பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம்

தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே 

நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின்

சொற்பத மாகும் தொந்தத் தசியே.  1 

 

 

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி

தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி

வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின்

இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.  2 

 

 

தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே

அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு

அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து

உந்து முறையில் சிவமுன்வைத்து ஓதிடே.  3 

 

 

வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே.  4 

 

 

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்

அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்

நம்புறு சாந்தியில் நண்ணும்அவ் வாக்கியம்

உம்பர் உரைதொந்தத் தசிவாசி யாமே.  5 

 

 

ஆகிய அச்சோயம் தேவதத் தன்இடத்து

ஆகிய வைவிட்டால் காயம் உபாதானம்

ஏகிய தொந்தத் தசியென்ப மெய்யறிவு

ஆகிய சீவன் பரசிவன் ஆமே.  6 

 

 

தாமதம் காமியம் ஆகித் தகுகுண

மாமலம் மூன்றும் அகார உகாரத்தோடு

ஆம்அறும் மவ்வும் அவ் வாய்உடல் மூன்றில்

தாமாம் துரியமும் தொந்தத் தசியதே.  7 

 

திருச்சிற்றம்பலம்