பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 08.3 சுந்தரக் கூத்து

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்

உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்

கண்டம் கரியான் கருணை திருவுருக்

கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.  1 

 

 

கொடுகொட்டி பாண்டரங் கோடுசங் காரம்

நடம் எட்டோ டு ஐந்துஆறு நாடியுள் நாடும்

திடம்உற்று ஏழும்தேவ தாருவாம் தில்லை

வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே.  2 

 

 

பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்

பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்

பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்

பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே.  3 

 

 

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்

தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்

சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்

பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.  4 

 

 

ஆனத்தி யாடிபின் நவக் கூத்தாடிக்

கானத்தி யாடிக் கருத்தில் தரித்தாடி

மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா

ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.  5 

 

 

சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்

முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்

சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்

சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே.  6 

 

 

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்

தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும்

தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்

ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே.  7 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பன்றிக் குட்டிகளைப் பாலூற்றிக் காப்பாற்றல்
View Details
காலாங்கி நாதர்
View Details
இளையான்குடி மாற நாயனார்
View Details