

வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்

பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி

வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.  22 

 

 

பத்துப் பரும்புலி யானை பதினைந்து

வித்தகர் ஐவர் வினோகர் ஈரெண்மர்

அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்

அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே.  23 

 

 

இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே

இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்

இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்

இரண்டு கடாவும் ஒருகடா வாமே.  24 

 

 

ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்

பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்

முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்

நித்தம் பொருது நிரம்பநின் றாரே.  25 

 

 

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்

நாகையும் பூழும் நடுவில் உறைவன

நாகையைக் கூகை நணுகல் உறுதலும்

கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.  26 

 

 

குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்

நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்

உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்

புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.  27 

 

 

காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி

கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்

மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்

மூடு புகாவிடின் மூவணை யாமே.  28 

 

 

கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்

காறையும் நாணும் வளையலும் கண்டவர்

பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்

ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.  29 

 

 

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்

விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்

வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்

ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே.  30 

 

 

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்

திருந்திய மாதர் திருமணப் பட்டார்

பெருந்தவப் பூதம் போலுரு1 வாகும்

இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 31 

 

 

கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்

ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்

சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற

பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே.  32 

 

 

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை

தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்

குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்

தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே.  33 

 

 

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு

நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்

மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்

தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.  34 

 

 

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்

காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்

காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்

கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே.  35 

 

 

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்

கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்

எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.  36 

 

 

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்

குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்

கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட

பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே.  37 

 

 

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்தவன்

எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே

வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது

கொல்லைசெய் நெஞ்சம் குறியறி யாதே.  38 

 

 

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது

குட்டத்து நீரில் குவளை எழுந்தது

விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்

குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.  39 

 

 

ஆறு பறவைகள் ஐந்தகக்து உள்ளன

நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன

ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்

மாறுதல் இன்றி மனைபுக லாமே.  40 

 

 

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்

வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்

கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்

ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே.  41 

 

 

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை

ஆழும் விசும்பினில் அங்கி மழைவளி

தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு

வாழ நினைக்கில தாலய மாமே.  42 

 

 

ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்

சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்

கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்

மால்இங்கன் வைத்தது முன்பின் வழியே.  43 

 

 

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்

கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்

கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்

இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.  44 

 

 

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்

முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்

பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்

மறையொன்று கண்ட துருவம் பொன்னாமே.  45 

 

 

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்

ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது

நாரை படுகின்றாற் போலல்ல நாதனார்

பாரை கிடக்கப் படிகின்ற வாறே.  46 

 

 

கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்

எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி

எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு

ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.  47 

 

 

உழவொன்று வித்து ஒருங்கின காலத்து

எழுமழை பெய்யாது இருநிலச் செவ்வி

தழுவி வினைசென்று தான்பய வாது

வழுவாது போவன் வளர்சடை யோனே.  48 

 

 

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்

ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ

மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்

பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.  49 

 

 

தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு

வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்

நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து

ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.  50 

 

 

முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்

செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன

பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்

நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.  51 

 

 

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி

முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்

கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து

மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.  52 

 

 

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்

தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்

குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்

குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.  53 

 

 

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்

கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்

பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்

கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே.  54 

 

 

நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்

யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை

கூரும் மழைபொழி யாது பொழிபுனல்

தேரின் இந் நீர்மை திடரினில் லாதே.  55 

 

 

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்

மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து

நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்

பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.  56 

 

 

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன

வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்

வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு

வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.  57 

 

 

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்

புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்

விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது

அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.  58 

 

 

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்

விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்

களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்

அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே.  59 

 

 

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை

படைகண்டு மீண்டது பாதி வழியில்

உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்

அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே.  60 

 

 

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்

ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்

நாகமும் எட்டொடு நாலு புரவியும்

பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே.  61 

 

 

பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்

கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்

தூசி மறவன் துணைவழி எய்திடப்

பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.  62 

 

 

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு

கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு

வம்பாய் மலர்ந்ததோர் பூவுண்டப் பூவுக்குள்

வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.  63 

 

 

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்

தாணுவும் மேவித் தகுதலைப் பெய்தது

வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்

காணியும் அங்கே கலக்கின்ற வாறே.  64 

 

 

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது

வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை

திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்

தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.  65 

 

 

போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது

தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை

ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது

மாதர் இருந்ததோர் மண்டலம் தானே.  66 

 

 

கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே

காமுற்று அகத்தி இடுவர் கடைதொறும்

வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி

யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.  67 

 

 

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்

நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்

மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக் 

காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.  68 

 

 

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்

புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்

புலம்பின் அவளொடும் போகம் நுகரும்

புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.  69 

 

 

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது

வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்

வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை

ஆணி கலங்கில் அதுஇது வாமே.  70 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
View Details
பதஞ்சலி
View Details
வேப்பிலைக்கட்டிச் சித்தர்
View Details