பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 27. முப்பாழ்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்

காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்

காரிய காரண வாதனை கண்டறும்

சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.  1 

 

 

மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்

சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்

ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்

தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.  2 

 

 

எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்

பதியெனும் நந்தி பதமது கூடக்

கதியெனப் பாழைக் கடந்து அந்தக் கற்பனை

உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.  3 

 

 

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை

அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்

அரிய பரம்பரம் என்றே துதிக்கும்

அருநிலம் என்பதை யார்அறி வாரே.  4 

 

 

ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டு

வேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்

ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோ

தேறாச் சிவாய நமவெனத் தேறிலே.  5 

 

 

உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்

உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்

பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை

உள்ளமும் இல்லை உருவில்லை தானே.  6 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

விறன்மிண்ட நாயனார்
View Details
படையுடன் சோழனை மடுவில் வீழ்த்தல்
View Details
மானக்கஞ்சாற நாயனார்
View Details