பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 01. குருமட தரிசனம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

பலியும் அவியும் பரந்து புகையும்

ஒலியும் எம் ஈசன் தனக்கென்றே உள்கிக்

குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்

தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.  1 

 

 

இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை

அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின்

அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும்

அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே.  2 

 

 

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்

கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி

தேட அரியன் சிறப்பிலி எம்இறை

ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே.  3 

 

 

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்

இயம்புவன் சித்தக் குகையும் இடமும்

இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்

இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே.  4 

 

 

முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம்

அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி

அகம்பர மாதனம் எண்எண் கிரியை

சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.  5 

 

 

அகமுக மாம்பீடம் ஆதார மாகும்

சகமுக மாம்சத்தி யாதன மாகும்

செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும்

அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.  6 

 

 

மாயை இரண்டும் மறைக்க மறைவுறும்

காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே

தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள்

ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே.  7 

 

திருச்சிற்றம்பலம்