பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்

துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு

மதிக்கும் குபேரன் வடதிசை யீசன்

நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே.  1 

 

 

ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும்

மருங்கிய மாயா புரியத னுள்ளே

சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே

ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே.  2 

 

 

மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்

விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர்

எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற்

பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.  3 

 

 

ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு

நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்

கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்

வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.  4 

 

 

திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும்

வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை

வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து

முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே.  5 

 

 

ஏழுஞ் சகளம் இயம்பு கடந்தெட்டில்

வாழும் பரமென் றதுகடந் தொன்பதில்

ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில்

தாழ்வது வான தனித்தன்மை தானே.  6 

 

 

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்

நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள்

செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள்

அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே  7 

 

 

புரியும் உலகினிற் பூண்டவெட் டானை

திரியுங் களிற்றொடு தேவர் குழாமும்

எரியு மழையும் இயங்கும் வெளியும்

பரியுமா காசத்திற் பற்றது தானே.  8 

 

 

ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல்

ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு

சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்

பூவின்றிச் சூடான் புரிசடை யோனே.  9 

 

 

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து

நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்

வென்று மிருந்து விகிர்தனை நாடுவர்

சென்றும் இருந்தும் திருவடை யோரே.  10

 

திருச்சிற்றம்பலம்