அ௫ளியவர் : திருமூலர்
திருமுறை : பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 1
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 2
பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்
தரனாய்த் தனாதென வாறுஅறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே. 3
திருச்சிற்றம்பலம்