பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 25. ஞானாதித்தன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து

அந்த அபரம் பரநாத மாகியே

வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து

உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.  1 

 

 

உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்

தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்

வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு

உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.  2 

 

 

தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும்

மூவர் பிரான்என முன்னொரு காலத்து

நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும்

மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.  3 

 

 

பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை

மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு

செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்

கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே.  4 

 

 

தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க

அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்

கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்

நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.  5 

 

 

நேரறி வாக நிரம்பிய பேரொளி

போரறி யாது புவனங்கள் போய்வரும்

தேரறி யாத திசையொளி யாயிடும்

ஆரறி வாரிது நாயக மாமே.  6 

 

 

மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்

கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும்

சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும்

நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.  7 

 

 

நாபிக்கண் நாசிநயன நடுவினும்

தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்

தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்

மூவரு மாக உணர்ந்திருந் தாரே.  8 

 

திருச்சிற்றம்பலம்