முதல்-திருமுறை

100 நீடலர்சோதி வெண்பிறையோடு

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : பரங்குன்றம்

திருச்சிற்றம்பலம்

 

நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை

சூடலன்அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்

ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்

பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.  1 

 

அங்கமொராறும் அருமறைநான்கும் அருள்செய்து

பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்

திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி

பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.  2 

 

நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றை

சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய

ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்

பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.  3 

 

வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்

குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்

தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்

நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.  4 

 

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்

துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை

பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை

உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.  5 

 

கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்

தொடைநவில்கின்ற வில்லினன்அந்திச் சுடுகானில்

புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்

படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.  6 

 

அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்

எயில்படஎய்த எம்மிறைமேய இடம்போலும்

மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்

பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.  7 

 

மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்

பத்தினதிண்தோள் இருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்

சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று

நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.  8 

 

முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி

உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்

சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி

பந்தியல்அங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.  9 

 

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து

மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல

பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்

தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.  10 

 

தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்

படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்

தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி

விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே. 11

 

திருச்சிற்றம்பலம்