பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 07. அதிசூக்கும பஞ்சாக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச்

சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை

அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.  1 

 

 

செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்

அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு

துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை

நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.  2 

 

 

அங்கமும் ஆகம வேதமது ஓதினும்

எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது

சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்

அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.  3 

 

 

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே

விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை

எழுத்துஅறி வோம்என்று உரைப்பர்கள் ஏதர்

எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.  4 

 

திருச்சிற்றம்பலம்