பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 22. ஆதித்த நிலை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்

மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்

எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி

தஞ்சுட ராக வணங்கும் தவமே.  1 

 

 

பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம்

புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன்

இகலற ஏழுல கும்உற வோங்கும்

பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.  2 

 

 

ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்

சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும்

வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்

ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.  3 

 

 

தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும்

தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும்

தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்

தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.  4 

 

 

வலையமுக் கோணம் வட்டம் அறுகோணம்

துலையிரு வட்டம் துய்ய விதழ்எட்டில்

அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம்

மலைவற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.  5 

 

 

ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில்

சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம்

கேத முறுங்கேணி சூரியன் எட்டில்

சோதிதன் நீட்டில் சோடசம் தானே.  6 

 

 

ஆதித்த னோடே அவனி இருண்டது

பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது

சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற

வேதப் பொருளை விளங்குகி லீரே.  7 

 

 

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி

யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்

நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்

ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.  8 

 

 

மண்ணை இடந்துஅதின் கீழொடும் ஆதித்தன் 

விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்

கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்

எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.  9 

 

 

பாரை இடந்து பகலோன் வரும்வழி

யாரும் அறியார் அருங்கடை நூலவர்

தீரன் இருந்த திருமலை சூழ்என்பர்

ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.  10 

 

திருச்சிற்றம்பலம்