பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 32. ஒன்பான் அவத்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன்

நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன்

பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன்

பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.  1 

 

 

நவமாம் அவத்தை நனவாதி பற்றிற்

பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்

தவமான சத்திய ஞானப் பொதுவிற்

றுவமார் துரியஞ் சொருபம தாமே.  2 

 

 

சிவமான சிந்தையிற் சீவன் சிதைய

பவமான மும்மலம் பாறிப் பறிய

நவமான அந்தத்தின் நற்சிவ போதந்

தவமான மவையாகித் தானல்ல வாகுமே.  3 

 

 

முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந்

தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள

பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத்

தன்செய்த வாண்டவன் றான்சிறந் தானே.  4 

 

 

உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம்

பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி

அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும்

இகந்தன வல்வினை யோடறுத் தானே.  5 

 

 

நலம்பல காலந் தொகுத்தன நீளங்

குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்

பலம்பல பன்னிரு கால நினையும்

நிலம்பல வாறினன் நீர்மையன் றானே.  6 

 

 

ஆதி பராபர மாகும் பராபரை

சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்

ஓதுங் கமைமாயே யோரிரண் டோர்முத்தி

நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.  7 

 

 

தேராத சிந்தை தெளியத் தெளிவித்து

வேறாத நரக சுவர்க்கமும் மேதினி

ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான்

வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே.  8 

 

 

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி

நன்பாற் பயிலு நவதத் துவமாதி

ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச்

செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.  9 

திருச்சிற்றம்பலம்