பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 26. சிவாதித்தன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்

சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால்

ஒன்றும் இருசுட ராம்அரு ணோதயம்

துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.  1 

 

 

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்

அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்

விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து

அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.  2 

 

 

தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும்

தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்

தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன்

தானே வெளியொளி தானிருட் டாமே.  3 

 

 

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும்

வையம் புனல்அனல் மாருதம் வானகம்

சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்

ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.  4 

திருச்சிற்றம்பலம்