பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 08.2 சிவானந்தக் கூத்து

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்

தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்

ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு

ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.  1 

 

 

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்

ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்

ஆனந்தம் ஆக அகில சராசரம்

ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே.  2 

 

 

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்

அளியார் சிவகாமி யாகும் சமயக்

களியார் பரமும் கருத்துறை யந்தக்

தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.  3 

 

 

ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்

ஆன நடமாடி ஐங்கரு மத்தாகம்

ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே

தேன்மொழி பாகன் திருநட மாடுமே.  4 

 

 

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட

மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட

தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து

ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.  5 

 

 

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்

கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்

பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட

நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே.  6 

 

 

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்

வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்

ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்

போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.  7 

 

 

தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்

மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்

தாபதர் சத்தர் சமயம் சராசரம்

யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.  8 

 

திருச்சிற்றம்பலம்