பத்தாம்-திருமுறை

7ம் தந்திரம் - 06. ஞான லிங்கம்(உணர்வுச் சிவம்)

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

உருவும் அருவும் உருவோடு அருவும்

மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும்

குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும்

தருவென நல்கும் சதாசிவன் தானே.  1 

 

 

நாலான கீழது உருவம் நடுநிற்க

மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண்

நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால்

பாலாம் இவையாம் பரசிவன் தானே.  2 

 

 

தேவர் பிரானைத் திசைமுக நாதனை

நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை

ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி

யாவர் பிரானடி அண்ணலும் ஆமே.  3 

 

 

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற

ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற

காண்டகை யானொடும் கன்னி உணரினும்

மூண்டகை மாறினும் ஒன்றது வாமே.  4 

 

 

ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்

சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்

நீதியுள் மாதெய்வம் நின்மலன் எம்இறை

பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.  5 

 

 

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே

சுத்த சிவபதம் தோயாத தூவொளி

அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்

ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.  6 

 

 

கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்

எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும்

பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே

திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே.  7 

 

 

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்

முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம்

சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை

உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே.  8 

 

 

சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி

ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச்

சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச்

சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.  9 

 

 

சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி

சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும்

சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை

சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.  10 

 

திருச்சிற்றம்பலம்