அ௫ளியவர் : திருமூலர்
திருமுறை : பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியிலென்
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 1
தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 2
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே. 3
வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலென்
கான்நின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்
தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்
நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 4
ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்
கானத்து உழுவை கலந்து வளைக்கிலென்
ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த
ஞானத்து உழவினை நான்உழு வேனே. 5
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்
பாடது நந்தி பரிசறி வார்க்கே. 6
திருச்சிற்றம்பலம்