பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 08.4 பொற்பதிக் கூத்து

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்

அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்

ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்

தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.  1 

 

 

அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்

அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்

அடி ஆர்பவரே அடியவர் ஆமால்

அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே.  2 

 

 

அடங்காத என்னை அடக்கி அடிவைத்து

இடம்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு

நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்

படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே.  3 

 

 

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்

செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்

சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை

இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.  4 

 

 

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்

பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்

சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை

ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே.  5 

 

 

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்

தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்

செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்

அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே.  6 

 

 

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்

வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்

ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த

நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.  7 

 

 

காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்

கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி

நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி

நாளுற அம்பலத் தேயாடும் நாதனே.  8 

 

 

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்

சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு

ஏறும் சுழுனை இவைசிவ பூமியே.  9 

 

 

பூதல மேருப் புறத்தான தெக்கணம்

ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்

பாதி மதியோன் பயில்திரு அம்பலம்

ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பன்றிக் குட்டிகளைப் பாலூற்றிக் காப்பாற்றல்
View Details
நமிநந்தியடிகள்
View Details
இடங்கழி நாயனார்
View Details