பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 12. சொரூப உதயம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பரம குரவன் பரம்எங்கு மாகித்

திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று

நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்

அரிய துரியத்து அணைந்துநின் றானே.  1 

 

 

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்

அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்

நிலத்திடை வானிடை நீண்டகன் றானை

வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.  2 

 

 

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்

எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்

தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை

பொங்கிநின் றான்புவ னாபதி தானே.  3 

 

 

சமயச் சுவடும் தனையறி யாமல்

கமையற்ற காமாதி காரணம் எட்டும்

திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்

அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே.  4 

 

 

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு

ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்

சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற

ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே.  5 

 

 

உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்

கருவன்றி யேநின்று தான்கரு வாகும்

மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்

குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.  6 

 

 

உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி

உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்

உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்

உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே.  7 

 

 

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்

பரஞ்சோதி என்னுள் படிந்ததன் பின்னைப்

பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்

பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.  8 

 

 

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி

அரியன உற்பலம் ஆமாறு போல

மருவிய சத்தியாதி நான்கும் மதித்த

சொரூபக்குரவன் சுகோதயத் தானே.  9 

 

 

உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தன்

கரையற்ற சத்தியாதி காணில் அகார

மருவுற்று உகாரம் மகாரம தாக

உரையற்ற கா (தா)ரத்தில் உள்ளொளி யாமே.  10 

 

 

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து

முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்

புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து

கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.  11 

 

 

ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்

போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே

ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை

நாமாம் முதல்வனும் நான்என லாமே.  12 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

உக்கிர பாண்டியன் பிறப்பு
View Details
அமர்நீதி நாயனார்
View Details
பத்திரனுக்குப் பலகையிடல்
View Details