பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 09. ஆகாசப் பேறு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை

உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை

உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை

உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே.  1 

 

 

பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்

குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்

பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்

அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.  2 

 

 

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்

பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை

உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது

கொண்ட குறியைக் குலைத்தது தானே.  3 

 

 

பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே

பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி

அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு

உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே.  4 

 

 

அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்

பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்

அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள்

பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே.  5 

 

 

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து

ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்

ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்

ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே.  6 

 

 

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க

உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது

குயில்கொண்ட பேதை குலாவி உலாவி

வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே.  7 

 

 

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து

அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி

நணுகிய மின்னொளி சோதி வெளியைப்

பணியின் அமுதம் பருகலும் ஆமே.  8 

 

 

புறத்துளா காசம் புவனம் உலகம்

அகத்துளா காசம்எம் ஆதி அறிவு

சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி

சகத்துளா காசம் தானம்ச மாதியே.  9 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

இளையான்குடி மாற நாயனார்
View Details
கணம்புல்ல நாயனார்
View Details
குண்டோதரனுக்கு உண்டியிடல்
View Details