பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 10. அருள் ஒளி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்

அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்

அருளின் பெருமை அறியார் செறியார்

அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே.  1 

 

 

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி

ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி

பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில்

ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.  2 

 

 

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக்

கூடிய வாறே குறியாக் குறிதந்தென்

ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே.  3 

 

 

உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்

பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி

அத்தனை நீயென்று அடிவைத்தான் பேர்நந்தி

கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.  4 

 

 

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்

விளக்கினை முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.  5 

 

 

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா

ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்

ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள

ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே.  6 

 

 

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி

நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி

அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த

திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே.  7 

 

 

அருளது என்ற அகலிடம் ஒன்றும்

பொருளது என்ற புகலிடம் ஒன்றும்

மருளது நீங்க மனம்புகுந் தானைத்

தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே.  8 

 

 

கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை

வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும்

பாறணி யும்உடல் வீழவிட் டாருயிர்

தேறணியோம்இது செப்பவல் லீரே.  9 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கழற்சிங்க நாயனார்
View Details
சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்
View Details
நின்றசீர் நெடுமாற நாயனார்
View Details